எந்த ஓய்வும் பயணத்துக்கான ஆயத்தம்!

காஸி (Ghazi) தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழி ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சினிமா. இதோ இப்போது அத்தனை கவனம் பெறுகிறது... 
எந்த ஓய்வும் பயணத்துக்கான ஆயத்தம்!

காஸி (Ghazi) தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழி ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சினிமா. இதோ இப்போது அத்தனை கவனம் பெறுகிறது... 

"என் தமிழ் அவ்வளவாக நல்லா இருக்காது... கொஞ்சம் பொறுத்துங்கங்க...' குதூகலமாக வந்து அமர்கிறார் ராணா. "காஸி' படத்துக்கு வந்து விழும் ஒவ்வொரு வாழ்த்துகளிலும் சந்தோஷச் சாரல் பிரதிபலிக்கிறது ராணாவின் ஒவ்வொரு வார்த்தையிலும்...!

"பாகுபலி' படத்துக்குப் பின் என் மீதான எதிர்பார்ப்பு வேறு மாதிரி ஆகி விட்டது. அதனால் எனக்கு நானே ஒரு எல்லையை உருவாக்கி அதைத் தாண்ட தயாராகி வந்தேன். அப்போதுதான் இயக்குநர் சங்கல்ப் ரெட்டியைச் சந்தித்தேன். அவர் சொன்ன கதைக்கு பெரிய இமாலயத் தாண்டல் தேவைப்பட்டது. உடம்பையும், மனசையும் ஒரு சேர போட்டு உழைக்க வேண்டிய கட்டாயம். அதற்குத் தயாராகி இதை சாத்தியமாக்கியிருக்கிறேன். ரொம்ப நல்ல படம் என படப்பிடிப்பின் போதே உணர்ந்தேன். பட ரிலீஸýக்குப் பிறகு, பலரும் அதையேதான் சொல்கிறார்கள். நாசர், அதுல் குர்கனி, டாப்ஸி, ஓம்பூரி சார், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், கேமராமேன் மதி என கூடவே பயணித்த அனைவருக்கும் இந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் சமர்ப்பணம்.'' ராணாவின் குரலில் அத்தனை உற்சாகம்!

ஜாலி, கேலி, கிசுகிசு செய்திகள்தான் ராணாவின் ஸ்பெஷல்... ஆனால் இப்போது அப்படி இல்லை... நல்ல சினிமா, கடும் சிரத்தை என ராணா வேறு மாதிரி இருக்கிறார்....?

இந்தப் பயணம்தான் காரணம். வாழ்க்கையை வேடிக்கை பார்க்கிற மனோபாவம், பக்குவம் எல்லாருக்குள்ளும் நிகழும். ஆனால், அதற்கு முக்கியம்... நமக்குப் பயணிக்கத் தெரிய வேண்டும். அதுதான் அற்புதம். கமர்ஷியல் சினிமாக்கள் ஒரு கட்டம் வரைக்கும்தான். ரொம்ப நேரம் அதிலே பயணம் செய்யும் போது அலுப்பு வரலாம். ஆனால், அப்போது எடுக்கிற ஓய்வு கூட, ஒரு பேருந்து நிறுத்தத்தில் அடுத்த பேருந்துக்காக காத்திருக்கிற மாதிரிதான். ஏனென்றால், எந்த ஓய்வும் நம் பயணத்துக்கான ஆயத்தம்தான். "பாகுபலி' என் முதல் மைல் கல். அவ்வளவு ஈடுபாட்டுடன் உழைத்து முடித்த படம் அது. அதன் பின் மிகப் பெரிய தாண்டல்கள் வேண்டும் என நானே இலக்குகளை உருவாக்கி பயணமானேன். ஒவ்வொரு டைரக்டரும் ஒவ்வொரு விதத்தில் ஸ்பெஷல். ஒருத்தர் புதுப் புது டெக்னிக்கை  ஸ்க்ரீனில் கொண்டுவருவதில் வித்தை காட்டுவார். சிலர் சினிமாவின் தரத்தை உயர்த்த வேண்டும் என  பிடிவாதமாக இருப்பார்கள். இந்த இரண்டும் கலந்து கதை சொன்னார்  சங்கல்ப் ரெட்டி. அதுதான் என் எனர்ஜியை அடுத்த லெவலுக்கு எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறது. இப்படித்தான் நல்ல சினிமாக்களின் பட்டியல் தொடர வேண்டும் என ஆசை வந்திருக்கிறது. 

இனி இப்படித்தான் இருக்குமா... உங்கள் சினிமா பயணம்..?

இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. என் உடம்பை பாருங்க... கட்டுமஸ்தான உடம்பு. எப்படியும் மாற்றி அமைக்கும் லாகவம் தெரியும். அதை வைத்து இனியும் டான்ஸ் ஆடி நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை. இதுதானே டான்ஸ், லவ், காமெடி என கமர்ஷியல் சினிமாக்கள் செய்ய ஏற்ற வயது என்று சொல்லலாம். ஆனால், அப்படியே நடித்து வந்தால், அது எனக்கான பொறுப்பாக இருக்காது. பொறுப்பில்லாமலும் பேச மாட்டேன். காசை போட்டு டிக்கெட் எடுத்து, நான் நடிக்கிற சினிமாவைப் பார்க்க வருகிற ரசிகனை ஏமாற்றுவது மனசாட்சிக்கு விரோதம் இல்லையா? அதுதான் ராத்திரி பகலாக உழைக்கிறேன். சொத்து சேர்க்க வேண்டும் என சினிமா நடித்தால் எனக்குப் பணம் மட்டுமே நிர்பந்தமாகி விடும். நல்ல சினிமாவுக்காக இனி எந்த உழைப்புக்கும் தயாராக வேண்டும் என நினைக்கிறேன். அதுதான் அழகு!

எப்படி இருந்தன "காஸி' பட அனுபவங்கள்...?

போர் சூழல் குறித்து எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் கடலுக்கடியில் நடக்கும் யுத்தம் பற்றித் தெரிந்திருக்கவோ, பார்த்திருக்கவோ முடியாது. அதுதான் பெரிய சவால். நீர்மூழ்கிக் கப்பலில் வேலை செய்கிறவர்கள், "யூஸ் அண்ட் த்ரோ' துணிகள்தான் பயன்படுத்துவார்கள். அதிகபட்சமாக கை மட்டும்தான் கழுவுவார்கள். இந்த மாதிரியான எந்த விஷயமும் தெரிந்திருக்க முடியாது. தண்ணீருக்கு கீழே மட்டுமே முழுக்க முழுக்க காட்சிப்படுத்தி எடுத்திருப்பது பெரிய வேலை. இந்திய சினிமாவில் இது முதல் முறை. கப்பல் படை பற்றி எதுவும் தெரியாமல் இருந்தேன். இந்தப் படத்துக்குப் பிறகு நேவி மீது மரியாதை வந்திருக்கிறது. கடற்படை வீரர்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவும், பெருமைப்படவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இப்போது இந்திய சினிமாவுக்கு முக்கியமான படமாக காஸி வந்திருப்பதில் மகிழ்ச்சி.

தமிழ் சினிமாவில் நடிப்பீர்களா...?

பாலா படத்தில் நடிக்கிறேன். விஷால், ஆர்யா என அது பெரிய டீம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com