சமையல்...சமையல்...

கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி, உளுந்து எல்லாவற்றையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.

வெஜிடபிள் ரவா இட்லி

தேவையான பொருட்கள் : 
வறுத்த வெள்ளை ரவை - ஒரு கிண்ணம்
தயிர் - ஒரு கிண்ணம்
கேரட் - 2 
பீன்ஸ் - 5 
தேங்காய் - சிறிதளவு
இஞ்சி - 1 துண்டு 
செய்முறை: ரவை, தயிர் இரண்டையும் உப்பு போட்டு கலந்து  அரை மணி நேரம்  ஊற வைக்கவும். பிறகு, துருவிய கேரட், மிகவும் பொடியாக நறுக்கிய பீன்ஸ், சிறு சிறு பல்லாக நறுக்கிய தேங்காய்,  பொடியாக நறுக்கிய இஞ்சி  அனைத்தையும் ஊறவைத்த ரவை மாவுடன் நன்கு கலந்து கொள்ளவும். பின்பு  இட்லி பாத்திரத்தில் சாதாரணமாக  இட்லி வேகவைப்பது போல்   அனைத்து மாவையும் இட்லிகளாக  வேகவைத்து எடுக்கவும். மிகவும் சுவையான, சத்தான வெஜிடபிள் ரவா இட்லி ரெடி.

சாமை பொங்கல்

தேவையான பொருட்கள் : 
சாமை அரிசி - 1 டம்ளர்
பாசிப்பருப்பு - 1 குழிக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கவும்)
நெய் -  தேவைக்கேற்ப (100 கிராம்)
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை : அரிசி, பருப்பு, இரண்டையும் களைந்து 3 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் 4 விசில்விட்டு குழைய வேக வைக்கவும். பிறகு  வாணலியில் நெய் விட்டு நெய் காய்ந்ததும் மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி தாளித்து கடைசியில் பெருங்காயப்பொடி, கறிவேப்பிலைச் சேர்த்து பொங்கலில் கொட்டி உப்பு சேர்த்து கிளறவும்.  சத்தான சாமை பொங்கல் தயார்.

முடக்கத்தான் தோசை    

 தேவையான பொருட்கள் :
தோசை மாவு - 1 கிண்ணம், 
முடக்கத்தான் கீரை - 2 கைப்பிடி, 
பூண்டு - 5 பற்கள், 
மிளகு - 1 தேக்கரண்டி 
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - சிறிது
செய்முறை: முடக்கத்தான் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் கீரை, பூண்டு, மிளகு, சீரகத்தை எண்ணெய்யில் தனியாக வதக்கி, அரைத்துக் கொள்ளவும். பின்னர், தோசை மாவில் அரைத்த கீரை விழுதைக் கலந்து தோசைகளாக வார்க்கவும். சத்தான முடக்கத்தான் தோசை தயார். 

வல்லாரை பூரி

தேவையான பொருட்கள் :
கோதுமை - 2 கிண்ணம்
வல்லாரை கீரை -  அரை கிண்ணம்
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:  வல்லாரை கீரையை  ஆய்ந்து சுத்தம் செய்து  வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு லேசாக வதக்கிக் கொள்ளவும். பின்னர்,  கீரையை மிக்ஸியில்  இட்டு சிறிது தண்ணீர் விட்டு விழுதாக ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சைச் சாறு, சீரகம், உப்பு, சர்க்கரை, மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையை கோதுமை மாவுடன் சேர்த்து, தண்ணீர் சேர்த்து  பூரி மாவு பதத்திற்கு பிசையவும். பின்னர், பூரி கல்லில் இட்டு தேய்த்து பூரிகளாக எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சுவையான வல்லாரை கீரை பூரி ரெடி.

கேழ்வரகு இட்லி

தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 2 கிண்ணம்
உளுத்தம் பருப்பு - முக்கால் கிண்ணம்
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை : உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும். ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும். கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும். கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன்   அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து,
அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும். (மிகவும் நீர்விட்டு கரைத்துவிட வேண்டாம்.) இதனை குறைந்தது 6 - 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும்.  மாவு புளித்த பின்னர்  இட்லி பாத்திரத்தில் இட்டு சுட்டு எடுக்கவும். சத்தான  கேழ்வரகு இட்லி தயார்.

அடை தோசை

தேவையான பொருட்கள் :
கடலை பருப்பு - ஒரு கிண்ணம்
துவரம் பருப்பு - அரை கிண்ணம்
பச்சரிசி - கால் கிண்ணம்
உளுந்து - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5 (காரத்திற்கு ஏற்ப மாற்றிக் 
கொள்ளலாம்)
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
 செய்முறை: கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி, உளுந்து எல்லாவற்றையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்தவற்றுடன் மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை சிறு சிறு பல்லாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் நறுக்கின தேங்காய், பொடியாக நறுக்கின கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர், தோசை கல்லில் தோசை போன்று  ஊற்றி மேலே எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும். சுவையான அடை தோசை ரெடி.

சுண்டைக்காய் கூட்டு

தேவையான பொருட்கள் :
சுண்டைக்காய் - கால் கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
கடுகு - முக்கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
கல் உப்பு - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - 25 கிராம்
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:  குக்கரில் துவரம் பருப்பை போட்டு மூழ்கும் அளவு  தண்ணீர் விட்டுக் கொள்ளவும். அத்துடன் இரண்டாக நறுக்கி அலசிய சுண்டக்காயைச் சேர்க்கவும். அத்துடன், புளியைச் சேர்த்து மூடி 3 விசில் விடவும். பின்னர், பிரஷர் போனதும் குக்கரை திறந்து அத்துடன்  
மிளகாய் தூள், தேங்காய் விழுது போட்டு கிளறி அரை தேக்கரண்டி சீனி போட்டு கலக்கி விடவும். 2 நிமிடம் கழித்து இறக்கி வைத்து கறிவேப்பிலை போடவும். வாணலியில்  எண்ணெய்விட்டு கடுகு தாளித்து கூட்டில் சேர்க்கவும். சுவையும் மணமும் நிறைந்த சுண்டைக்காய் கூட்டு ரெடி.

தூதுவளை புளிக் குழம்பு

தேவையான பொருட்கள் :
தூதுவளை - 1 கிண்ணம்
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் -10
தக்காளி - 2
பூண்டு - 5 பல்
சிவப்பு மிளகாய் -2
வெந்தயம் - அரை தேக்கரண்டி
வெந்தயத் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: தூதுவளையை முள் நீக்கி, ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். புளியில் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்து வைக்கவும். வெங்காயம், பூண்டை தோல் நீக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் தாளித்து, வெந்தயம் சேர்க்கவும். வெங்காயம், பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்துக் கரையும் வரை வதக்கவும். பிறகு தூதுவளை சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் விடவும். மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும். குறைந்த தணலில் குழம்பு நன்கு கொதிக்கட்டும். கொதித்து கெட்டியானதும், வெந்தயத்தூள் சேர்த்து இறக்கினால் சுவையான தூதுவளை புளிக் குழம்பு ரெடி.
- தவநிதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com