பயணத்துக்கு தயாராக இருங்கள்...!

"எனக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இந்த சினிமா புது அனுபவமாக இருக்கும். கதை, களம், படப்பிடிப்பு தளம் எல்லாவற்றிலும்
பயணத்துக்கு தயாராக இருங்கள்...!

"எனக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இந்த சினிமா புது அனுபவமாக இருக்கும். கதை, களம், படப்பிடிப்பு தளம் எல்லாவற்றிலும் புதுமை இருக்கும். வித்தியாசம் தெரியும்.  ஒரு இளைஞனின் பயணம்தான் கதை. பயணம் எப்போதுமே ஒரு தத்துவார்த்தமான முடிவைக் கொண்டது. அப்படித்தான் இருக்கும் படம்.  எந்த விதமான பயணத்துக்கும் ஒருவன் தயாராக இருக்க வேண்டும். இதுதான் லைன்.'' சிநேகமாய் சிரிக்கிறார் இயக்குநர் சார்லஸ். "அழகு குட்டி செல்லம்' படத்தின் மூலம் கவனம் கலைத்தவர். இப்போது "சாலை' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார். 

லைன் ஓகே... எப்படியிருக்கும் படம்...?

அடுத்தவர்களுக்காக வாழ்கிற வாழ்க்கைதான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது அறிஞர் ஐன்ஸ்டீன் உணர்ந்த விஷயம். இதுதான் படத்தின் சாராம்சம். ஐ.ஐ.டி. படித்து முடித்து, தன் வாழ்வின் அடுத்தக் கட்ட நகர்வு குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் ஹீரோ, சென்னையிலிருந்து காஷ்மீருக்கு ஒரு பயணம் போகிறான். அவனுக்கென்று இருக்கிற கனவுகள் ஏராளம். சமூக புரிதல், அரசியல் விழிப்புணர்வு என அவனுக்கான இலக்குகளும் ஏராளம். சாலை வழியாக போய் சேருகிற அவன், அங்கேயே சில நாள்கள் தங்கியிருக்கிறான். தங்கியிருக்கும் நேரத்தில் அந்த இடத்தைச் சுற்றி அடுத்தடுத்து 5 கொலைகள் நடக்கின்றன. அதன் பின் அங்கே நடந்தது என்ன? அங்கே நிலவும் பிரச்னையை ஹீரோ எப்படி தீர்க்கிறார் என்பதுதான் கதை. காதல், அன்பு, மனிதநேயம், சமூக அக்கறை என படம் முழுக்க மென்மையான உணர்வுகள் கூடவே வரும். மொழிகள், எல்லைகள், நிலப்பகுதிகள் கடந்தும் நிலைத்து  நிற்பது  அன்பும் மனிதநேயமும்தான் என இந்தப் படத்தில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறேன்.

இப்போது இருக்கிற டிரென்டில் இது மாதிரியான ஒரு கதை சொல்வது சரியாக இருக்குமா...?

எப்போதுமே மென்மையான உணர்வுகளை ரசிகர்கள் மதிப்பார்கள். சினிமாவில் எப்போதும் டிரென்ட் என்று ஒரு விஷயம் இல்லை. சொல்ல வருகிற விஷயத்தை சரியாக சொன்னால் போதும். மக்கள் அதை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். காமெடி, கமர்ஷியல் என சில படங்கள் ஜெயித்து விட்டால் எல்லாப் படங்களும் ஜெயிப்தாக நினைக்கிறோம். அது அப்படி இல்லை. விஷூவல் ட்ரீட்மென்ட் நன்றாக இருந்தால் மக்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள். சென்னை தொடங்கி காஷ்மீர் வரைக்குமான பயணம், அதன் பின் காஷ்மீரின் உட்புற பதிவு என இதுவரை எந்த சினிமாவிலும் பதியாத விஷயங்கள் இதில் காட்சிகளாக இருக்கும். எல்லாருக்குமே இங்கே உதவி தேவைப்படுகிறது. தீர்க்க முடியாத, நிறைவேற்ற முடியாத பல பிரச்னைகளுக்கு உதவி எந்த அளவுக்கு முக்கியமாக இருக்குமென்று ஒவ்வொருத்தரையும் உணர வைக்கத்தான் இந்தப்படம்.

