நீதி என்பது வழக்கின் உண்மை! - வழக்குரைஞர் எஸ். தமிழ்ப்பூங்குயில்மொழி  

கடந்த இருபது ஆண்டுகளாக நீதிமன்றப் படிகளேறிக் கொண்டிருக்கும் ஜெனிஃபர், வழக்கையும் வாழ்க்கையையும் எதிர்கொண்ட விதம்...
நீதி என்பது வழக்கின் உண்மை! - வழக்குரைஞர் எஸ். தமிழ்ப்பூங்குயில்மொழி  

கடந்த இருபது ஆண்டுகளாக நீதிமன்றப் படிகளேறிக் கொண்டிருக்கும் ஜெனிஃபர், வழக்கையும் வாழ்க்கையையும் எதிர்கொண்ட விதம்...
ஜெனிஃபரின் கணவன் சேவியரின் முகத் திரை கிழிக்க, ஏற்கெனவே சேவியருக்கு வழங்கப்பட்டிருந்த முதல் நிலைத் தீர்ப்பாணையை முதலில் ரத்து செய்ய வேண்டும், அதற்கான முயற்சியைத் தொடங்கும் போது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கால தாமதம் ஏற்பட்டிருந்தது. ஆனாலும், நடந்தவைகளை உள்ளது உள்ளபடி குறிப்பிட்டு, மனு தாக்கல் செய்யப்பட்டது. 

முந்தைய தலைமுறையில் குழந்தைகளின் பசிப்பிணி போக்க மருந்து அளவில் கூட ஒருவேளை உணவிற்கும் வழிஇன்றி, வறுமையில் உழன்றவர்கள் இன்றும் நினைவலைகளில் வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். 

"நல்லதங்காள் கஷ்டப்பட்டமாதிரி நான் கஷ்டப்படுகிறேன்' என்று சொன்ன பல தாய்மார்களின் வார்த்தைகள் என் சிறுவயது நினைவுகளில் நீங்கா இடம் பெற்றவைகளில் ஒன்று. இன்றும் கூட அந்தச் சம்பவங்களை நினைக்கும்போது, நல்ல வேளையாக ஜெனிஃபர் நல்லதொரு பணியில் இருந்துவந்ததால் அப்படி ஒரு சிரமம் ஏற்படவில்லை. "கை நிறைய ஊதியம் என்றாலும், கணவனால் ஏற்பட்ட கறையைத் துடைத்தாக வேண்டும், சமுதாயத்திற்காக இல்லாவிட்டாலும் தன் சந்ததியின் முதலெழுத்துக்கு மூலகாரணமான அந்தக் கயவனை கட்டாயம் அடையாளம் காட்ட வேண்டும்' என்ற உறுதி கொண்ட நெஞ்சத்தோடு நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார் ஜெனிஃபர். 

மனு மட்டும் போதுமா? நீதிமன்றத்திற்கு சாட்சியங்களும் சாட்சியும் அவசியமாயிற்றே..! ஜெனிஃபருக்கு எதிராக தீர்ப்பு பெற்றபிறகும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், சேவியரின் சகோதரர் மகன் பிறந்த நாள் விழாவில் தம்பதி சகிதமாக எடுத்துக் கொண்ட புகைப்பட நகல்கள், மகன் பிறந்தபோது மருத்துவமனையில் பிறப்புச் சான்றிதழில் தந்தை என்ற இடத்தில் இடம் பெற்றிருந்த சேவியரின் கையெழுத்து,  இதுபோன்ற இன்னும் சில ஆவணங்கள் அந்தத் தாயின் வசம் இருந்தது.

சட்டத்தை மட்டுமே பார்த்த தனி நீதிபதி, சங்கதிகளையும், சாட்சியங்களையும் ஆராய்ந்து திருப்தி ஏற்படாமல், ஆதாரங்களில் உள்ள உண்மைத் தன்மையை கவனத்தில் கொள்ளாமல், பொருண்மைகளைப் புறக்கணித்து ஜெனிஃபரின் மனுவைத் தள்ளுபடி செய்தார். விடவில்லை ஜெனிஃபர். இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல் முறையீடு செய்தார்.

