வீணை தனம்மாள் 150

கர்நாடக சங்கீத உலகில் "பாணி'க்கு ஒரு தனி மதிப்பு உண்டு.  அதிலும் வீணை தனம்மாள் பாணி என்பதை மிக உயர்வாகக் குறிப்பிடுவதுண்டு.
வீணை தனம்மாள் 150

கர்நாடக சங்கீத உலகில் "பாணி'க்கு ஒரு தனி மதிப்பு உண்டு.  அதிலும் வீணை தனம்மாள் பாணி என்பதை மிக உயர்வாகக் குறிப்பிடுவதுண்டு. "தான் உண்டு, தன் இசை உண்டு' என்று இசையுடன் மட்டுமே வாழ்ந்த பெண்மணி அவர்.

அவருடைய 150ஆவது பிறந்த தினத்தை நான்கு நாட்களுக்கு இசையும், பேச்சுமாக அமர்க்களமாக நடத்திவிட்டனர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த கிரீஷும், பாடகி சௌம்யாவும், அவருடைய இசைத்துறை நண்பர்களும்.  

வீணை தனம்மாள் வாழ்ந்த காலத்தில் இப்போதைய இளம் இசைக் கலைஞர்கள் அவரைச் சந்தித்திருக்க வாய்ப்பில்லைதான்.  ஆனால் அவருடைய ஆளுமை பற்றித் தெரிந்த அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த பிருந்தா-முக்தா-டி.சங்கரன் ஆகியோர் அவ்வப்போது சிநேகிதர்களிடம் பேசியவை அவர்களுடைய மாணவ-மாணவிகள் மூலம்தான் நமக்குத் தெரியக் கிடைக்கின்றன.

நான்கு நாட்களும் வீணை தனம்மாள் வழி அல்லது பாணி பற்றி பரத் சுந்தர், சௌம்யா, டி. சங்கரனின் மகன் யாதவ மூர்த்தி, ஸ்ரீராம் பரசுராம், சித்ரவீணை ரவி கிரண், அனுராதா ஸ்ரீராம், கீரிஷ், பாலாம்மாவின் பேரன் அனிருத் நைட் எல்லோரும் பேசியதிலிருந்து சாரத்தை மட்டும் கவனித்தாலே, பிரமிப்பாகத்தான் இருக்கிறது.  

முதலாவது அந்தக் குடும்பத்தினருக்குத் தெரிந்த கீர்த்தனைகளின் எண்ணிக்கை.  ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று சொல்கிறார்கள்.  அதில் கர்நாடக இசை மூவர், தஞ்சை நால்வர் கிருதிகள், ஏராளமான தமிழ்க் கீர்த்தனைகள், இதெல்லாம் போக, இந்துஸ்தானி இசையிலும் நல்ல பரிச்சயம் அவர்களுக்கு இருந்திருக்கிறது! முத்துசாமி தீட்சிதர் கிருதிகள் சிலவற்றை அவரது குடும்பத்தினர் மட்டுமே வழிவழியாகப் பாடி வந்திருக்கிறார்கள்.  அதே போன்று, தியாகராஜரின் கிருதிகளை அவர்கள் கையாளும் முறையே வித்தியாசமாக இருக்கும்.  அவர்கள் பாணியில் பாடும்போது, அதன் மதிப்பே தனியாகத் தெரியும்.  

வீணை தனம்மாள் வாசித்த ஒலிப்பதிவுகள் மிக மிகக் குறைவு. அப்படியும் அந்த வாசிப்பில் இருக்கும் புனிதம் அல்லது சுத்தம் நன்கு புலப்படும். சுருதி சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம் இருக்கும்.  தம்பூரா அல்லது மிருதங்கம் இல்லாமலே வாசிப்பாராம். "சுருதியும் லயமும் மனதுக்குள்ளேயே ஓட வேண்டும்' என்பாராம்.  அவர் பாட்டில் எந்தவித அனாவசியமும் இருக்காது. அவரிடமிருந்து கற்ற அவர் குடும்பத்தைச் சேர்ந்த பிருந்தா-முக்தா-டி. சங்கரன் எல்லோரும் அதைக் கட்டிக் காத்திருக்கிறார்கள்.  அதுதான் அவர்களுக்குப் பெருமை. 

அவர் குடும்பத்தைச் சேர்ந்த பாலாம்மா என்று கொண்டாடப்படும் பாலசரசுவதி, இசையிலும் தேர்ந்தவர்.  பாடிக்கொண்டே  ஆடுவது அவர் விஷயத்தில் சாத்தியமாயிருந்தது.  (ஒரு முறை யாரோ வீணை தனம்மாளைத் தேடிக்கொண்டு வந்தபோது, சிறு வயதில் பாலாம்மா தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பதில் சொல்ல,  "யார் அது என்னப் பத்திக் கேட்டு வந்திருக்கிறவர் கிட்ட தன்னப் பத்திச் சொல்றது?'' என்று மாடியிலிருந்து குரல் வந்ததாம். "இருக்கட்டும். பாலாவின் பாட்டின்னு  உங்களைச் சொல்ல ஒரு நாள் வரும்!'' என்று நகைச்சுவையாகச் சொன்னாராம் பாலாம்மா.)  சத்யஜித் ரே தயாரித்த "பாலா' குறும்படத்திலிருந்து ஒரு துண்டு காண்பித்தார்கள்.

