கர்ப்பப்பை பிரச்னைகளை குணமாக்கும் மூலிகை நாப்கின்

திருச்சி முசிறியைச் சேர்ந்தவர் வள்ளி. வறுமை வள்ளியையும் குழந்தைகளையும் வாட்டிய போது, கணவரது சம்பாத்தியம் மட்டும்
கர்ப்பப்பை பிரச்னைகளை குணமாக்கும் மூலிகை நாப்கின்

திருச்சி முசிறியைச் சேர்ந்தவர் வள்ளி. வறுமை வள்ளியையும் குழந்தைகளையும் வாட்டிய போது, கணவரது சம்பாத்தியம் மட்டும் போதாது என்று புரிந்தது. பிளஸ் டூ வரை படித்திருக்கும் வள்ளி, நாமும் தொழில் செய்யலாம் என்று தீர்மானித்தார். வள்ளி தேர்ந்தெடுத்த தொழில் பெண்களுக்கான நாப்கின் தயாரிப்பது. வள்ளி தொடர்கிறார்:
"சாதாரண பெண்கள் பயன்படுத்தும் விதமாக குறைந்த விலையில் நாப்கின்களைத் தயாரிக்க முடிவு செய்தேன். தேவையான பயிற்சிகளையும், வழிகாட்டல்களையும் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கத்தின் இயக்குநர் மணிமேகலை வழங்கினார்.

அந்த சமயத்தில் தமிழகத்தில் மலிவு விலையில் நாப்கின் செய்யும் முறையை அறிமுகப்படுத்தி பிரபலமானவரிடம் நாப்கின் தயாரிக்கும் கருவிகளை வாங்கினேன். வங்கி மூன்று லட்சம் கடன் உதவி செய்தது. அதில் வேலை செய்ய நான்கு பேரை வேலைக்கும் வைத்தேன். நாப்கினை தயாரித்து பல பெண்களுக்கும் இலவசமாகத் தந்து உபயோகித்துப் பாருங்கள் என்று சொன்னேன். பிடித்துப் போன சில பெண்கள் விலைக்கு வாங்கினார்கள்.

ஒரு நாப்கினை மூன்று ரூபாய்க்கு விற்றேன். நான் தயாரிக்கும் நாப்கினுக்கு வேண்டிய பைன் மர பஞ்சு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் வாடிக்கையாளருக்கு நாப்கின் சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் விற்பனை குறைந்தது. வங்கிக் கடன்.. வேலைக்கு நிற்பவர்களுக்குத் தரப்படும் தினக் கூலி... என்னை பயமுறுத்தின. நாப்கின் தயாரிப்பதை நிறுத்த வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது.

கடன் கொடுத்த வங்கி எனக்கு நெருக்கடி கொடுத்தது. கடனிலிருந்து தப்ப மீண்டும் மணிமேகலை அவர்களை சந்தித்து என் நிலைமையை விளக்கினேன். அவர் எனக்கு ஊக்க வார்த்தைகளை சொல்லி தைரியம் தந்தார். நேபாளத்திற்கு என்னை அழைத்துச் சென்று அங்கு வாழ்க்கையில் அடிபட்டு சுய தொழில் செய்து நிமிர்ந்து நிற்கும் பெண்களை அறிமுகப்படுத்தினார். உங்களுக்கு நாப்கின் நன்றாக தயாரிக்க வருகிறது. அதன் தரத்தை மேம்படுத்தி விற்பனை செய்தால் உங்களுக்கு ஒரு மாற்றம், திருப்பம் காத்திருக்கிறது என்று உற்சாகப்படுத்தினார். அந்த வார்த்தைகள்தான் எனக்கு ஏணிப்படியாக அமைந்தன. மாற்றி யோசித்தேன். பைன் மரப் பஞ்சை மாற்றி, திரவத்தை உறிஞ்சும் தன்மை அதிகம் உள்ள இயற்கையாகக் கிடைக்கும் பஞ்சினை உபயோகித்தால் என்ன என்று சிந்தித்தேன். பஞ்சு வியாபாரிகளிடம் இதுபற்றி கலந்து பேசினேன். ராஜபாளையம் பகுதியில் நல்ல தரமான உறிஞ்சும் தன்மையுள்ள பஞ்சு கிடைக்கிறது என்று தெரிய வந்தது.

பாண்டிச்சேரியில் திரவத்தை உறிஞ்சி தக்கவைக்கும் தன்மையுள்ள செயற்கை துணி கிடைப்பதை அறிந்தேன். அதை வாங்கி பயன்படுத்திப் பார்த்ததில் நிறைவு ஏற்பட்டது. இந்த மூலப் பொருள்களை ஒன்று சேர்த்து நாப்கினை உருவாக்க தையல் மெஷின் மட்டும் போதுமானதாக இருந்தது.

