மறக்கமுடியாத தருணம்!

இன்று பெண்கள் இல்லாத துறையே இல்லையென்னும் அளவுக்கு உலகம் மாறிவிட்டாலும், ஒவ்வொரு துறையிலும் முதன் முறையாக கால் எடுத்து வைக்கும் பெண்கள் எப்போதும் ஸ்பெஷல்தான்.
மறக்கமுடியாத தருணம்!

இன்று பெண்கள் இல்லாத துறையே இல்லையென்னும் அளவுக்கு உலகம் மாறிவிட்டாலும், ஒவ்வொரு துறையிலும் முதன் முறையாக கால் எடுத்து வைக்கும் பெண்கள் எப்போதும் ஸ்பெஷல்தான். அந்த வகையைச் சேர்ந்தவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயகவுரி. இந்தியாவின் முதல் பெண் ஆர்.டி.ஓ. இவர்தான்.

டெக்னிக்கல் பிரிவில் முதன்முதலில் இந்தப் பதவியை அலங்கரிப்பவரும் இவரே. இவர் சமீபத்தில் நிகழ்த்திய இன்னொரு சாதனை என்னவென்றால் ஆக்ஸிஜன் உதவியுடன் படுக்கையில் இருக்கும் தனது தாயை கோனார்க் பூரி ஜெகந்நாதர் கோயில் வரை டெம்போ டிராவலர் வண்டியில் அழைத்துச் சென்று வந்ததுதான். இதுகுறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
"எனக்கு சொந்த ஊர் சேலம்தான். அப்பா வேலாயுதத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை. அம்மா சுசீலா ஓய்வு பெற்ற ஆசிரியர். இரண்டு மூத்த சகோதரி, ஒரு தங்கை என நாங்கள் நான்கு பெண்கள். எனக்கு சிறுவயதிலிருந்தே திருமணத்தின் மீது ஆர்வம் இல்லாமல் போனது.  அதிலும் அப்பா தவறிய பிறகு திருமணம் செய்து கொள்ளாமல்  அம்மாவுடனேயே இருந்துவிட்டேன்.

1985 - இல் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்தேன்.  பெண்களும் டெக்னிக்கல் பிரிவில் படிக்கலாம் என்ற சட்டம் வந்ததில் முதல் பேட்ச் என்னுடையதுதான். பிறகு, பி.இ. முடித்தேன். சிறுவயதில் இருந்தே வாகனம் ஒட்டுவதில் ஆர்வம் அதிகம். அதனால் படிக்கும் போதே இலகுரக வாகனம், கனரக வாகனம் ஓட்டப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதோடு எப்போவாவது உதவுமே என்று பேட்ஜும் எடுத்து வைத்துக் கொண்டேன்.  

இந்நிலையில்தான் போக்குவரத்துத் துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று வந்த அறிவிப்பை பார்த்து அப்பாதான் விண்ணப்பிக்கச் சொன்னார்.  அதன்படி 1998-இல்  இந்தியாவில்   முதல் பெண் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியில் சேர்ந்தேன்.  2010 -இல் ஆர்.டி.ஓ வாக பதவி உயர்வு கிடைத்தது. முதல் பெண் ஆர்.டி.ஓ என்பதால் என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் ஆச்சர்யமாகவே பார்த்தார்கள். அதன்பிறகு துறை சார்ந்து எத்தனையோ சவால்களை சந்தித்திருக்கிறேன். 

ஆனால், அவை எல்லாவற்றையும் விட  சமீபத்தில் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கும் என் தாயாரை கோனார்க் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்கு அழைத்து சென்று வந்ததைத்தான் பெரும் சவாலாகவும், மகிழ்ச்சியாகவும் நினைக்கிறேன். என் வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாத தருணங்களில் இதுவும் ஒன்று.  அம்மா நோயினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆக்ஸிஜன் உதவியும், அடுத்தவரின் உதவியில்லாமல் அவரால் நடமாடக் கூட முடியாத சூழ்நிலை. 

