அம்மா - டி.வி.எஸ்.குடும்ப மருமகள் அம்புஜம் கிருஷ்ணா பற்றி மகள் ராதா பார்த்தசாரதி

அம்மாவுக்கு இரண்டு வயதானபோது தன் அம்மாவை இழந்தார். அதனால் அம்மாவை அவரின் பாட்டிதான் வளர்த்தார்.
அம்மா - டி.வி.எஸ்.குடும்ப மருமகள் அம்புஜம் கிருஷ்ணா பற்றி மகள் ராதா பார்த்தசாரதி

பிரபலங்கள் தங்கள் தாயார் குறித்து எழுதும் தொடர் 

அம்மாவுக்கு இரண்டு வயதானபோது தன் அம்மாவை இழந்தார். அதனால் அம்மாவை அவரின் பாட்டிதான் வளர்த்தார். பாட்டிக்கு ஐந்து மகன்கள். "ஐந்து பேரில் பிள்ளைகளில் ஒருவரை உன் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்கிறேன்'' என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். "யாரைப் பண்ணிக்கொள்ளப் போகிறாய்?'' என்று என் அம்மாவைக் கேட்டார்களாம். அப்போது அவர் "கிச்சா (கிருஷ்ணா)வைப் பண்ணிக்கொள்கிறேன்!'' என்று சொன்னாராம். அப்படித்தான் என் தந்தை டி.எஸ். கிருஷ்ணா அம்மா அம்புஜத்தை மணந்தார்.
எங்கள் அத்தை டாக்டர் சௌந்தரம் ராமச்சந்திரனின் கணவர் மிக இளம் வயதிலேயே காலமானார் (காந்தி கிராமத்தில் தொண்டாற்றியவர் டாக்டர் சௌந்தரம் ராமச்சந்திரன்). அப்பா அத்தையை தில்லிக்குப் போய் மருத்துவம் படிக்கச் சொன்னார். அம்மாவுக்குக் கல்யாணத்தின்போது பதினைந்தே வயதுதான்! அப்பா டி.எஸ். கிருஷ்ணா ஜெனரல் மோட்டார்ஸில் ஆட்டோமொபைல் படிப்பு படிக்க அமெரிக்கா போய்விட்டார். அதனால் தில்லிக்கு அத்தையுடன் அம்மாவையும் அனுப்பிவிட்டார். அம்மா தில்லியில் லேடி இர்வின் கல்லூரியில் பி.எஸ்ஸி. ஹோம் சயின்ஸ் படித்தார். பின்னர் மதுரைக்கு திரும்ப வந்துவிட்டார். 
அம்மா எங்களை தென்னாட்டில் உள்ள அத்தனை கோயில்களுக்கும் கூட்டிக்கொண்டு போயிருக்கிறார். எத்தனை கோயில்கள் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை! அங்கே கோயில்களில் தரும் தீர்த்தம் சுவையாக இருக்கும். அதை ருசித்திருக்கிறோம்.
அம்மா பெயின்டிங் பண்ணுவார் என்று பலருக்கும் தெரியாது. ஆனால் இப்போது ஒன்றும் இங்கே இல்லை என்பதுதான் வருத்தம். சமஸ்கிருதம், ஹிந்தி எல்லாம் சொல்லித் தருவார். அது மட்டுமல்ல, டேபிள் டென்னிஸ், செஸ் ஆட்டங்களும் கற்றுத் தருவார்! ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் சென்னை வரும்போது, எங்கேயோ இருக்கிற நீச்சல் குளத்துக்கு அழைத்துச் சென்று எங்களுக்கு நீச்சல் பழக்கியிருக்கிறார். அவர்களில் நான் ஒருத்தி மட்டுமே பெண்! நான் சொல்வது சுமார் 70 வருடங்களுக்கு முன்னால்! தீப்பெட்டி லேபிள், காசுகள், தபால் தலைகள் சேகரிக்க எல்லாரையும் ஊக்குவிப்பார். 
