பத்மஸ்ரீ  விருது பெற்றிருக்கும்  மகளிர்மணிகள்..

பாராட்டப்படாத சாதனையாளர்களுக்கென்று உருவாக்கப்பட்ட  பிரிவிற்காக எனது  பணிகளையும் சேவைகளையும்   பரிசீலனை செய்யுங்கள்
பத்மஸ்ரீ  விருது பெற்றிருக்கும்  மகளிர்மணிகள்..

பாராட்டப்படாத சாதனையாளர்களுக்கென்று உருவாக்கப்பட்ட  பிரிவிற்காக எனது  பணிகளையும் சேவைகளையும்   பரிசீலனை செய்யுங்கள்  .. என்று ஐயாயிரம் பேர்கள் விண்ணப்பிக்க  அதில்  முதல் கட்டமாக நூற்றிஐம்பத்தைந்து பேர்களை  தெரிவு செய்து  அதில் அகில  இந்திய  அளவில்    தெரிந்தவர்களும் தெரியாதவர்களுமாய்  எண்பத்தொன்பது  சாதனையாளர்களை  பத்மஸ்ரீ விருது பெற  தேர்ந்தெடுத்து  அறிவித்துள்ளனர். 

டாக்டர்  பக்தி யாதவ்: வயது 91. பத்மஸ்ரீ  பட்டியலில்   மூத்தவர். கட்டணம்  வாங்காமல்  மருத்துவம்  குறிப்பாகப்  பிரசவம் பார்க்கும் புனிதப் பணியைச்  செய்து கொண்டு வந்தவர். இரண்டு  மாதங்களுக்கு முன்  கீழே விழுந்து  எலும்பு  முறிவு ஏற்பட்டதால்  மருத்துவம் பார்ப்பதை  இப்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கும்  கட்டாயம்  பக்தி  யாதவுக்கு  ஏற்பட்டுள்ளது.  டாக்டர் பாட்டி  என்று  கர்ப்பிணிப்   பெண்களால் அன்புடன் அழைக்கப்படும்  பக்தி யாதவ், இந்தோர்  நகரின் முதல் டாக்டர்.  

யெலி  அகமத்:  அஸ்ஸôமிய  குழந்தை இலக்கியத்தில்  மிக முக்கியமானவர். 2015 -இல்  சாகித்திய அகாடமி    விருது வழங்கி  அங்கீகரிக்க..  இப்போது  பத்மஸ்ரீ  விருது  கிடைத்துள்ளது.  அஸ்ஸôமிய  படங்களுக்கு திரைக்கதை, வசனம்,   பாடல்கள்  எழுதுபவர்.  அசாமில் பெண்களுக்காக  நாடகக்  குழுவினை  உருவாக்கி நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.  81  வயதாகும் யெலி 1970-லிருந்து  வட கிழக்கு  பகுதியில்  பெண்களுக்காக  ஒரணி சஞ்சிகை  ஒன்றை நடத்தி வருபவர்.  அந்தப் பகுதியில்  திரைப்படம்  தயாரிக்கும் தொழில்நுட்பக் கல்லூரியை  தொடங்கியவரும்  யெலி  தான்.. 
சிறுகதைகள் தொகுப்புகள், ஐம்பதுக்கும் மேல்  கவிதை நூல்களை  பிரசுரித்திருக்கும்  யெலி, சிறுவயதில்  தாயை இழந்தவர். பாட்டியிடம் வளர்ந்தவர். 

சுக்ரி  பொம்மகெளடா:  வடக்கு கர்நாடகத்தைச்  சேர்ந்தவர். அவர் வாழும்  ஹலாக்கி பகுதியின்  குயில் என்ற  பட்டப்  பெயர்  உண்டு.  அறுபதைத் தொடும்  சுக்ரி,   ஹலாக்கி  வொக்கலிகா இன ஆதிவாசிகளின்  பாரம்பரியப்  பாடல்கள்,  வரும் தலைமுறையினர்  மறந்துவிடக் கூடாது   என்பதற்காகத்  தினமும்  பாடி பாதுகாத்து வருகிறார்.   பாரம்பரியங்களை மறந்து நகர்ப்புறம் நோக்கி   நகரும் எங்கள் சொந்தங்கள்,    எங்கள்  இன   பாரம்பரிய பாடல்களைப் பாடுவதை    காது குளிரக்  கேட்கணும்... அதான்  என் ஆசை என்கிறார் சுக்ரி.  வயக்காட்டில்  வேலை செய்யும் போதும், திருமணம்,  பூஜைகள், பெண் குழந்தை பிறக்கும் போதும்   பாடப்பட்டு வருகின்றன. 

