சமையல்.... சமையல்.... சமையல்....

சன்னா தால் பிரியாணி - தக்காளி தயிர் பச்சடி, முளைக்கட்டிய நவதானிய பிரியாணி, வாழைத்தண்டு பீஸ் புலாவ் - பீட்ரூட் தயிர் பச்சடி

சன்னா தால் பிரியாணி - தக்காளி தயிர் பச்சடி

தேவையான பொருள்கள்:
 பாசுமதி பச்சரிசி - 1 கிண்ணம்
கடலைப்பருப்பு - அரை கிண்ணம்
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 1
பச்சை மிளகாய்  கீறியது - 2
நெய் - 1 தேக்கரண்டி
பட்டை, ஏலம், கிராம்பு - தாளிக்க
 செய்முறை: அரிசி, பருப்பை தனித்தனியாக ஊற வைத்து வடியவிடவும். பிரஷர் பேனில் தாளித்த மசாலாவுடன் மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் அரிசி, பருப்பு, நெய் சேர்த்து உப்புப்போட்டு தண்ணீர் ஊற்றி, ஒரு விசிலில் இறக்கவும். சன்னா தால் பிரியாணியை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தக்காளி தயிர் பச்சடி
தேவையானவை:
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - அரைதேக்கரண்டி
தயிர் - 1 கிண்ணம்
செய்முறை: தக்காளியை  சுடுதண்ணீரில் 10 நிமிடம்  வைத்து பின்னர், தோலை நீக்கி பொடியாக நறுக்கவும். வாணலியில் மூன்று தேக்கரண்டி எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து ஈரம் வற்றும் வரை வதக்கவும். பிறகு ஆற வைத்து, பச்சையாக அரிந்த வெங்காயம் கொத்துமல்லித் தழை, உப்பு சேர்க்கவும். சாப்பிடும் முன் கடைந்த தயிரைச் சேர்க்கவும்.

முளைக்கட்டிய நவதானிய பிரியாணி
தேவையான பொருள்கள்:
பாசுமதி அரிசி - 2 கிண்ணம்
முளைக்கட்டிய நவ தானியங்கள் - 2 கிண்ணம்
பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் -  தலா 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய்  விழுது - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 2
எலுமிச்சைச் சாறு - 1தேக்கரண்டி
நெய் - 50 மில்லி
எண்ணெய்  - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:  நவ தானியங்களை (கறுப்பு கொண்டைக் கடலை, வெள்ளை கொண்டைக்கடலை, வெள்ளை - பச்சை பட்டாணி,  பச்சைப்பயறு,  கொள்ளு, சிகப்பு-வெள்ளை காரமணி, பச்சை வேர்க்கடலை, மொச்சை, சோயா பீன்ஸ்) அனைத்து தானியங்களிலும் சிறிது  எடுத்து  முதல்நாள் காலை   ஊற வைத்து,   இரவில் தண்ணீர் வடித்து  முளைக்கட்டவும்.  மறுநாள் காலை தானியங்களில் சிறிதாக முளை விட்டிருக்கும்.  அதனை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர், குக்கரில் நெய் மற்றும் எண்ணெய்விட்டு பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும். பின்னர், நீளமாக நறுக்கி வைத்து வெங்காயத்தை சேர்க்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும். பின் ஊற வைத்த தானியங்கள் சேர்த்து தேவையான உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர்  பாசுமதி அரிசியை சேர்த்து ஒன்றாக கலந்து மூடி வைக்கவும்.  மூன்று விசில் வந்ததும்  இறக்கி விடவும். பிரஷர் போனதும் திறக்கவும்.  பின்னர், எலுமிச்சைச் சாறு, நெய் சேர்த்து கிளறவிடவும். பின்னர், கொத்துமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.

வாழைத்தண்டு பீஸ் புலாவ் -  பீட்ரூட் தயிர் பச்சடி

தேவையான பொருள்கள்":
 பச்சரிசி  - 1 கிண்ணம்
நறுக்கிய வாழைத்தண்டு - 1 கிண்ணம்
பச்சை பட்டாணி - அரை கிண்ணம்
தக்காளி - 1
பெரிய வெங்காயம்  - 1
இஞ்சி - பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
 பிரியாணி இலை - 1
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
 பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 3  மேசைக்கரண்டி
தண்ணீர் - 2 கிண்ணம்
தயிர் - 1 தேக்கரண்டி
மல்லித் தழை - அலங்கரிக்க
செய்முறை: அரிசியைக் களைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். தக்காளி, வெங்காயம் மெல்லியதாக நறுக்கி வைக்கவும். வாழைத்தண்டை நறுக்கி மோரில் உப்பு, மஞ்சள்தூள்  சேர்த்து கலந்து  வைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் , பிரிஞ்சி இலையைச் 
சேர்க்கவும். வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். அத்துடன் தக்காளி பச்சை பட்டாணி, வாழைத்தண்டு போட்டு வதக்கவும். பச்சைமிளகாய், மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்து அரிசியும் சேர்த்து வதக்கவும். தயிர் தேவையானயளவு தண்ணீர் சேர்த்து கலந்து மூடி வைக்கவும். வெயிட் போட்டு 2 விசில்விட்டு நிறுத்தவும். மேலே மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பீட்ரூட் தயிர் பச்சடி