இன்னும் பரிச்சயமான முகங்கள் இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்குமே...?

பட்ஜெட்டுக்கு தகுந்த படம் இது. பெரிய அளவில் யோசித்திருக்கலாம். அதற்கேற்ற சுதந்திரம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். விஷ்வா, ஏற்கெனவே "எப்படி மனசுக்குள் வந்தாய்' படத்தில் அறிமுகமானவர். இந்தப் படத்தின் முழுக் கதையும் அவர் மேல்தான் பயணிக்கும். பயணம் பற்றிய படம் என்பதால் ஹீரோவின் கால்ஷீட் முக்கியமானது. எனக்கு எப்போது அழைத்தாலும் நடிக்க வருகிற ஹீரோ தேவைப்பட்டார். அதற்கு பெரும் துணையாக இருந்தார் விஷ்வா. "அழகு குட்டி செல்லம்' கிரிஷா இதில் ஹீரோயின். ஆடுகளம் நரேன், ஸ்ருதி, அஜித் மணியன், ப்ரீத்தி வர்மா, ஆலன் ஜான் ஆகியோரும் இருக்கிறார்கள். ஆடுகளம் நரேன் தவிர  பலரும் புதுமுகங்களே. காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழலில் தாங்கள் சுற்றித்திரிவது போல் காதலர்கள் கற்பனையில் கூட கனவு காண அஞ்சுகிறார்கள்  தயங்குகிறார்கள். அதை மீறி 45 நாள்கள் பனி கொட்டிக் கிடக்கும் பால் வண்ண நிலப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தி வந்திருக்கிறோம். 

படப்பிடிப்பு பற்றி பேச நிறைய இருக்குமே...?

காஷ்மீர்... வெள்ளை தேசம். கதைக்கு முக்கிய பங்கு வகிக்கும் நகரம்.  இந்த படம் காஷ்மீரில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி பரவலாக இருக்கிறது. கதைக்குத் தேவை என்பதால்தான் அங்கே படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். எந்த இடத்திலும் திணிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பனி படர்ந்த நிலப்பகுதி முக்கிய பின்னணியாக மட்டுமல்ல ஒரு பாத்திரம் போலவே அமையவேண்டும்.    அதற்காகவே நாங்கள் காஷ்மீர் போவது என்று முடிவு செய்தோம். ஆனால் அங்கு படப்படிப்பு நடத்துவது எளிதான காரியம் இல்லை. காஷ்மீருக்கென்று தனி விமான தளம் கிடையாது.   ராணுவத்தின் விமான தளம்தான் காஷ்மீரில் உள்ள ஒரே விமான தளம். அங்கே லடாக் , ஜம்மு, காஷ்மீர் என மூன்று  மாவட்டங்கள் அடங்கிய பகுதிகள் சேர்ந்ததுதான் ஜம்மு-காஷ்மீர் மாநிலம்.  இதில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி மிகவும் பதற்றமான பகுதியாகும். அங்கே போய் அரசின் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தினோம். காஷ்மீரில் நிலப்பகுதியைப் பனி ஒரு போர்வை போல மூடி இருக்கும் கால கட்டத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. அங்கே குளிர் மைனஸ் 15 டிகிரி.  பகலிலேயே எலும்பை ஊடுருவிப் பார்க்கும் குளிர். இரவில் உயிரை உறைய வைக்கும்படி இருக்கும். இதையெல்லாம் பொறுத்து படப்பிடிப்பு முடித்தது தனி சவால். 
 

- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com