கதை கதையாம் காரணமாம்!

கதை கதையாம் காரணமாம்!

சென்னையில் படித்து பட்டம் பெற்ற கீதா ராமானுஜம், பெங்களூரு பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

சென்னையில் படித்து பட்டம் பெற்ற கீதா ராமானுஜம், பெங்களூரு பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது வகுப்பில் சரித்திரப் பாடம் நடத்தும்போது, மாணவர்கள் மனதில் சுவாரசியமாக பாடங்கள் பதிய வேண்டுமென்பதற்காக கதை வடிவில் சம்பவங்களை விவரிப்பாராம். இதனால் இவர் வகுப்பில் மாணவர்களுக்கு எழும் உற்சாகமும், சிரிப்பும் சக ஆசிரியர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பாடம் நடத்தும் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்துவதாக இவர் மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.
நிர்வாகம் கீதா ராமாமனுஜத்தை அழைத்து விளக்கம் கேட்டபோது, தற்போதைய பாட நடைமுறை மிகவும் பழைமையாக இருப்பதாகவும், இதனால் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், மனதில் சுலபமாகப் பதியவும் பாடங்களைக் கதை வடிவில் சொல்வதாகக் கூறினார். ஆனால் நிர்வாகம் இவரது விளக்கத்தை ஏற்கவில்லை. வழக்கமாக பாடம் நடத்தும் முறையை மாற்ற அனுமதியில்லை என்று கூறியதோடு, அவரை நூலகராக இடமாற்றம் செய்தது.
சில ஆண்டுகள் அதே பள்ளியில் நூலகராக பணியாற்றினாலும், கதை சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் பணியிலிருந்து விலகி பெங்களூரில் "கதாலயா' என்ற அமைப்பை உருவாக்கி, ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் கதை சொல்பவர்களை அமர்த்தி கல்வி நிலையங்கள், கலாசார நிகழ்ச்சிகளின்போது மக்களையும், மாணவர்களையும் கவரும் வகையில் கதை சொல்லும் நிகழ்ச்சிகளைத் துவக்கினார். இதற்கு உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த 20 ஆண்டுகளில் பெங்களூரு மட்டுமின்றி இந்தியாவில் 12 நகரங்களிலும், அயர்லாந்து, கொலம்பியா ஆகிய நாடுகளிலும் "கதாலயா' தன் கிளைகளைத் துவக்கியுள்ளது. 
இது குறித்து கீதா ராமானும் விளக்குகிறார்:
"கதை சொல்ல வேண்டும் என்ற குறிக்கோள் ஏதும் இருந்ததில்லை. எதிர்பாராமல் ஏற்பட்ட சம்பவம்தான் இது. வீட்டில் என் குடும்பத்தினர் உறவினர்கள் ஒன்று கூடும்போது, பழைய சம்பவங்களைப் பற்றி பேசுவார்கள். அதைக் கேட்பதற்கே சுவாரசியமாக இருக்கும். நாளடைவில் கதை சொல்லும் திறமை எனக்குள் இருப்பதை உணர்ந்தேன். வாய்ப்பும் கிடைக்கும்போது அதை வெளிப்படுத்த நினைத்தேன்.
நான் சரித்திர ஆசிரியராக பணியாற்றியபோது சோதனை முயற்சியாக சம்பவங்களைக் கதை வடிவில் கூறியது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் இது சக ஆசிரியர்களுக்கு பிடிக்கவில்லை. புகார் செய்து பணிமாற்றம் செய்ய வைத்தனர். சுவாரசியமின்றி சலிப்பேற்படுத்தும் வகையில் பாடம் நடத்த எனக்கு விருப்பமில்லை. இப்படித்தான் பாடம் நடத்த வேண்டுமென்ற நடைமுறையை மாற்ற விரும்பினேன். இதனால் எனக்கேற்பட்ட பணிமாற்றத்தை ஒரு தடையாகக் கருதவில்லை. நூலகராகப் பணியாற்றியபோது கதை சொல்லும் ஆர்வம் மேலும் அதிகமாயிற்று.
வேலையை ராஜிநாமா செய்தேன். "கதாலயா' என்ற அமைப்பை உருவாக்கி கதை சொல்லும் நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினேன். இந்த நிகழ்ச்சிகளுக்கு சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நிகழ்ச்சிகளில் ஒரு மணி நேர அவர்களைக் கட்டிப்போட்டாற் போல் உட்கார வைத்து கதை கேட்க வைப்பது சுலபமாக இருந்தது.
இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச கதை சொல்லும் நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக "லிம்கா புக் ஆஃப் ரெக்காட்ஸ்' என் சாதனையைப் பதிவு செய்தது. இதுதவிர, இங்கிலாந்தில் ஸ்காட்டிஷ் ஸ்டோரி டெல்லிங் சென்டர், பிரேசிலில் நடந்த சர்வதேச கதை சொல்லும் நிகழ்ச்சி, ஸ்வீடன் ஸ்டோரிவுட் பெஸ்டிவல், போலந்து உலக கதை சொல்லும் நிகழ்ச்சி, அமெரிக்காவில் சர்வதேச கதை சொல்லும் மையம் என பல நாடுகளில் பங்கேற்றுள்ளேன். மேலும் இந்தியன் ஸ்டோரி டெல்லிங் நெட்வொர்க்கிலும் கூட்டு அமைப்பாளராக உள்ளேன்.
யார் வேண்டுமானாலும் கதை சொல்லலாம். நன்கு கிரகிக்கக் கூடிய சக்தியும், வெளிப்படுத்தும் திறமையும் இருந்தால் போதும். என்னைப் போலவே பல ஆசிரியர்களுக்கு தற்போதைய பாடம் நடத்தும் முறை பிடிக்கவில்லை என்பதை அறிந்தேன். மாற்றம் தேவை எனப் பலரும் கருதுகின்றனர். வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பம் காரணமாக பாரம்பரிய வாழ்க்கை முறைகளை இழந்து வருகிறோம். எதைச் செய்தாலும் அவசரம் காட்டுகின்றனர். 
எல்லாரும் பேசுகிறார்களே தவிர, காது கொடுத்து கேட்பதில்லை. எதிரில் இருப்பவர்கள் பேசுவதைக் கேட்டால்தான் உறவுகள் வலுப்படும். கதை சொல்வதன் மூலம் இந்த மாற்றத்தைக் கொண்டு வர முடியுமென்று நம்புகிறேன்.
20 ஆண்டுகளாக, கேட்பவர்களுக்கு சலிப்புத் தட்டாத வகையில் கதை சொல்லி வருகிறேன். ஒரே கதையை ஒவ்வொரு முறையும் சொல்லும்போது சில மாற்றங்களைச் சேர்ப்பதுண்டு. "கதாலயா'வை உலக அளவில் மேலும் விரிவுபடுத்த வேண்டுமென்பதே என் நோக்கம். கதைக் கேட்பவர்களுக்கும் நாளுக்கு நாள் "மெச்சூரிட்டி' வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அதற்கேற்ப கதைகளைச் சுவாரசியமாகவும் நகைச்சுவையுடன் புதுமையாக உருவாக்க வேண்டியதும் அவசியம்'' என்றார் கீதா ராமானுஜம்.
- அ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com