ரம்ஜான் ஸ்பெஷல் சமையல்....

நோன்பு கஞ்சி, நோன்புகால ஹலீம், பிரட் அல்வா, கட்டாயெஃப் 

நோன்பு கஞ்சி 

தேவையானவை:
அரிசி - 1 கிண்ணம்
கடலை பருப்பு - கால் கிண்ணம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
 தக்காளி - இரண்டு
பச்சை மிளகாய் - 5
கொத்துமல்லி - 2 கொத்து
புதினா - 2 கொத்து
இஞ்சி - பூண்டு விழுது - 1 மேசைக் கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் - ஒரு மூடி
பட்டை - 1
கிராம்பு - 4
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை : வெங்காயத்தை  நீளவாக்கில்  நறுக்கிக்  கொள்ளவும்.  தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை காம்பு எடுத்துவிட்டு முழுதாக எடுக்கவும். தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு அரைத்து ஒரு கிண்ணம் தண்ணீர் ஊற்றி திக்கான பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒன்றரை கிண்ணம் தண்ணீர் ஊற்றி  பிழிந்து தண்ணிப் பால் எடுக்கவும்.  கடலை  பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,  இஞ்சி, பூண்டு  விழுது ஒரு தேக்கரண்டி போட்டு ஒரு நிமிடம் வதக்கிவிட்டு, வாணலியை  மூடி,  தீயை குறைத்து வைக்கவும். 2 நிமிடம் கழித்து திறந்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும், கிராம்பு,  பட்டை  நறுக்கின  வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும். மீண்டும் ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, நறுக்கின தக்காளி, மல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய்ப்போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
வதங்கிய பின்னர் இரண்டாவதாக எடுத்த தண்ணீர் தேங்காய் பாலை ஊற்றவும்.  ஊற வைத்த வெந்தயம், கடலை பருப்பு போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.  அரிசியை களைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் பருப்பு வெந்து, பொங்கி நுரைத்து வரும்போது அரிசியைப் போட்டு 7 கப் தண்ணீர் ஊற்றி,  உப்பு போட்டு கலக்கி மூடி விடவும்.  பழைய அரிசியாக இருந்தால் நிறைய தண்ணீர் சேர்க்கலாம். பின்னர் மூடியை திறந்து கிளறி விடவும். கிளறாமல் இருந்தால் அடிபிடித்துவிடும்.  நன்கு  வெந்ததும் திக்கான தேங்காய்ப் பால் அரை கப் ஊற்றி கிளறி விடவும்.  பால் ஊற்றி ஒரு  கொதி வந்ததும் இறக்கி விடவும். புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடி வைக்கவும். சுவையான நோன்பு கஞ்சித் தயார். 

நோன்புகால ஹலீம்

தமிழகத்தில்  நோன்பு கஞ்சியைப் போன்று ஐதராபாத்தில் ஹலீம் என்பது அனைவருக்கும் வழங்கப்படுகிறது. 
தேவையானவை: 
தேவையான பொருட்கள் :
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, 
பாசிப்பருப்பு, பார்லி - தலா  ஒரு கிண்ணம்
கோதுமை  ரவை - 1 கிண்ணம் 
மட்டன் கீமா - 1 கிலோ 
நசுக்கிய பூண்டு - 2 தேக்கரண்டி
துருவிய இஞ்சி - 2 தேக்கரண்டி 
தண்ணீர் - 2 லிட்டர் 
நெய் - கால் டம்ளர்
வெந்தயத்தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சாட் மசாலா - 1 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 
உப்பு -  தேவைக்கேற்ப
தாவர எண்ணெய் - 125 மில்லி (கிண்ணம்) 
வெங்காயம் - 2 
கரம்மசாலா - 1 தேக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு - 2 தேக்கரண்டி
செய்முறை : எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி வைக்கவும்.  வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, பார்லியை நன்றாக கழுவி முதல் நாள் இரவிலேயே ஊறவைத்து கொள்ளவும். கோதுமை ரவையை  ஒன்றரைமணி நேரம் ஊறவைக்கவும்.  அடிகனமான பாத்திரத்தில்  தண்ணீர் ஊற்றி சூடானவுடன் அதில் பருப்பு வகைகள், கோதுமை ரவை, மட்டன் கீமா, பூண்டு, இஞ்சி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 மணி நேரம் வேக விடவும்.   மேலும் அடிக்கடி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேரும்படி கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அடுத்து அதில் நெய், மஞ்சள் தூள், வெந்தயத்தூள், தனியா தூள், சீரகத்தூள், சாட் மசாலா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து மேலும் 1 மணி நேரம் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அடுப்பு மிதமான தீயிலேயே இருக்க வேண்டும். இது திக்கான பதம் வரும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய்  ஊற்றி பாதி வெங்காயத்தைப் போட்டு பொன்நிறமாக வதக்கி அதை கலவையில் போட்டு மேலும் 15 நிமிடங்கள் கிளறி இறக்கவும். சுவையான ஹலீமை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் மீதமுள்ள வெங்காயம், சாட் மசாலா, இஞ்சி, கொத்துமல்லித் தழை தூவி பரிமாறவும்.

