அம்மா! எழுத்தாளர் கே.பாரதி 

அம்மா என்பவர் ஒரு தனி மனுஷி அல்ல. அவரே ஒரு நிறுவனம். அம்மா வழி சொந்தங்களின் அருகாமை ஒவ்வொரு குழந்தைக்கும் உறுதி
அம்மா! எழுத்தாளர் கே.பாரதி 

பிரபலங்கள் தங்கள் தாயார் குறித்து எழுதும் தொடர்
அம்மா என்பவர் ஒரு தனி மனுஷி அல்ல. அவரே ஒரு நிறுவனம். அம்மா வழி சொந்தங்களின் அருகாமை ஒவ்வொரு குழந்தைக்கும் உறுதி செய்யப்பட்ட ஒன்று. அந்த வகையில் அம்மா, அம்மா வழி பாட்டி, தாத்தா, பெரியம்மாக்கள், மாமன்மார்கள் என்று எல்லோரும் சேர்ந்த ஒரு கூட்டுக் குடும்பத்தின் சூழலை ஏற்படுத்தியிருந்தார் அம்மா சூடாமணி. 
அம்மா வழி தாத்தா அரக்கோணத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி தேவராஜ அய்யங்கார் - "காந்தி தேவராஜன்' என்று அழைக்கப்படுபவர். அவர் மூன்று முறை சிறைக்குச் சென்றவர். பாட்டி செல்லம்மாள் ஒரு மகத்தான ஆளுமை. விடுமுறைக்குக் குவியும் அத்தனை பேரன், பேத்திகளையும் அநாயாசமாக சமாளிப்பார். தையல் இலையில் உணவு பரிமாறுவார். கொல்லையில் இருக்கும் பாதாம் மரத்தின் இலைகளைக் கொண்டு அவரே தைத்த இலைகள். ஊறுகாய், வற்றல், அப்பளம் என்று ஜாடி ஜாடியாக தயார் செய்து வைத்திருப்பார். 
பாட்டியின் கர்ஜனைக் குரலுக்கு எல்லாருமே கட்டுப்படுவோம். எழுதப் படிக்கத் தெரிந்த பாட்டி நிறைய கதைகள் வாசிப்பார். வாசித்ததை பைண்ட் செய்து பாதுகாத்து வைத்திருப்பார். விடுமுறைக்குப் போகும் எங்கள் எல்லோருக்கும் அந்த புத்தகங்கள்தான் பொழுதுபோக்கு. 
பாட்டி கொலு வைக்கிறார் என்றால் எங்கள் எல்லோருக்கும் நிறைய வேலைகள் இருக்கும். மலை கட்டுவது, கோலம் போடுவது (வெறும் கோலமல்ல. அன்னம், மயில், யானை என்று தத்ரூபமாக வரைவார்). அவர் செய்வது எல்லாமே எங்கள் கண் முன்னால் காட்சிப் படிவம் போல் படிந்துவிட்ட பாலபாடங்கள். 
பாட்டியைப் போலவே என் அம்மாவிற்கும் கதைகள் வாசிப்பதில் ஆர்வமுண்டு. வாசித்ததை அக்கம்பக்கத்து வீட்டு பெண்களிடம் விவாதிப்பார். இன்று எனக்குள் இலக்கிய ஆர்வமும், ஓவிய ஆர்வமும் ஓரளவு இருப்பதற்குக் காரணம் என் அம்மாவும், பாட்டியும்தான். 
என்னுடைய அப்பா கண்ணன், காஞ்சிபுரம் அரசாங்க மருத்துவமனையில் நிர்வாகத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நான்கு குழந்தைகள் மற்றும் பெற்றோரைப் பராமரிக்கும் நெருக்கடியான வாழ்க்கைதான். ஆனாலும் முனகாமல் ஈடுகொடுத்தார் அம்மா. 