அம்புஜம் கிருஷ்ணா என்றால் சங்கீத உலகில் அவர் ஒரு பாடலாசிரியர் - சாகித்ய கர்த்தா - என்றுதான் எல்லோருக்கும் தெரியும். அவர் எப்படி இவற்றை எழுத ஆரம்பித்தார் தெரியுமா? அப்போது அவருக்கு 35 வயது இருக்கும். ஒரு தடவை திருவையாற்றில் தியாகராஜ சுவாமியின் சமாதிக்குப் போய்விட்டு வந்தார். அவர் எழுதிய பாட்டு "வேழமுகத்தரசே, விரைந்தழைத்தேன்'. மதுரை மீனாட்சி மீது "என் தாய் நீ அன்றோ?' சரஸ்வதி மீது, "நாத ரூபிணி' என்று பின்னர் பிரவாகமாக அவர் எழுத ஆரம்பித்தார். எல்லா கச்சேரிகளிலும் கடைசி வரை இருந்து கேட்டுவிட்டு, முடிந்ததும் போய் கலைஞர்களைப் பாராட்டிவிட்டு வருவார். (சகோதரர் சுரேஷ் கிருஷ்ணா, வித்வான் பிச்சுமணி அய்யரிடம் வீணை கற்றுக்கொண்டார். நன்றாக வீணை வாசிப்பார். ஆனால் பிஸினஸில் மும்மரமாக ஈடுபட்ட பிறகு இசைக்கு இடம் இல்லாமல் போய்விட்டது!) 
அம்மா குட்டிக் குட்டித் தாள்கள் வைத்திருப்பார். பென்சில் வைத்திருப்பார். எப்போதெல்லாம் மனசில் பாட்டுத் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் எழுதி வைத்துவிடுவார். தலையணைக்கு அடியில் கூட சின்னச் சின்ன பேப்பர் வைத்திருப்பார். திடீரென்று பாடல் உதித்துவிட்டால் எழுதி வைத்துக் கொள்ளுவார்! ஒரு தடவை திருநாராயணபுரத்துக்குப் பெருமாளை சேவிக்கப் போனார். ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது. உற்சவர் செல்லப்பிள்ளையைப் பின்னால் இருந்துதான் தரிசனம் செய்ய முடிந்தது. அப்போது எழுதிய கீர்த்தனைதான் "சற்றே திரும்பிப் பாராய், செல்லப்பிள்ளாய்'. 
ஹிந்தி பஜன்ஸ் தானாகவே வந்துகொண்டிருக்கும் அம்மாவுக்கு. தெலுங்கில்கூட கீர்த்தனை எழுதியிருக்கிறார். கிருஷ்ணர் பேரில் ஒரு பாடல் எழுத வேண்டும் என்ற துறுதுறுப்பு எழுந்தது. ஆனால் எழுத ஆரம்பிக்க முடியவில்லை. அன்றைக்கு அப்பா தில்லியிலிருந்து வரும்போது ஒரு மார்பிள் கிருஷ்ணர் பொம்மை வாங்கிக்கொண்டு வந்தார். பாட்டு தானாகவே உதித்துவிட்டது. "பாட்டும் வந்துவிட்டது, அவரும் வந்துவிட்டார்'' என்று கிருஷ்ணர் வந்ததைக் குறிப்பிட்டுச் சொன்னார்.
எங்கள் மீது அலாதி பிரியம் வைத்திருந்தார். சிறியவர்கள் என்று இல்லை, யாராவது எதாவது செய்திருந்தால் அந்த சாதனையை உடனே பாராட்டிவிடுவார். பாட்டுக் கச்சேரி மட்டுமில்லை, நடனம் பார்த்தால் அதில் அபிநயத்தில், உள்ளுக்குள் இருந்து வெளிப்படும் நயத்தை ரசித்துச் சொல்வார்.
மதுரையில் அதிக சங்கீத வித்வான்கள் இருக்கவில்லை. கணேச பாகவதர் என்று ஒருவர் இருந்தார். சத்குரு சங்கீத சமாஜம் மட்டும் இருந்தது. வித்வான் சங்கரசிவத்தைக் கூட்டிக்கொண்டு வந்து வகுப்புகள் ஆரம்பித்தார். இரண்டு பெண்களை அனுப்பி, யார் யார் வீட்டிலிருந்தெல்லாம் சங்கீதம் கற்றுக்கொள்ள வருகிறார்களோ அவர்களை எல்லாம் வகுப்புக்கு அனுப்பி வைப்பார். அப்போது சேஷகோபாலன் அங்கே இருந்தார். அவரை சங்கரசிவத்திடம் சங்கீதம் கற்றுக்கொள்ள வைத்தார். இப்போது சிகாகோவில் இருக்கும் மதுரை எஸ். சுந்தர்கூட அங்கேதான் இசை கற்றுக்கொண்டார். (இப்போது மூன்று நாள் கீத் - அம்புஜம் நிகழ்ச்சியை அங்கே அம்மாவின் பாடல்களை வைத்து நடத்தினார். அதை நார்த் கரோலீனாவில் நடத்தும்படி அவருக்கு அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள்.).
