ஆண் ஜாக்கிகளுடன் ஓடுவது வேறு வெற்றி கொள்வது வேறு! சென்னையைச் சேர்ந்த இந்தியாவின் ஒரே பெண் ஜாக்கி: ரூபா நர்பத் சிங்

இந்தியாவின் குதிரைப் பந்தயப் போட்டிகளில்,தொழில்முறை நடத்துநராக (ஜாக்கியாக)  இருக்கும் ரூபா நர்பத்  சிங்,
ஆண் ஜாக்கிகளுடன் ஓடுவது வேறு வெற்றி கொள்வது வேறு! சென்னையைச் சேர்ந்த இந்தியாவின் ஒரே பெண் ஜாக்கி: ரூபா நர்பத் சிங்

இந்தியாவின் குதிரைப் பந்தயப் போட்டிகளில்,தொழில்முறை நடத்துநராக (ஜாக்கியாக)  இருக்கும் ரூபா நர்பத்  சிங்,சென்னையைச் சேர்ந்த இந்தியாவின் ஒரே  பெண்  ஜாக்கி ஆவார். அவருக்கு பூர்வீகம் ராஜஸ்தான். ஆனால் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். முப்பத்து நான்கு வயதாகும் ரூபா  எம்.பி.ஏ பட்டதாரி. திருமணமானவர்.

சென்ற மாதம்  இலங்கை குதிரைப் பந்தயக் கழகத்தின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராகச் சென்று வந்திருக்கிறார் ரூபா. சர்வதேச பெண் ஜாக்கிகளின்  திறமை வரிசைப் பட்டியலில்  முதலாவதாக வந்திருக்கிறார். 3863 போட்டிப் பந்தயங்களில் கலந்து கொண்டு 719 போட்டிகளில் முதல் இடத்தையும், 613 போட்டிகளில் ஐந்தாவது இடத்தையும், 650  போட்டிகளில் மூன்றாம் இடத்தையும் பிடித்து ஆச்சரியக்குறியாக மாறியிருப்பவர். ஏழு முறை  சாம்பியனாக வந்திருக்கும் ரூபா, பதினோரு முறை  கிளாசிக்  வின்னராகவும்  சிகரங்களைத் தொட்டிருக்கிறார்.
ரூபா தன்னைப் பற்றி மனம் திறக்கிறார்:
"வாழ்க்கையில் பெண்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான  ஒன்று என்ன தெரியுமா? நாம் ஒரு பெண் தானே... இது நம்மால் முடியுமா? என்ற  நம்பிக்கையின்மையை  மறக்க வேண்டும். அது போன்று, ஆணுக்குப் பெண் குறைந்தவள் இல்லை..  என்று  நிரூபிக்கவும் வேண்டும். குதிரையை  வேகமாக ஓடச் செய்வது  ஒரு கலை.. வித்தை... இந்தியாவில் மன்னர் ஆட்சி காலத்திலிருந்து குதிரைப் பந்தயங்கள்  நடந்து வருகின்றன.

பல தலைமுறையாக  எங்கள் குடும்பத்தினர்  குதிரை  வளர்ப்பு, பராமரிப்பு,  குதிரை ஓட்டுதலில் ஈடுபட்டுள்ளனர். தாத்தா உகம் சிங் ராத்தோட், பிரிட்டிஷ்  ராணுவத்தில்  குதிரைகள்  பயிற்சியாளராகப்  பணி புரிந்தார்.  அப்பா  உகம்  நர்பத் சிங் ராத்தோட்  தனியாருக்குச் சொந்தமான  குதிரைகளைப் பழக்குபவராகவும், ஜாக்கியாகவும் இருந்தார். அண்ணன் நர்பத் ரவீந்தர் சிங்  ராத்தோட்,   ஜாக்கியாக இருந்து பயிற்சியாளராக  மாறியிருக்கிறார். 

அப்பா  என்னை இந்தியாவின்  முதல் பெண் ஜாக்கியாக்கிப் பார்க்கப்  பெரிதும் ஆசைப்பட்டார். அது எனக்கு  முதல் தூண்டுகோலாக இருந்தது.  இரண்டாவதாக என்னைத்  தூண்டியவர், அன்று  இந்தியாவின்  முதல் பெண் ஜாக்கியான சில்வா. ஆனால், அவர் இத்தாலிய நாட்டுக்காரர். இந்தியாவில்  நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்.

இந்திய பெண் ஒருத்தி  இந்திய குதிரைப் பந்தய உலகில்  தொழில்முறை  ஜாக்கியாக முதல் முறையாக  வந்திருப்பது   நான்தான்.  

வீட்டில் குதிரை இருந்ததால்  சிறு வயதில் இருந்தே குதிரை ஏற்றம்  படிப்பித்தார்கள்.  அப்பா பயிற்சியின் போது ரொம்பவும்  கண்டிப்பாக இருப்பார்.  திமிரும் குதிரையைக் கண்டு திடுக்கிட்டுப் போனதை   விட,  அப்பாவின்  கண்டிப்பிற்குப் பயப்பட்டதுதான் அதிகம்.  அதே சமயம் அவரின் பயிற்சியில் குதிரையை எளிதாகக் கையாளும்   சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. பயிற்சிகள்  அப்போதும்  சரி.. இப்போதும்  சரி... அதிகாலையில்  நடக்கும்.  