கேஸ் அடுப்பு, குக்கர், மிக்ஸி என்று எதுவும் இல்லாத காலம் அது. விருந்தினர் வருகை கூட முன்கூட்டியே தெரிந்து கொள்ள தொலைபேசி கிடையாது. எப்போதும் திடீர் வருகைதான். ஆனாலும் அம்மா சமைத்துப் போட சலித்துக் கொண்டதே கிடையாது. 
அம்மா, அப்பா இரண்டு பேருமே பரோபகாரிகள். சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து உறவினர்களும், தெரிந்தவர்களும் மருத்துவ உதவிக்காக வீடு தேடி வருவார்கள். ஒன்றிரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டியிருக்கும். வீட்டின் ஒரு பகுதி நிரந்தரமாக இப்படி வருபவர்கள் தங்குவதற்கென்றே இருக்கும். 
பள்ளிக்கூடத்திலிருந்து வரும் நான் இந்தப் புதிய முகங்களைப் பார்த்து அவ்வப்போது திகைத்து நிற்பேன். இன்னாருக்கு இன்னார் இன்ன உறவு என்று என் அம்மா அறிமுகம் செய்ய முயற்சி செய்வார். "இரண்டு நாளா, நாலு நாளா'' என்ற கேள்வி ஒன்றுதான் அப்போதெல்லாம் என் மனதில் தோன்றும். 
மிகப் பாதுகாப்பான குழந்தைப் பருவம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோதே ஒரு சின்ன அதிர்வைப் போல் அந்தச் செய்தி என்னைத் தாக்கியது. எனக்கு அப்போது பத்து வயது இருக்கும். நான் பிறந்தபோது இரண்டாவதும் பெண்ணாகப் பிறந்த காரணத்தினால் என் அம்மா வருத்தப்பட்டதாக உறவினர் ஒருவர் பேசியதைக் கேட்க நேர்ந்தது. 
ஏற்கெனவே அம்மாவுக்கு என்னை அவ்வளவாக பிடிக்காது என்ற எண்ணம் எனக்கு இருந்தது. எல்லா பெண்களையும் போல குழந்தைகளுக்கு தலைசீவி சோறு ஊட்டும்போதே தன் குடும்பம், தன் சொந்தம் அத்தனை பேரைப் பற்றியும் அருமை, பெருமைகளைச் சொல்லி உறவை வளர்ப்பதைதான் என் அம்மாவும் செய்திருக்கிறார். 
இங்கே நம்மில் பலருக்கும் அப்பா வழி சொந்தங்களை விட அம்மா வழி சொந்தங்கள்தானே மிக அணுக்கமாக தோன்றுகிறது. இதை ஒவ்வொரு பெண்ணும் திட்டமிட்டே செய்வதாக எனக்குத் தோன்றும். புகுந்த வீட்டின் கசப்பான அனுபவங்கள் அவர்களை அப்படி ஆக்கிவிடுவதாகவும் இதனைப் புரிந்து கொள்ளலாம். 
அம்மாவின் மன உணர்வுக்கு விரோதமாக நான் என் அப்பாவின் சொந்தங்களுடன் மிகவும் பாசமாக இருந்தேன். இதை என் அம்மாவும் நுட்பமாக கவனித்து வைத்திருந்தார். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் படிப்பில் மந்தமாக இருந்ததும் அவருக்கு மிகுந்த சலிப்பை ஏற்படுத்தியது. 
என் இளைய சகோதரர்களுக்கு அம்மா கொடுத்த முக்கியத்துவமும் அவ்வப்போது என் கோபத்தைத் தூண்டியது. வளரிளம் பருவத்தில் அம்மாவை எதிர்ப்பதும், கேள்வி கேட்பதும், நிறைய அடிவாங்குவதுமாக என் போராட்டம் தொடங்கியது. 