ஒரு முறை முயற்சித்து தோற்றுப் போனேன். அடுத்த முயற்சியும் தோல்வியில் முடியக் கூடாது என்பதற்காக வித்தியாசமாக நாப்கினை உருவாக்கணும் என்று தீர்மானமாக இருந்தேன். பொதுவாக பல பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்னை அதிகம் உள்ளது. கடைகளில் வாங்கும் நாப்கினால் பலவித ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. இதனால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கிறது. மருந்து மாத்திரைகள் உட்கொண்டாலும் பலன் தற்காலிகம்தான். இப்படி பல பெண்கள் தங்கள் அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டது எனக்கு நினைவுக்கு வந்தது.

அதனால் சித்த மருத்துவர் ஒருவரை அணுகி எனது நோக்கத்தைச் சொன்னேன். துளசி, வேப்ப இலை, சோற்றுக் கற்றாழை இவற்றிற்கு கர்ப்பப்பை தொடர்பான உபாதைகளை குறைக்கும், குணமாக்கும் மருத்துவ தன்மைகள் உண்டு என்று சொன்னார். அதனைப் பயன்படுத்தி தயார் செய்தேம். துளசி இலை, வேப்பிலை, சோற்றுக் கற்றாழை இந்த மூன்றையும் பயன்படுத்தி நாப்கின் தயாரிப்பதால் மூலிகைப் பொடியின் வீரியம் கர்ப்பைக்குள் கடந்து போகும் போது, அத்தனை நோய்களும் மெல்ல மெல்ல குணமாகிறது.

மூலிகை நாப்கினை அறிமுகப்படுத்த முதலில் இலவசமாக பள்ளி மாணவிகளுக்கு, அக்கம் பக்கத்துப் பெண்களுக்கு வழங்கினேன். பைன் மர பஞ்சு நாப்கினில் வந்த அசெளகரியங்கள் ஏதும் இதில் இல்லை. இந்த மூலிகை நாப்கின்களின் விற்பனை தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. முன்பு செய்தது மாதிரி வெளி வேலையாட்களை வேலைக்கு வைக்காமல் மூன்று பிள்ளைகளுடன் இவற்றை செய்து வருகிறேன். மூலிகை நாப்கினை பெரிய அளவில் பல பெண்களிடம் கொண்டு போகணும். விற்பனை நோக்கத்தில் இதைச் சொல்லவில்லை. பெண்களின் நலனில் அக்கறையுடன் சொல்கிறேன். இதன் செய்முறையை கொச்சி தூய இருதய கல்லூரியில் செய்து காட்டி அங்குள்ள மாணவிகளுக்கும் நாப்கின்களை அவர்களாகத் தயாரித்துக் கொள்ள பயிற்சியும் கொடுத்துள்ளேன்.

மூலிகை நாப்கின்களைத் தொடர்ந்து, வயதானவர்களுக்கு தேவைப்படும் டயாபர்களையும் வடிவமைத்து விற்பனை செய்கிறேன். குழந்தைகளுக்காக டயாபர் செய்வதுதான் அடுத்த குறிக்கோள். இந்த வகை டயாபர்களில் குழந்தையின் தொடையைப் பிடிக்கும் விதத்தில் எலாஸ்டிக் வைத்து தைக்க வேண்டும். அப்படி அமையாவிட்டால், குழந்தை சிறுநீர் கழிக்கும் போது வெளியே வந்துவிடும். அந்த மாதிரியான எலாஸ்டிக்குகள் திருப்பூரில்தான் கிடைக்கும். திருப்பூர் சென்று பார்த்து வர வேண்டும். மூலிகை நாப்கினுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பலரும் கூரியர் மூலம் வாங்கிக் கொள்கிறார்கள். திருச்சியில் சில கடைகளில் விற்பனைக்கும் சப்ளை செய்கிறேன். தற்சமயம் எட்டு பேடுகள் கொண்ட ஒரு பேக்கிற்கு அறுபது ரூபாய் விலை. மூலப் பொருள்கள் வாங்க பண வசதி இருந்தால் நாப்கின் தயாரிப்பை விரிவாக்கம் செய்யலாம். அவ்வப்போது ஏற்படும் பணப் பிரச்னையை முசிறியைச் சேர்ந்த சிறியா தொண்டு நிறுவனம் கடனாகத் தந்து தீர்த்து வைக்கிறது'' என்கிறார் வள்ளி.
- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com