அப்பாவுக்கு  என்னைப்  பற்றி நம்பிக்கை  இருந்தாலும், அம்மாவுக்கு  நான் ஜாக்கியாவதில் விருப்பம் இல்லை. குதிரை ஓட்டத்தின் போது கீழே விழுந்து  விபத்துகள் நேரிடும். கை, கால் ஒடியும்.  நான் பெண்ணாச்சே  பெண்ணின்  உடலில் ஊனமோ, காயத்தின் வடுக்களோ இருந்தால் திருமணம் தடைபடுமே என்று  பயப்பட்டார்.  ஆனால்  விபத்துகள் எந்த  பணியிலும் தவிர்க்க முடியாத ஒன்று.   எனக்கும் விபத்துகள்  நடந்திருக்கின்றன.  தோள் பட்டை எலும்பு, கை கால் எலும்புகள் முறிந்து சிரமப் பட்டிருக்கிறேன். 

தொடக்கத்தில்  நான் ஜாக்கியான  போது  இரண்டு  கரங்களை நீட்டி என்னை  வரவேற்கவில்லை. எந்த பயிற்சியாளரும்  அல்லது  குதிரைகளின்  உரிமையாளரும்  ஒரு பெண்ணை  ஜாக்கியாக வைக்க  முன்வரமாட்டார்கள். ஏனென்றால்,  ஆண்களை விட  பெண்கள்  சுபாவத்திலும்,  உடல் வலிமையிலும்   திடம்  குறைந்தவர்கள்   என்று அவர்களுக்குத் தெரியும். அதுவும் முரட்டு குதிரைகளை  ஓடச் செய்ய  ஆண்  ஜாக்கிகள்  படும்  அவஸ்தையெல்லாம் அவர்களுக்குத் தெரியும். அந்த இடத்தில் பெண் ஜாக்கியைப் போட்டு ரிஸ்க்  எடுக்க வேண்டுமா என்றுதான் யோசிப்பார்கள்.   அனுபவமிக்க  ஆண் ஜாக்கிகளுடன் ஓடுவது என்பது வேறு. அவர்களை வெற்றி கொள்வது என்பது வேறு. ஆண்ஜாக்கிகள்   செய்யும் பயிற்சிகளை  நானும் செய்து  திறமைகளை வளர்த்துக் கொண்டேன்.  சக  ஆண் ஜாக்கிகளுடன்  ஓடி  பந்தயங்களில்   முதலாவதாக  வரத் தொடங்கியதும்  நானும்  ஜாக்கியாக ஏற்றுக் கொள்ளப்பட்டேன். 

நான் கலந்து கொண்ட முதல் பந்தயத்தில்  மொத்தம் பதினெட்டு  குதிரைகள் ஓடின. எனது குதிரையை  நான்காம் இடத்திற்கு வரச் செய்தேன்.  "இந்தப் பெண்  பரவாயில்லையே... சுமார் குதிரையை  சபாஷ்  வாங்கச் செய்துவிட்டாளே'' என்று  பாராட்டு கிடைத்தது.  அதன்பிறகு, இந்தியாவில் முன்னணியில் இருக்கும்  டாக்டர் எம். ஏ. எம்.  ராமசாமி  குதிரை முகாமில் ஜாக்கியாகச் சேர்ந்தேன். இன்றைக்கும்  தொடர்கிறேன். அருமையான  ஜாதிக் குதிரைகளை  ஓட்டும்  வாய்ப்பு  இந்த முகாமில் கிடைத்தது. 

குதிரைகள்  இரண்டு வயதில்  ரேஸýக்குத் தயாராகிவிடும். பத்து வயதில்  பந்தய போட்டிகளில் ஓடுவதிலிருந்து  கட்டாய ஓய்வு கொடுக்கப்படும். பிறகு அவற்றை  பயிற்சி நிலையங்களில்  குதிரை ஏற்றம் பயிற்சி தர பயன்படுத்துவார்கள்.  குதிரைகள்  திடீரென்று கடிக்கும். உதைக்கும். அதனால், குதிரை அருகில் போகும் போது  கவனம் தேவை.  மனிதர்களைப் போலவே  குதிரைகளும் பல மனோபாவம் கொண்டவை. சில குதிரைகள் பந்தயம்  தொடங்கியதும்   எடுத்த எடுப்பிலேயே வேகமாகப் பாய்ந்து  ஓடும்.  தான்  மட்டும் முதல் ஸ்தானத்தில்   ஓட  மற்ற குதிரைகள்  தன் பின்னால் வர வேண்டும்  என்று சில  குதிரைகள் விரும்பும்.  சில குதிரைகள்  நின்று  நிதானித்து  ஓடத்  தொடங்கி  படிப்படியாக  வேகத்தை அதிகரிக்கும். சில குதிரைகள், நீண்ட தூரப் பந்தயத்தில் மட்டும்  நன்றாக ஓடும். ஓடும் குதிரை எந்த வகை  என்று  பயிற்சியாளர்  பந்தயம்  தொடங்குமுன் சொல்வார். குதிரைக்கேற்ற  மாதிரி   அதனைக்  கையாள வேண்டும். அதுதான்  பந்தயத்தில் குதிரை  வெற்றி பெறும்  ரகசியம்.  

குதிரை  சுமந்து கொண்டு ஓடும் ஜாக்கியின் எடை எவ்வளவுக்கு  எவ்வளவு குறைவாக  இருக்கிறதோ, அவ்வளவு  வெற்றி வாய்ப்புகள்  அதிகரிக்கும். அதனால், ஜாக்கிகள்  ஒல்லியா இருந்தாக வேண்டும். உணவு கட்டுப்பாடு தேவை. எனது எடையை  அறுபது கிலோவுக்கு குறைவாக  பல ஆண்டுகளாக வைத்துக் கொண்டிருக்கிறேன். 
- பிஸ்மி பரிணாமன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com