""மூன்று நாள் ஒதுங்கி உட்கார வேண்டும்'' என்று அம்மா சொன்னபோது அப்படியே பின்பற்றினாள் அக்கா. என் முறை வந்தபோது கடுமையாக எதிர்த்தேன். ""பிள்ளையாருக்கு ஆகாது. தேள் கொட்டும்'' என்றார் அம்மா. அதேபோல் நிஜமாகவே தேள் கொட்டியது. "இப்போது பார்த்தாயா? இனிமேலாவது நான் சொல்வதைக் கேள்!'' என்று மிரட்டினார். 
""கொட்டட்டும்! எத்தனை தேள் வேண்டுமானாலும் கொட்டட்டும். நான் அவமானப்படத் தயாராக இல்லை'' என்று நானும் எதிர்த்துப் பேசினேன். நிலைமை முற்றியபோது என் அப்பா தலையிட்டார். என் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு போட்டு என்னை ஆறுதல்படுத்தினார். அன்றோடு அந்த பழக்கத்திற்கு வீடு தலை முழுகியது.
கல்லூரிப் படிப்பும், மாதர் சங்கத் தொடர்புகளும், இலக்கிய வட்டாரமுமாக என் உலகம் விரிந்தபோது வாழ்க்கை குறித்த, மனிதர்கள் குறித்த என் புரிதல் மறுபரிசீலனைக்கு உள்ளானது. முக்கியமாக அம்மாவைப் பற்றிய என்னுடைய விமர்சனம் தண்ணீர் தெளித்தது போல் அடங்கிப் போனது. 
அம்மாவை ஒரு தனிநபராக, சமூகம் சார்ந்த ஒரு மனுஷியாக தள்ளி நிறுத்தி புரிந்துகொள்ள முடிந்தது. அவர் வாழ்ந்த காலமும், அவருடைய மதிப்பீடுகளும் பெண்ணுக்கான மதிப்பை அவருக்கு உணர்த்தவில்லை. தான் கஷ்டப்பட்டதுபோல் தன் வயிற்றில் பிறந்த பெண் பிறவியும் கஷ்டப்படும் என்று உறுதியாக நம்பியதால் தன் இனத்தைத் தானே வெறுக்கும் எத்தனையோ அம்மாக்களில் அவரும் ஒருவர்.
வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை நான் எடுத்தபோது முதுகில் தட்டிக் கொடுத்து தைரிய மூட்டும் ஆளுமையாக என் அம்மா இல்லையே என்று ஏங்கியிருக்கிறேன். அம்மா அப்படி இருந்ததற்கு அவருடைய சூழ்நிலையும் ஒரு காரணம். அப்போதெல்லாம் சோர்வு ஆட்கொண்ட எனக்கு வாழ்க்கையைப் புரிய வைத்தார் என் அம்மாவுக்கு சமமானவரான பத்மினி கோபாலன். 
"எல்லோருக்குமே அவரவர் பெற்றோர் மீது ஏதேனும் ஒரு குறை இருக்கத்தான் செய்யும். இந்த சராசரித்தனத்திலிருந்து நீ எப்போது விடுபடப் போகிறாய் என்பதை யோசி. நமக்கு என்ன கிடைத்தது என்று ஏங்கினால் குறைகள்தான் மிஞ்சும். நாம் என்ன செய்யப் போகிறோம் என்று யோசி. எல்லோருக்கும் உதவி செய்கிற ஸ்தானத்தில் உன்னை நிறுத்திக்கொள். அப்போது உனக்குப் புலம்புவதற்கு ஒன்றும் இருக்காது'' என்றார் அவர். 
என் வாழ்நாளில் மறக்க முடியாத வார்த்தைகள் அவை. என் உணர்வுக் கொந்தளிப்புகளை மடைமாற்றம் செய்த மந்திரச் சொற்கள். இப்போது எண்ணிப் பார்க்கிறபோது அம்மாவின் ஆளுமையில் சில அபூர்வத் தெறிப்புகள் என்னைப் பெருமிதம் கொள்ள வைக்கிறது. 