மனுவில் சொல்லப்பட்ட சங்கதிகளும், சந்தர்ப்பங்களும், சட்டத்தோடு பொருத்திப் பார்த்த இரண்டு நீதியரசர்களும் காலதாமதமாக மனு செய்த காரணங்கள் திருப்தி தருவதாய்க் கருதியதால் மேல் முறையீட்டு மனு அனுமதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காலதாமதம் மன்னிக்கப்பட்டு ஒருதலைப்பட்ச தீர்ப்பை ரத்து செய்யக் கோரிய ஜெனிஃபரின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

காலங்கள் ஓடினாலும், மாற்றங்கள் நிகழ்ந்தாலும், நீதி என்ற ஒன்று நிச்சயம் ஒரு நாள் வெல்லும் என்பதனை உணராத சேவியர் உச்சநீதிமன்றம் போனார்.  உச்ச நீதிமன்றம் ஓங்கித் தலையில் குட்டியதுபோல, சேவியரின் ஸ்பெஷல் லீவ் பெட்டிஷனைத் தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், வழக்கிற்கு செலவுத் தொகையாக இருபத்தைந்தாயிரம் ரூபாயை சேவியர் ஜெனிஃபருக்குத் தரவேண்டும் என்று உத்தரவிட்டது. 

இவ்வளவுக்குப் பிறகும் தனக்கு கணவன் தேவையில்லை என்ற முடிவுக்கு எப்போதோ ஜெனிஃபர் வந்திருந்தாலும், தன் மகனின் தந்தை என்ற நிலையை சட்டப்படி நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தால் சேவியர் தான் சட்டப்படியான தந்தை என்று அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். கூடவே தன் மகனுக்கு உயிரியல் தந்தை (பயோலாஜிக்கல் ஃபாதர்) என்ற உண்மையை நிரூபணம் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த அந்தத் தாய் மருத்துவப் பரிசோதனைக்கும் சேர்த்தே மனு செய்திருந்தார்.

நீதிமன்றமும் பல கட்ட விசாரணைகளுக்குப் பின், ஜெனிஃபரின் வேண்டுகோள் மனுவை ஏற்று, டி.என்.ஏ., பரிசோதனைக்கு உத்தரவிட்டது. உத்தரவு பகரப்பட்டு பல ஆண்டுகளாகியும், சேவியர் தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள முன்வரவில்லை. 

மகனோ, "தனக்குத் தாய் மட்டும் போதும், தந்தை என்ற நிலையில் ஒரு தரமற்ற மனிதனைத் தான் பார்க்க விரும்பவில்லை' என்று தெரிவித்து, தன் தாய் பெயரின் முதலெழுத்தான ஜெ-வை தன் பெயருக்கு இனிஷியலாக பெருமையோடு இட்டுக்கொண்டிருக்கிறார்.

இவை தவிர, ஜெனிஃபர் பணியிலிருக்கும் பெண்ணாக இருப்பதனால், கைவிடப்பட்ட பிறகு கணவனிடமிருந்து வாழ்க்கைப் பொருளுதவியைப் பெறுவதற்கு அருகதையற்றவர். அதேநேரம், குழந்தைகளுக்கு அவர்கள் வளர்ந்து மேஜராகும் வரையும் பெண் குழந்தைகளென்றால் திருமண செலவுகளுக்காகவும் சேர்த்தே ஜீவனாம்சம் கோரமுடியும் என்று சட்டம் சொல்கிறது. 

கணவனே வேண்டாம் என்று தீர்மானித்தபிறகு தனக்கான தேவைகளை மட்டுமல்ல தன் குழந்தைகளின் தேவைகளையும் தன்னால் நிறைவேற்றிவைக்க முடியும் என்றபோதிலும், தந்தையின் கடமை என்ன என்பதை உணர்த்தும் விதமாக குழந்தைகளுக்கு "வாழ்க்கைப்படி' கேட்டு மனு செய்தார் அந்தத் தாய். விசாரணை முடியும் முன்பாகவே குழந்தைகள் உரிமை வயதை அடைந்துவிட்டதால் அந்த வாய்ப்பும் அற்றுப் போனது.  