பிரட் அல்வா

தேவையான பொருள்கள்:
பிரட் - 10 துண்டுகள்
பால் - 3 டம்ளர்
கன்டன்ஸ்டு மில்க் - 4 மேசைக்கரண்டி
சர்க்கரை - 1 கிண்ணம்
ஏலத்தூள் - சிறிது
முந்திரி - சிறிது
வெண்ணெய் -   3 மேசைக்கரண்டி
செய்முறை: பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் உதிர்த்து போடவும். ஒரு வாணலியில் 3 மேசைக்கரண்டி வெண்ணெய் விட்டு முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே வாணலியில் பிரட் துண்டுகளைப் போட்டு வறுக்கவும்.  அத்துடன் காய்ச்சியப் பால் ஊற்றி குழைய பிரட்டவும். அதன் பின்னர் கன்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும். பின்னர் சர்க்கரை சேர்த்து பிரட்டி விட்டு கொண்டே இருக்கவும். அதில் வெண்ணெய் சேர்த்து கட்டி விழாதவாறு தொடர்ந்து கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் கெட்டியான பதம் வரும்போது முந்திரி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான ஸ்வீட் பிரட் அல்வா ரெடி.

கட்டாயெஃப் 
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு - 1 கிண்ணம்
எண்ணெய் - தேவைக்கேற்ப
பாலாடை - அரை கிண்ணம்
கரகரப்பாக பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா -  1கிண்ணம்
ஆப்பிள்- 1 
சர்க்கரை- அரை கிண்ணம்
செய்முறை: கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு  பிசைந்து, பின்னர் பணியாரம் போல் மடிக்கப்பட்டு, உள்பகுதியில் பூரணமாக பாலாடை, முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட உலர் பருப்பு வகைகள் மற்றும் ஆப்பிள் துண்டுகள் வைத்து நிரப்பி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பின்னர், இந்த இனிப்பை சர்க்கரை ஜீராவில் ஊறவைத்து பரிமாறவும். அரைவட்ட நிலவின் வடிவில் காணப்படும் இந்த கட்டாயெஃப் எகிப்தியர்களின் முக்கிய பலகாரங்களில் ஒன்றாகும். 

இனிப்பு சேமியா

தேவையான பொருள்கள் 
சேமியா - 1  கிண்ணம்
தண்ணீர் - 2 டம்ளர்
வெல்லம் - அரை கிண்ணம்
நெய் -  3 தேக்கரண்டி
முந்திரி  பாதாம் - கால் கிண்ணம்
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை: ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி  முந்திரி பாதாமை   வறுத்து  எடுத்து வைக்கவும். அதே கடாயில் நெய் விட்டு சேமியா சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு  மூடி 10 நிமிடம்  அடுப்பில்  வைக்கவும். சேமியா  வெந்ததும்   அதனுடன்  வெல்லம்  சேர்த்து  நன்கு  கிளரி   அதில் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கி இறக்கும் போது  வறுத்த  முந்திரி பாதாமை    சேர்க்கவும்.  சுவையான இனிப்பு சேமியா ரெடி.

இந்தவார சமையல் குறிப்புகளை வழங்குபவர் எம். பாத்திமா பீவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com