வயதுப் பெண்களை பாதுகாக்க முடியவில்லை என்று மற்ற அம்மாக்கள் புலம்பிக் கொண்டிருந்த காலத்தில் எங்கள் அம்மா அப்படி ஒரு கவலையை ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை. பூரண நம்பிக்கையுடன் ஒரு சுதந்திரவெளியை ஏற்படுத்தியிருந்தார். 
என் அப்பாவுடன் பணியாற்றிய பல பெண்கள் சகஜமாக எங்கள் வீட்டிற்கு சில சமயம் தனியாகவும், சில சமயம் குடும்பத்துடனும் வருவதும், தங்குவதும் வேறு எந்த வீட்டிலும் நான் பார்க்காத ஒரு காட்சி. என் அம்மாவின் பெருந்தன்மை என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. 
என் பள்ளித் தோழி ஜோதிக்கு என் அம்மா காமாட்சி அம்மனுக்கு நிகரானவள். அவள் வரும்போதெல்லாம் முகத்தைப் பார்த்தே அவள் பசியுடன் இருப்பதைத் தெரிந்துகொண்டு உணவளிப்பார் அம்மா. தெருவில் போகும் கீரைக்காரி முதல் தயிர்க்காரி வரை அத்தனை பேரும் அவருக்கு உறவு. அவர்களுக்குத் தலைவலி என்றால் உள்ளேபோய் மாத்திரையும், காபியும் கொண்டுவந்து தருவார். 
ஜாதி வேற்றுமைகளைக் கடந்து எங்கள் வீட்டுச் சூழலை எல்லோருக்குமானதாக ஆக்கிவைத்ததில் அம்மாவுக்குப் பெரிய பங்கிருந்தது. 
ஆரம்பகால கசப்பான அனுபவங்களை ஒதுக்கிவிட்டு புகுந்த வீட்டு மனிதர்களையும் அனுசரிக்கத் தொடங்கினார் அம்மா. ஆண்டுகள் செல்லச் செல்ல புகுந்த வீடு, பிறந்த வீடு இரண்டுக்கும் ஒரு சமன்பாட்டை அவர் கண்டுவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. 
அன்று முதல் இன்று வரை சுவையாக சமைக்கக் கூடியவர், விருந்தினர்களை அன்புடன் உபசரிக்கக்கூடியவர் என்பதையே தன் அடையாளமாக தக்க வைத்துக் கொண்டு சுற்றமும், நட்பும் பேணி வருகிறார் அம்மா. 
அம்மாவை தராசில் நிறுத்திப் பார்க்கும் அதேசமயம் நான் எப்படிப்பட்ட அம்மா என்ற கேள்வியும் என்னுள் எழாமல் இல்லை. என் மகளுக்கும் என்னைப் பற்றி நிறைய விமர்சனங்கள் கண்டிப்பாக இருக்கும். ஆனாலும் என்ன? வாசிப்பும், மறுவாசிப்பும் காலம் முழுக்கத் தொடரக் கூடியது. 
அம்மா என்றால் என் சொந்த அம்மா தவிர எனக்கு நிறைய அம்மாக்கள். பத்மினி கோபாலன், ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன் (கல்கி), விஜயா ராஜேந்திரன் ஆகியோர். இவர்களிடமிருந்து நான் கற்றதும், பெற்றதும் நிறைய. 
எனக்கும் நிறைய மகள்கள், மகன்கள்!! இப்படிச் சொல்வதற்கு பெருந்தன்மையுடன் என்னை அனுமதித்திருக்கிறாள் என் அருமை மகள் சக்தி.
பி.கு: இந்தக் கட்டுரையின் முன் படிவத்தை அம்மாவுக்கு வாசிக்கக் கொடுத்தேன். நிதானமாகப் படித்துவிட்டு "உண்மையைத்தான் எழுதியிருக்கே. இதை எனக்குத் தருகிறாயா! இன்னும் ஒருமுறை ரசித்துப் படிக்கணும்'' என்றார் அம்மா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com