நீதிமன்றத்தில் எதிரவர் இல்லா நிலையில் வழங்கப்பட்ட தீர்ப்பு பற்றிக் கேட்டால் பலர் அதிர்ந்து போய்விடுகிறார்கள். அப்படி ஜெனிஃபர் தளர்ந்து போய் இருந்தால் அவரின் நம்பகத்தன்மை மட்டுமல்ல; நீதிக்கும் குந்தகம் ஏற்பட்டிருக்கும்.  ஒரு வழக்குத் தொடரப்பட்டவுடன் நீதிமன்றம் வழக்கு மற்றும் வாய்தா சம்பந்தமாக அறிவிப்பு ஒன்றை எதிர்தரப்பினருக்கு அனுப்பவேண்டும். அறிவிப்பை பெற்றுக் கொண்டு  எதிர்மனுதாரர் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் "எக்ஸ்-பார்ட்டி தீர்ப்பு' என்று சொல்லக் கூடிய ஒருதலைப்பட்ச தீர்ப்பு வழங்கப்படும். அப்படி வழங்கப்பட்ட தீர்ப்பினை ரத்து செய்ய விரும்பும் எதிர் தரப்பு அதற்கான மனுவை தீர்ப்பு நகல் வழங்கப்பட்ட முப்பது தினங்களுக்குள் தாக்கல் செய்து விட்டால், அந்த மனு அனுமதிக்கப்படுவதில் எந்தவிதமான சிக்கலும் இருக்காது. 

அதே நேரம், முப்பது நாட்கள் கடந்துவிட்ட நிலையில் கால தாமதமாக மனு செய்தால் தாமதத்திற்கான ஒவ்வொரு நாளுக்கும் தகுந்த காரணம் சொல்லப்பட்டு, அவை நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதாய் இருக்க வேண்டும். அப்படித் தகுந்த காரணங்கள் இல்லாத நிலையில்  மனுவைத் தள்ளுபடி செய்வதில் நீதிமன்றம் தயக்கம் கொள்ளாது. இது அறிவிப்பு சார்வான நிலையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. அறிவிப்பு எதிர்மனுதாரருக்கு சார்வு செய்யப்படாத நிலையில், மாற்று முகச் சார்வாக பெரும்பாலும் தினசரிகளில் அறிவிப்பு வெளியிடப்படும். சம்பந்தப்பட்டவர் அந்த அறிவிப்பைக் கண்ணுற்றிருந்தாலும் இல்லையென்றாலும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தேதியில் நேரிலோ அல்லது அதற்கும் முன்பாக வழக்குரைஞர் மூலமாகவோ ஆஜராகாத நேர்வுகளில் ஒரு தலைபட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும். 

ஜெனிஃபரைப் பொருத்த மட்டில், இந்த நடைமுறை எதுவும் கடைப்பிடிக்கப்படாதது மட்டுமல்ல; மீறப்பட்டிருந்தது. "அறிவிப்பைப் பெற்றிருந்தபோதும், கணவனின் மீது கொண்ட நம்பிக்கை அவரைத் தடுத்தது' என்ற காரணம், "கடமை உணர்வோடு செயல்பட்ட ஒரு மனைவியுடைய மனநிலையின் பிரதிபலிப்பு' என்பதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. 

மறுதரப்பில்லா தீர்ப்பு செல்லாத நிலையாகும் முன்பே சேவியர் இன்னொரு பெண்ணோடு இல்லறத்தில் இணைந்துவிட்டார். இரண்டாவது தாரம் என்று சமூகம் சொன்னாலும் சட்டபூர்வமாக மனைவி என்ற அந்தஸ்து இல்லாமல் திருமணத்திற்கு அப்பாற்பட்ட ஓர் உறவாகவே சட்டம் கருதும். ஆக மெத்தப்படித்தவர்களே சேர்த்தல், பிரித்தல், வாழ்க்கைப் பொருளுதவி, மைனர் குழந்தைகளைக் காப்பில் வைத்துக்கொள்ள விருப்பு இவை சிவில் வழக்குகளின் தன்மையைக் கொண்டிருப்பவை.  குடும்பம் தொடர்புடைய கிரிமினல் வழக்குகள் பற்றிய விழிப்புணர்வோடு விவேகமும் வேண்டும் என்பதை மனைசார் வன்முறைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவாகும் வழக்குகள் பறைசாற்றுகின்றன. அவை... அடுத்தவாரம்..! 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com