தேவையானவை:
பொடியாக நறுக்கிய பீட்ரூட் - 1 கிண்ணம்
காய்ந்த மிளகாய் - 1
கடுகு - உளூந்து - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
கொத்துமல்லித் தழை - அலங்கரிக்க
 தயிர் - 2 கிண்ணம்
செய்முறை:  ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு கய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.  பீட்ரூட்டை சேர்த்து தேவையானயளவு உப்பு சேர்த்து மூடி வைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். நன்றாக  வெந்ததும் இறக்கி ஆற வைக்கவும். ஆறியதும் தயிர், கொத்துமல்லித் தழை சேர்த்து கலக்கவும். சுவையான பீட்ரூட் தயிர் பச்சடி தயார்.

காலிஃப்ளவர்  நெய்  பிரியாணி
தேவையான பொருள்கள்:
 பாசுமதி அரிசி - 1கிண்ணம்
காலிஃப்ளவர் -1 
சீரகம் - 1 தேக்கரண்டி 
இஞ்சி - 1 சிறுதுண்டு  (பொடியாக நறுக்கவும்), 
நறுக்கிய பூண்டு - 5 பல் 
மிளகுத்தூள் -  1தேக்கரண்டி 
உப்பு  - தேவைக்கேற்ப 
பெரிய வெங்காயம்  -  1 (நறுக்கியது) 
நெய் - 3 தேக்கரண்டி 
செய்முறை:   பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.  பின்னர், காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து மிக்ஸியில்  பொடித்துக் கொள்ளவும்.  வாணலியில் நெய் சேர்த்து சீரகம், வெங்காயம்,  இஞ்சி,  பூண்டு துண்டுகள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, காலிஃப்ளவர், உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். தண்ணீர் அதிகம் சேர்த்தால் காலிஃப்ளவர் குழைந்து விடும். ஆகவே இட்லி பானைத் தட்டில் வதக்கிய கலவையை 5 நிமிடத்திற்கு வேகவைத்து இறக்கவும். வெந்த காலிஃப்ளவர் கலவையை  வடித்த   சாதத்துடன் கலந்து  அடுப்பில் வைத்து ஒருமுறை கிளறி இறக்கி பரிமாறவும்.

ஸ்வீட் கார்ன் புலாவ்

தேவையானவை: 
பாசுமதி அரிசி -  ஒரு கிண்ணம்
ஸ்வீட் கார்ன் - ஒரு கிண்ணம்
வெங்காயம்  - ஒன்று
இஞ்சி  -  சிறு துண்டு
காய்ந்த மிளகாய் -  4
தேங்காய்த் துருவல் -  ஒரு தேக்கரண்டி
கிராம்பு  - ஒன்று
முந்திரி - 4
பொடியாக நறுக்கிய புதினா, 
கொத்துமல்லித் தழை  -  தலா ஒரு கைப்பிடி அளவு
பிரிஞ்சி இலை,  பட்டை, 
கீறிய பச்சை மிளகாய்  - தலா ஒன்று,
நெய்,  எண்ணெய்,  உப்பு  -  தேவைக்கேற்ப
செய்முறை:  இஞ்சி, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், கிராம்பு,  முந்திரி ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.  பாசுமதி அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிரி உதிரியாக வடிக்கவும். அடி கனமன வாணலியில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி,  கீறிய பச்சை மிளகாய், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து மேலும் வதக்கவும். வேகவைத்து உதிர்த்து வைத்திருக்கும் ஸ்வீட் கார்ன்,  உப்பு  சேர்த்து நன்கு கிளறவும்.  பிறகு,  உதிராக வடித்த சாதம் சேர்த்து நன்றாக கிளறி புதினா, கொத்துமல்லித்தழை தூவி பரிமாறவும்.  ஸ்வீட் கார்ன் புலாவ் ரெடி. 

இந்தவார சமையல் குறிப்புகளை வழங்குபவர் கோமதி சதீஷ்பாபு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com