அம்மாவைப் போல "சிம்ப்பிள் பர்சனை'ப் பார்க்க முடியாது. ஆபரணங்கள் அணிய மாட்டார். படாடோபம் என்பது துளியும் கிடையாது. யாரையும் விட்டுக்கொடுத்துப் பேச மாட்டார். எளிமை என்றால் அப்படி ஓர் எளிமை. அதற்கென்று ஒரே கட்டுப் பெட்டியும் அல்ல. பர்த்டே பார்ட்டி எல்லாம் கொடுப்பது உண்டு. அந்த அளவுக்கு நாகரிகமாகவும் இருந்திருக்கிறார். உறவினர் - பாடகி அனந்தலட்சுமி சடகோபன் ஒருமுறை வானொலியில் கிருஷ்ண ஜெயந்தி சமயத்தில் ஒரு நிகழ்ச்சி வழங்கியபோது, "மன்னுபுகழ் கோசலை தன்' பாடலைப் பாடினார். அதைக் கேட்ட அம்மா, "கிருஷ்ணர் பேரில் அல்லவா நீ பாடியிருக்க வேண்டும்?'' என்று சொல்லிவிட்டு, "தேவகி தன் குலக்கொழுந்தாய் குவலயத்தில் அவதரித்தாய்' பாடலை எழுதினார்.
குருவாயூர் போயிருந்த போது, "குருவாயூர் அப்பனே அப்பன்' பாடலின் பல்லவி வந்துவிட்டது. அனுபல்லவி, சரணம்? ஒருவர் தன் பையனிடம் "நாராயணா என்று சொல்லு'' என்று சொல்வதைக் கேட்டவுடன், "நாராயணா என்று நாவார அழைப்போர்க்கு' என்று அனுபல்லவி தோன்றிவிட்டது! 
அம்மா பாடல்கள் எழுதியிருந்தாலும், அவற்றைக் கச்சேரிகளில் பாட பல முன்னணி வித்வான்களும் முன்வரக் காரணம் செம்மங்குடி சீனிவாசய்யர்தான். விவி சடகோபன், முசிறி, எஸ்.ராமநாதன், சேஷகோபாலன், அனந்தலக்ஷ்மி சடகோபன், கே.ஆர். கேதாரநாதன் எல்லோரும் பின்னர் பாட, அவரே காரணம். "நீங்கள்தாம் முயற்சி எடுத்துக்கொண்டு இந்தக் கீர்த்தனைகளை எல்லோரும் கேட்கும்படி செய்ய வேண்டும்!'' என்றார் அப்பாவிடம். இப்போது அம்மாவின் பாடல்களின் 6-ஆவது தொகுதி தயாராகிவிட்டது! 
அம்மாவுடன் எம்.எல்.வி. வந்து தங்கியிருக்கிறார். எம்.எஸ்.அம்மா நல்ல சிநேகிதி. நிறையப் பேர் வந்து போகும் இடமாக இருந்தது எங்கள் வீடு. சாதி, மதம் எல்லாம் கடந்த வாழ்க்கை அவருடையது. அத்தை திடீரென்று நாற்பது ஐம்பது பேரை சாப்பாட்டுக்கு அழைத்து வந்துவிடுவார். அவர்களில் எல்லா வகுப்பினரும் இருப்பார்கள். எல்லோரையும் அம்மா உபசரிப்பார். 
எங்கள் குடும்பத்தில் யாருக்கும் இசை வழிவழியாக வந்ததில்லை;கலைகள் வந்ததில்லை. மதமோ பக்தியோ ஒரு பெரிய விஷயமாக இருந்ததில்லை. ஆனால் அம்மாவுக்கு இந்த எல்லாவற்றிலும் பற்று வைத்துப் பாடி வணங்க முடிந்தது. அவர் மிகவும் விரும்பியது என்ன தெரியுமா? 
ராமர் தரிசனம்!
- சாருகேசி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com