அனுராதா பொடுவால்: ஹிந்தி திரைப்படங்கள் மூலம் அறிமுகமாகி   பிறகு திடீரென்று பக்தி பாடல்களை  மட்டும்  பாடப் போகிறேன்   என்று புறப்பட்டவர் 
  பக்திப்  பாடல் உலகில்  ராணியாகவே திகழ்ந்தவர்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹிந்தி திரைப் படங்களில் பாட  ஆரம்பித்தாலும், பக்திப் பாடலுக்குத்தான்  அனுராதா முக்கியத்துவம் கொடுக்கிறார். இவரது மகள் கவிதாவும் பின்னணிப் பாடகிதான். அனுராதா  சங்கீதத்தை  முறையாகக் கற்கவில்லை.  எல்லாம் கேள்வி ஞானம் தான் என்கிறார். பத்மஸ்ரீ  விருது  எனது இறைப் பணிக்கு கிடைத்த பிரசாதமாகத்தான் நினைக்கிறேன்.. என்று சொல்லும் அனுராதாவிற்கு  அறுபத்திநான்கு வயதாகிறது.  

பாவனா சோமையா:  சினிமா பத்திரிகையாளராக காலடி எடுத்து வைத்தவர். ஆசிரியராக  உயர்ந்தவர்.  வானொலியில்,  டிவி சானல்களில்  பல நிகழ்ச்சிகளை   அளித்துக் கொண்டிருக்கும் பாவனா  நல்ல பட விமர்சகரும் ஆவார். திரைப்படம் தொடர்பாக  பதினொன்று  நூல்களை  பாவனா எழுதியிருக்கிறார்.  அதில் அமிதாப் பச்சன்  குறித்து அவர் எழுதிய மூன்று  நூல்களும்  அடங்கும். 

வீட்டில் கடும் எதிர்ப்பைச் சந்தித்தார். கடைசியில்  சில நிபந்தனைகளை சொல்லி வீட்டில் அனுமதி தந்தார்கள். வில்லன்  மாதிரியான நடிகர்களை பேட்டி எடுக்கக் கூடாது... மாலை ஆறு மணிக்கு மேல்  எந்த நடிகர்கள் நடிகைகளைப்  பேட்டி எடுக்கக் கூடாது...எந்த பார்ட்டிகளிலும்  பங்கெடுக்கக் கூடாது... பாம்பே (அப்போது மும்பை  என்று சொல்லும் வழக்கம் இல்லை) நகரின் எல்லையை விட்டு  எங்கும் போகக்   கூடாது.. என்பவைதான் அந்த நிபந்தனைகள்.  

பத்மஸ்ரீ  விருதுக்காக  தயாரிக்கப்படும் பட்டியலில்  பெயர் பலமுறை இடம் பெற்றாலும்,  விருது  பசந்தி தேவி பிஷ்ட்டிற்கு  கிடைக்காமல் நழுவிப் போய்க் கொண்டிருந்தது.  இந்த ஆண்டுதான்  பத்மஸ்ரீ விருது  பசந்திக்கு உறுதியாக்கப்பட்டிருக்கிறது. பசந்தியின்  ஸ்பெஷாலிட்டி  அவர்  இடும் திலகம்,  நெற்றியிலிருந்து   மூக்கின் நுனி வரை  நாமம் போல் நீண்டிருக்கும். உத்தரகாண்ட்  மாநிலத்தின்  ஜாகர் என்னும்  நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும்  பாடகி.

பசந்திக்கு  அறுபத்திமூன்று  வயதாகிறது.   ஜாகர் வகைப் பாடல்கள்  கடவுளின் மகிமையை  சொல்பவை.  தெய்வங்களின்   பள்ளி  எழுச்சிக்காக  ஆண்களால்  ஆண்டாண்டு காலமாகப் பாடப்பட்டு வருகிறது .  அந்த மரபினை  மாற்றி  பசந்தி  பாட  ஆரம்பிக்க   பசந்தியின் குரலில்,  ஏற்ற இறக்க லாகவத்தில்  மனங்களைப்  பறி கொடுத்த மக்கள் பசந்தியை ஏற்றுக் கொண்டனர். பசந்தி பாட ஆரம்பித்ததே  நாற்பது வயதில்தான்.  அதுவும் கணவர்  கொடுத்த உற்சாகத்தில்  ஜாகர் வகை பாடல்களில்  நல்ல பாண்டித்யம்  பெற்று, இன்றைக்கு   அகில இந்திய  வானொலியில்  ஏ   கிரேடு  கலைஞராக  மாறியிருக்கிறார். 
-அங்கவை 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com