கொஞ்சம் பேச்சு  கொஞ்சம் சங்கீதம்!  

திருவல்லிக்கேணி கலாசார மையம் மாதம் தோறும் 108 திவ்ய தேசங்களைப் பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்தி வருவதற்கும், அதற்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதற்கும் என்ன காரணம் என்று
கொஞ்சம் பேச்சு  கொஞ்சம் சங்கீதம்!  

திருவல்லிக்கேணி கலாசார மையம் மாதம் தோறும் 108 திவ்ய தேசங்களைப் பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்தி வருவதற்கும், அதற்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதற்கும் என்ன காரணம் என்று அதன் அமைப்பாளர்களில் ஒருவரான சீனிவாசனிடம் விசாரித்தோம்.  

"கொஞ்சம் பேச்சு  கொஞ்சம் சங்கீதம்'' என்று சுருக்கமாகச் சொன்னார் சீனிவாசன்.  ஆனால் அந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக நிகழ்த்திவரும் டாக்டர் சுதா சேஷய்யனிடமும், கர்நாடக இசைப் பாடகி வசுந்தரா ராஜகோபாலிடமும் கேட்ட போது, அவர்கள் தந்த விவரங்கள், அவர்களின் ஆராய்ச்சியையும் உழைப்பையும் எடுத்துக் காண்பித்தன.  

"ஆழ்வார்கள் பாடிய அதிகபட்ச திவ்ய தேசம் எது' என்று ஒரு நாள் சீனிவாசன் என்னிடம் கேட்டார்.  நான் "ஸ்ரீரங்கம்' என்றேன்.  வைணவ இலக்கியங்களை நன்கு கற்ற சீனிவாசன் ஏன்? இப்படி ஒரு கேள்வி கேட்டார் என்று வியந்தேன்.  சரி, அப்புறம் இதுபற்றிப் பேசலாம் என்று அப்போதைக்கு விட்டுவிட்டார்.  சில நாட்கள் கழித்து "ஆழ்வார்கள் பாடிய திவ்ய தேசங்களின் பட்டியல் வேண்டும்'' என்றார்.  நான் அதைத் தயாரித்துக் கொடுத்தவுடன், கர்நாடக இசைப்பாடகி வசுந்தரா ராஜகோபால் என்னை அழைத்து ரகசியத்தை உடைத்தார். நான் பேச வேண்டும். அவர் பாட வேண்டும்.  இப்படித்தான் இந்தத் தொடர் ஆரம்பமாச்சு.

"உங்கள் பங்குக்கு என்ன தயார் செய்கிறீர்கள் என்று கேட்டபோது, கொஞ்சம் சிரமம்தான்.  ஆனால் சவால் நிறைந்தது.  ஆரம்பத்தில் நாங்கள் இரண்டு பேரும் உட்கார்ந்து பேசி நிகழ்ச்சியை அமைத்துக் கொண்டோம்.  இரண்டு மணி நேர நிகழ்ச்சி   என்பதால், ஆறு திவ்ய தேசங்களாவது அதில் இடம் பெற வேண்டும். 

முக்கியமான, சுவாரசியமான தகவல்களை நான் தந்தாக வேண்டும். கிட்டத்தட்ட எல்லாருக்கும் 108 திவ்ய தேசங்கள் பற்றித் தெரியுமாதலால், நான் ரசிகர்களின் ருசியை மனதில் கொண்டு, சுவாரசியமானவைப் பற்றி மட்டுமே தந்து வருகிறேன்.  உதாரணமாக, திருமய்யம் பற்றிச் சொல்லும்போது, தீரர் சத்தியமூர்த்தி பற்றிக் கொஞ்சம் சொல்வேன்.  திருவல்லிக்கேணி பற்றி வரும்போது, மகாகவி பாரதி பற்றிக் குறிப்பிடுவேன்.  வைணவ இலக்கியங்கள் தவிர, தொடர்புடைய வேறு பல செய்திகளையும் தர வேண்டியிருப்பதால், நிறையவே ஆய்வு தேவைப்படுகிறது'' என்றார் சொற்பொழிவாளரான சுதா சேஷய்யன்.  

"சரி, பாடகி வசுந்தரா ராஜகோபால் என்ன சொல்கிறார்'' என்று கேட்டோம். கனடா நாட்டில் வாழ்ந்தவர், ஐடி துறையில் உயர்பதவி வகித்தவர், கர்நாடக இசை மீது கொண்ட பற்றுதல் காரணமாக தில்லியிலிருந்து சென்னைக்கு வந்தவர் வசுந்தரா. 

"திவ்ய தேச தரிசனம் நிகழ்ச்சியை சென்ற வருடம் மார்ச் மாதம் தொடங்கினோம்.  விளையாட்டுப் போல பத்து மாதங்கள் ஓடிவிட்டன என்பதை இப்போது நினைத்தால் வியப்பாக இருக்கிறது. ரசிகர்களுக்கு இது வித்தியாசமாக இருப்பதால் வரவேற்பு அமோகமாக இருக்கிறது என்று நினைக்கிறோம். இதுவரை 59 திவ்ய தேசங்களை முடித்துவிட்டோம்.  எதைக் கொடுத்தாலும் அமர்க்களமாகப் பேசிவிடுவார் சுதா.  நான் ஒவ்வொரு தேசத்துக்குமான திவ்ய பிரபந்த பாசுரம் தேடி எடுக்க வேண்டும். பாட்டு கிடைப்பதுதான் சிரமம். 

புராணத்தில் பாடல் பாடுவதற்கு ஏற்ற நிகழ்ச்சி இருக்கிறதா என்று பார்ப்பேன். கண்டுபிடித்துவிட்டால், மீட்டருக்குத் தகுந்த மாதிரி ராகம் போட்டு, தாளம் போட்டு பாடுகிற மாதிரி அமைத்துக் கொள்வேன்.  சில சமயம் பொருத்தமான பஜன் பாடலும் சேரும்.  பிரம்ம நாரதீய புராணத்திலிருந்து விஷ்ணு ஸ்தல தர்சன சுலோகம், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் 108 திருப்பதி அந்தாதி, கருடவாகன பண்டிதரின் திவ்ய சூரி சரித்திரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வரதராஜ ஐயங்கார் வரதராஜ பாகவதம் எல்லாவற்றையும் படித்துக் குறித்துக் கொள்வேன்.  

திவ்ய தேசத்து ஷேத்திரம் பற்றிய பாடலை, அதாவது ஒரு கிருதியையும் சேர்த்துக் கொள்வேன்.  இன்னொன்றும் சொல்ல வேண்டும்.  பத்து வருடங்களுக்கு முன், எம்.ஏ. அனந்த பத்மநாபாசாரியார் பாசுரப்படி ராமாயணம் என்ற சொற்பொழிவில் பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் விளக்கத்தைச் சொல்லியதை நினைவுபடுத்திக் கொண்டேன்.  தேவராஜன் சுவாமியும் விளக்கங்கள் தந்திருக்கிறார். இவற்றை எல்லாம் சேர்த்துத்தான் என் பாடல்களைத் தேர்வு செய்கிறேன்'' என்றார். 

திவ்ய தேச விளக்கத் தொடர் சுவாரசியமாக நிகழக் காரணமாக இருக்கும் சுதா சேஷய்யனுக்கும், வசுந்தரா ராஜகோபாலுக்கும் இது ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சியாக அமைந்திருப்பதன் பின்னணியில் உழைப்பும், தேடலும் கூடவே இருக்கின்றன என்பதுதான் உண்மை''.
- சாருகேசி  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com