இந்நிலையில் என் நெருங்கிய உறவுகளும், நட்புகளும் அம்மாவை கோனார்க் சூரியனார் கோயிலுக்கு அழைத்துச் சென்று வந்தால் விரைவில் நலம் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள்.  அதனால்  எப்படியாவது அம்மாவை கோனார்க் அழைத்துச் சென்றுவருவது என உறுதியாக இருந்தேன். பயணத்திற்குத் தேவையான பணிகளை மூன்று மாதம் செய்தேன். மேலும், பேருந்திலோ, ரயலிலோ அம்மாவை அழைத்துச் செல்ல முடியாது. அதுபோன்று அவர்களால் நீண்ட நேரம் பயணம் செய்வதும் ஆபத்து. அதனால் கேரவன் வைத்து அழைத்துச் செல்லலாம் என்று நினைத்தேன். அதிலும் ஒரு சிக்கல் கேரவனுக்கு தினசரி வாடகை பத்தாயிரம் ரூபாய் அதனால் அந்த எண்ணத்தை கைவிட்டேன். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது. டெம்போ டிராவலர் ஓட்டும்  எங்கள் குடும்பநண்பர் இருவர் நாங்கள் அழைத்துச் செல்கிறோம் என்று வந்தனர். அதன்பிறகு டெம்போ டிராவலரில் உள்ள இருக்கைகளை எல்லாம் அகற்றி அம்மா படுத்துக் கொள்ள படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வைக்க, வீல்சேர் வைக்க என சில மாற்றங்களை ஏற்படுத்தினோம். அடுத்து மருத்துவத்துறையில் ஹவுஸ் சர்ஜனாக இருக்கும் என் அக்கா மகன், அம்மாவின் தங்கை எனது சித்தி, நான் என ஆறு பேர் கொண்ட ஒரு குழுவாக கிளம்பினோம்.

எங்கேயும் நிறுத்தாமல் 24மணி நேரமும் பயணம் செய்தோம். டிரைவர்கள் மாறி மாறி ஓட்டி வந்தார்கள். விசாகப்பட்டினம் வரை சென்றதும் அம்மாவுக்குச் சற்று ஓய்வு தேவைப்பட்டது. அதனால் அன்று இரவு மட்டும் அங்கு தங்கினோம். காலை மீண்டும் பயணத்தை துவக்கினோம். ஒரிசா வரை சென்றதும், எங்களுக்குத் தெரிந்தவர் ஏற்பாடு செய்திருந்த நண்பர் அறிமுகமானார். நாங்கள் அங்கிருந்து திரும்பும் வரை அவர் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார்.

ஒருவழியாக கோனார்க் சென்றோம். அம்மாவினால் நடக்க முடியாததால் கோயிலினுள் வீல் சேரில் அழைத்துச் செல்ல முடிவு செய்தோம். ஆனால் அந்தப் பக்கத்தில் சில பெரிய கோவில்களில் வீல் சேரில் செல்ல அனுமதியில்லை.  அதனால் டோலி அமர்த்திக் கொண்டு  சூரியனார் கோயில், புவனேஸ்வர் கோயில் என அழைத்துச் சென்று சுவாமியை தரிசிக்க செய்து ஊர் திரும்பினோம். அம்மாவுடைய இந்த ஹெல்த் கண்டிஷனில் அவ்வளவு தூரம் அழைத்துச் சென்று வந்ததில் சொந்த பந்தங்கள் அத்தனை பேருக்கும் ஆச்சர்யம்.  நான் ஏதோ ஒரு அட்வஞ்சர் எடுத்ததாக அனைவரும் வியந்து பார்த்தனர். அம்மாவுக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி. அதைப் பார்த்தபோது எனக்கும் எதையோ சாதித்த திருப்தி'' என்றார்.      
- ஸ்ரீதேவி குமரேசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com