டி.விசுவநாதன் என்ற "விசுவா' தனம்மாள் பாணியை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று பரப்பியவர்களில் முக்கியமானவர்.  அவர் பாடுவதையும், குழல் வாசிப்பதையும், பாடிக் கொண்டே வாசிப்பதையும் ஸ்ரீராம் பரசுராம் குறிப்பிட்டார். அதே போல டி. ரங்கநாதனின் மிருதங்க வாசிப்பில் தனி ஆவர்த்தனத்தைச் சொல்லியே ஆக வேண்டும்'' என்றார். 

தன்னுடைய செயல்-விளக்க உரையில், பிருந்தா-முக்தா-விசுவா-பாலா ஆகியோர் தனம்மாள் பாணியை மேலெடுத்துச் சென்றனர் என்று சொன்னார்.

பிருந்தாம்மா வந்தவருக்கெல்லாம் சொல்லிக் கொடுத்துவிடவில்லை.

யாருக்குத் தகுதி இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே கற்றுக்கொடுத்தார். (இதையே நிறைவு நாள் அன்று பிருந்தாம்மா பேரன் கிரீஷ் பேசும்போது, "எனக்குப் பாட்டுச் சொல்லிக்கொடுக்கவே மாட்டேன்னுட்டாங்க.  உனக்கு அனுசுவரமே வரமாட்டேங்கறதுடா!'' என்று மறுத்துவிட்டதைக் குறிப்பிட்டார்.).

விசுவா ஒரு ஜான் ஹிக்கின்ஸை உருவாக்கினார்.  மாத்யூ ஆலனைப் பாட வைத்தார்.  விசுவா விவரமான நொடெஷன் அவசியம் என்றார். அதனால்தான் அயல் நாட்டினரும் நம் கர்நாடக இசையை எளிதாகக் கற்றுக்கொள்ள முடிந்தது'' என்றார். 

தனம்மாள் பாணி என்றால் ஏதோ எல்லோரும் அவர் மாதிரியே பாடுவார்கள் என்று அர்த்தமில்லை.  அப்படியென்றால் "க்ளோனிங்' என்பார்களே அது மாதிரி ஆகிவிடும்.  ஆனால் அப்படி அல்ல!  முக்தாம்மா நிறையப் பேருக்குச் சொல்லிக்கொடுத்தார் என்பதும் கலந்துரையாடலில் வெளிப்பட்டது.

டி.சங்கரன் வானொலியில் நாதசுர மேதை டி.என்.ராஜரத்தினத்தைப் பேட்டி கண்டதை ஒலி பரப்பினார்கள். அதில் டி.என்.ஆர். சொல்கிறார். " தஞ்சாவூர்தான் கலைகளின் ஆதாரமான இடம்'' என்று. இதை மீண்டும் சங்கரன் கேட்க, "ஆமாம், அதுதான் உண்மை'' என்று உறுதியாகச் சொல்கிறார் டி.என்.ஆர். தனம்மாள் பாணி என்று ரவிகிரண் சித்ரவீணையில் வடிவமே வரைந்து காண்பித்தார்.     

நிறைவு நாளன்று டி. சங்கரனின் புதல்வர் யாதவ் மூர்த்தி பேசும்போது, "கல்வி ஞானத்தைவிட, கேள்வி ஞானத்துக்குத்தான் மதிப்பு அதிகம்'' என்று தனம்மாள் சொல்லிவந்ததைக் குறிப்பிட்டார்.  "சங்கீதத்தைப் பத்திப் பேசறாங்களாமே?'' என்று தன் தந்தை சங்கரனிடம் கிண்டலாகக் கேட்பாராம் "ஒரு தடவை அவருக்கு சங்கீதம் பற்றிப் பேசவே பிடிக்காதாம்.  அவர் வீணை வாசிப்பார்.  சில சமயம் பாடிக்கொண்டே வீணை வாசிப்பார்'' என்றார். "இந்த பாணியை ரசிக்க அதிகபட்ச ரிஃபைன்மென்ட் (தெளிவு) தேவை. அதை எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியாது என்பதாலேயே தனம்மாள் மற்றும் அவர் குடும்பத்தினர் அதன் மூலம் செல்வத்தைச் சேர்க்கவில்லை. அதனால் அவர் சந்ததியினர் அந்த் தெளிவுக்கும், பரிசுத்தத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்'' என்றார். 

