இந்த உலகமே பெண்களுக்கு எதிரானது:  மனம் திறக்கிறார்  சோனாலி பிந்த்ரே

90களில் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம்வந்த சோனாலி பிந்த்ரே, சில ஆண்டுகளுக்கு முன் திரையுலகைவிட்டு
இந்த உலகமே பெண்களுக்கு எதிரானது:  மனம் திறக்கிறார்  சோனாலி பிந்த்ரே

90களில் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம்வந்த சோனாலி பிந்த்ரே, சில ஆண்டுகளுக்கு முன் திரையுலகைவிட்டு விலகி மீண்டும் தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்களிடைய வலம் வருகிறார். புத்தகப் பிரியரான இவர், தன் மகனை வளர்க்கும்போது ஏற்பட்ட அனுபவத்தை வைத்து எழுதிய "தி மாடர்ன் குருகுலம்' என்ற இவரது முதல் நூல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குஜராத்தி, மராத்தி, இந்தி மொழிகளில் வெளியாகி பரபரப்பாக விற்பனையானதைத் தொடர்ந்து மேலும் புத்தகங்களை எழுதப் போவதாக கூறும் சோனாலி தன்னுடைய அனுபவங்களை இங்கு கூறுகிறார்.

"புத்தகம் படிப்பதில் எனக்கு அளவுக்கதிகமாகவே ஆர்வமுண்டு. புத்தகம் படிக்கும் பழக்கத்தை எங்கே விட்டுவிடுவோமோ என்ற பயம் கூட ஏற்பட்டதுண்டு. படப்பிடிப்பின்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பேன். திருமணமாகி குழந்தை பிறந்தவுடன் படிப்பதில் நாட்டம் குறைந்தது. வீட்டை கவனிப்பதற்கே நேரம் போதவில்லை. என்னுடைய மகன் வளர்ந்து பள்ளிக்குச் சென்று திரும்பும் நேரத்தில் கிடைத்த நேரத்தை படிப்பதற்காக ஒதுக்கினேன். அதிலும் எந்தப் புத்தகத்தை தேர்வு செய்து படிப்பது கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில் நுழைந்தேன்.  அப்போதுதான் திரும்பவும் புத்தகங்கள் படிப்பதற்காக ஆன்லைன் புத்தக கிளப்பை துவங்கினேன். இந்த புத்தக கிளப் மீண்டும் என்னை படிப்பதற்கான உந்துதலை ஏற்படுத்தியுள்ளது.

90-களில் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது, பெரிய சாதனை ஏதும் நான் செய்யவில்லை என்றாலும் சில சுவாரசியங்கள் என் வாழ்க்கையில் நடந்தன. சினிமாவில் நுழைந்தபோது என்னிடம் எவ்வித இலக்கும் இல்லை. சினிமாவே பார்க்காத குடும்பத்திலிருந்து வந்தவள் நான் என்பதோடு, புத்தகங்கள் படிக்கும்போது கூட ஃபேஷன் புத்தகங்கள் பற்றி ஏதும் நான் அறிந்திருக்கவில்லை. வீட்டில் ஒரே ஒரு கண்ணாடிதான் இருந்தது. அதன்முன்பாக ஐந்து நிமிடங்கள் நின்று தலைவாரிக் கொள்வேன். என்னுடைய தோற்றத்தைப் பார்த்து பிறர் சொல்லும் வர்ணனைகள் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். என்னுடைய குடும்பத்தை நடத்த பணத்தேவை இருந்ததால் சினிமாவில் நுழைந்தேன். எனக்கு சிறந்த படங்களை, கதைகளை, இயக்குநர்களை தேர்ந்தெடுக்க தெரியவும் இல்லை. இருந்தும் திரையுலகில் இன்னமும் நான் நிலைத்திருப்பது ஆச்சரியம்தான். எனக்கு நடிப்பில் முறையான பயிற்சியோ, அனுபவமோ இல்லை. சினிமாவில் நுழைந்த பின்னரே நடிப்பைப் பற்றி தெரிந்து கொண்டேன். நான் தேர்வு செய்த படங்கள் குறித்து நான் வருத்தப்பட்டதும் இல்லை. நிகழ்காலத்திற்காகவும், எதிர் காலத்திற்காகவும் மட்டுமே வாழ்ந்தேன்.

இதனால் திரையுலகம் என்னைப் புறக்கணித்ததாக சொல்ல முடியாது. இருப்பினும் நடந்த சில விஷயங்கள் என்னை பாதித்ததுண்டு. ஷாருக்கானுடன் "டூப்ளிகேட்'  என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். பின்னர் ஜூகி சாவ்லாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டவுடன், என்னுடைய காட்சிகள் குறைக்கப்பட்டு இரண்டாவது நிழல் பாத்திரமாக மாற்றப்பட்டபோது மிகவும் வருத்தமடைந்தேன். இதேபோன்று சுனில்ஷெட்டி அவரது "ரக்ஷக்' படத்தில் வித்தியாசமான ரோலில் நடிக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் எடுத்த விதமோ வேறு. இதுபோன்ற சம்பவங்கள் என் மனதை மிகவும் பாதித்தன. நெருக்கமான நண்பர்கள் கூட இப்படி செய்வார்களா? இவையெல்லாம் ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அஜய்தேவ்கானுடன் அதிகமான படங்களில் நடித்ததில் சில நல்ல படங்கள் கிடைத்தது திருப்தியளித்தது.

இன்றும் வாய்ப்பு கிடைத்தால் படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். வாழ்க்கை என்ற மேடையில்  ஏதாவது ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது. தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க முதலில் மறுத்தேன். பின்னர், "பாலாஜி நிறுவனம்' ஷோபா கபூர், என் மாமியார் மூலம் என்னை அணுகவே, கதையும் எனக்கு பிடித்திருந்ததால் வாரம் ஒருமுறை செட்டுக்கு சென்று நடித்துவிட்டு வருகிறேன்.

நான் நடித்த காலத்தைவிட நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நான் நடித்த பல படங்களை நான் பார்த்ததில்லை. தற்போதைய படங்கள் பல திருப்பங்களையும், சிக்கலான காட்சிகளையும் கொண்டுள்ளன.

பாலிவுட் திரையுலகம்  மட்டுமே ஆணாதிக்கம் நிறைந்ததாக கூற முடியாது. உலகம் முழுவதுமே ஆணாதிக்கம் நிறைந்ததுதான். என்னுடைய 13-ஆவது வயதிலிருந்தே  இந்த உலகம் பெண்களுக்கு எதிரானது என்பதையே கூறிவருகிறேன். நல்லவேளையாக என்னுடைய குடும்பத்தில் யாரும் என்னிடம் பாரபட்சம் காட்டியதில்லை. 

கறுப்பு - வெள்ளை பட காலத்திருந்தே பெண்கள் வன்கொடுமை பற்றி பல திரைப்படங்கள் வந்திருந்தாலும், 80 மற்றும் 90களில்தான் ஆக்ஷன், காமெடி என மாற்றம் கண்டுவருவது மாறுதலான விஷயமாகும்'' என்றார் சோனாலி பிந்த்ரே.
 -  பூர்ணிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com