டி.எம். கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சி எல்லோரையும் நெகிழ வைத்தது என்று "ஸ்ருதி' ராம்நாராயண் சொன்னார்.  என்னால் கேட்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தமாயிருந்தது...  தர்மபுரி சுப்பராயர் தனம்மாளை முன்வைத்து மூன்று ஜாவளிகள் உருவாக்கியிருக்கிறார் என்பது தனம்மாளின் பெருமைக்குச் சான்று.  அந்தக் காலத்தில் பெண்கள் பல்லவி பாடுவதை ஆண்கள் எதிர்த்தார்கள்.

தன் பேத்திகள் பிருந்தாவையும் முக்தாவையும் தாளத்தில் மன்னரான காஞ்சிபுரம் நாயனா பிள்ளையிடம் ஏழு வருடம் குருகுல வாசமாக சங்கீதம் கற்றுக்கொள்ள அனுப்பிவைத்தார் தனம்மாள்.  பெங்களூர் நாகரத்னம்மாவுக்கு அவர் அளித்த ஆதரவு மகத்தானது.  உடல் நிலை மிக மோசமாக இருந்த சமயத்தில் கூட, ரயிலில் தஞ்சாவூருக்குப் பயணம் செய்து, திருவையாற்றில் தியாகராஜர் ஆராதனைக்குப் போய் வீணை வாசித்துவிட்டு வந்தார் என்றால், நாகரத்னம்மாள் மீது அவர் எத்தனை அன்பு வைத்திருக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.  தனம்மாள் மறைந்த போது "இரவு ஒரு மணிக்கு சங்கீதத்தின் உயிர் நாடி நின்றுவிட்டது' என்று டி. சங்கரன் தன் நூலில் தனம்மாளின் மறைவைப் பதிவு செய்திருப்பதை யாதவ மூர்த்தி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

"தான் வாசிக்கும் வாத்தியத்தின் பெயரையும் தன் பெயரோடு சேர்த்துக்கொண்டு  "வீணை தனம்மாள்'  என்ற புகழ் நிலைத்து நிற்க, அது அவருக்கு மட்டுமே பொருத்தமாக அமைந்தது'' என்றார் ரவி கிரண். 

"சம்ப்ரதாயா' அமைப்பில் தனம்மாள் பாணியை அறிந்துகொள்ள ஆறு மாதப் பயிற்சிக்காக அனுமதி கிடைத்த போது மிகவும் மகிழ்ந்து போனதைச் சொன்னார் அனுராதா ஸ்ரீராம்.  பிருந்தாவும் விசுவாவும் சொல்லிக்கொடுத்ததை நினைவுகூர்ந்தார். சில கீர்த்தனைகளை அவர்கள் பாணியிலேயே பாடிக் காட்டி ரசிகர்களை அதில் இழைய வைத்தார்.  (அவர் வெஸ்லியன் பல்கலைக்கழகத்துக்கு விசுவாவிடம் படிக்கப் போக, அங்கேதான் ஸ்ரீராம் பரசுராமைச் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டார்!)

பிருந்தா தனக்குக் கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ள நினைத்தார். எம்.எஸ். அவர்களை அழைத்து, "உனக்குத்தான் சங்கர நேத்ராலயாவில் எல்லோரையும் தெரியுமே?  என் கண் ஆப்ரேஷனுக்குக் கொஞ்சம் உதவி செய்!'' என்றாராம்.  எம்.எஸ். உடனே, "கண் ஆபரேஷன் செய்து கொள்ளலாம்.  அது முடிந்து நீங்கள் என் வீட்டில் வந்து பத்து நாட்கள் இருங்கள்.  நான் உங்களுக்கு சமைத்துப் போடுகிறேன்!'' என்றாராம்.  பிருந்தாவோ, "என்னவோ சொல்லிட்டேன்.  இப்போதான் பேரன் கிரீஷ் கொஞ்சம் பாட்டுக் கத்துக்க ஆரம்பிச்சிருக்கான்.  நான் அங்கே வந்துட்டா அவன் படிக்கிறது நின்னு போயிடும்'' என்றாராம்.  இதை கிரீஷ் சொன்னபோது அவருக்கே குரல் தழுதழுத்துவிட்டது.  தனம்மாள் 1857-இல் பிறந்து, 1938-இல் மறைந்தவர்.  அவர் வாழ்ந்த காலத்தில் ஆவணப் பதிவு பற்றி எல்லாம் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.  அதனால் அவர் பாணியைப் பற்றி அவர் குடும்பத்தினரும், அவர் வழியில் வந்த சீடர்களும்தான் நமக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த சங்கீதத்தை, பாணியை ரசிக்க ஞானம் வேண்டும்.  இந்த சங்கீதத்தைக் கேட்பவர்கள் உயர்ந்த ரசிகர்கள் என்பதுதான் இந்த நாலு நாள் கருத்தரங்க-இசை அமர்வுகள் நமக்குத் தெரிவிக்கிற சாரம்.        
- சாருகேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com