தர்மம் வெல்லும்; நீதி நிலைக்கும்! 26 - வழக்குரைஞர் சாமி. தமிழ்ப்பூங்குயில்மொழி

பெரும்பான்மைகள் எப்படிப் பேசப்படுகிறதோ அதே போன்று அபூர்வங்களும் அலசப்படுகின்றன.
தர்மம் வெல்லும்; நீதி நிலைக்கும்! 26 - வழக்குரைஞர் சாமி. தமிழ்ப்பூங்குயில்மொழி

பெரும்பான்மைகள் எப்படிப் பேசப்படுகிறதோ அதே போன்று அபூர்வங்களும் அலசப்படுகின்றன.  பெண்களால் ஆண்கள் வதைபடுவதென்பது பெரும்பான்மையுமல்ல;  அபூர்வமுமல்ல என்பதனாலோ என்னவோ அதிக அளவில் சமுதாயத்தால் ஆராயப்படவில்லை. 

அதே நேரம் வெளியுலகம் அறியாமல், தனக்குள்ளே தவிப்புகளோடும் இன்னல்களோடும் இடர்ப்பாடுகளோடும் தமக்குத்தாமே இருட்டடிப்பு செய்து இயல்பாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இங்கே ஏராளம். பொறுத்தது போதும் என ஆண்கள் தங்கள் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க சங்கம் அமைத்தவுடன் வெளிநாடுகளிலிருந்து கூட விருப்பப்பட்டு அங்கத்தினர் ஆக ஆயிரக் கணக்கான விண்ணப்பங்கள் குவிந்ததாக வாசித்திருக்கிறேன். பெண்ணுரிமை பேசும் காலம் போய் ஆணுக்கு உரிமை கேட்கும் காலம் வந்தேவிட்டதென எண்ணுமளவிற்கு கொடுமைகள் நடந்து கொண்டிருப்பதை  மூன்று வெவ்வேறு குடும்பங்களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு விளக்குகிறேன்.

1. அது ஓர் இளைய சகோதரி மற்றும் இரு மூத்த சகோதரர்களைக் கொண்ட குடும்பம். சொந்தத்தில் மணமுடித்தால் பின்னாளில் சோற்றுக்குத் திண்டாட வேண்டியதில்லை என்ற நினைப்பில் மூத்த மகனுக்கு தன் தங்கை மகளை மணமுடித்தார் தந்தை. இளைய மகனோ மாற்று சாதியில் காதலித்து மணமுடித்தார். கோபத்தில் குமைந்தாலும், வரவேற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர். வேறு வழியின்றி வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டனர்.

சொந்தம் என்று வந்த மூத்த மருமகள் புகுந்த வீட்டுக்குள் வந்த உடனேயே செய்தது பிரித்தாளும் சூழ்ச்சியைத்தான். தனிக்குடித்தனம். கணவரின் சம்பாத்தியம் முழுவதும் தனக்கு மட்டுமே பயன்பட வேண்டும்; தவறிப்போய் ஒரு ரூபாய் கூட புகுந்த வீட்டில் மற்றவர்களுக்குப் போய்விடக்கூடாதென்பதில் குறியாக இருந்தார்.  தங்கைக்கும் திருமணமாகி, கணவர் வேலையின் நிமித்தமாக வேற்றூரில் தனிக்குடித்தனம் போனார். கர்ப்பிணியாய் பிறந்தகம் வந்த தங்கையிடம்,  மூத்த அண்ணி வேண்டுமென்றே வம்பு இழுத்து வீட்டுக்குள் வரக்கூடாதென வார்த்தை அம்புகளை வீசி.. அதன் விளைவாக... கணவன் தவிர மொத்த குடும்பமும் இன்றுவரை அந்த மூத்த மருமகளை விட்டு விலகியே இருக்கிறது.

மனைவியின் வார்த்தை அம்புகளால் தன் குடும்பமே தன் வீட்டு வாசலை மிதிக்காதபோது அந்த வீட்டில் தங்குவதற்கு அந்தக் கணவனுக்குத் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.  அந்த வீட்டுக்கே "மனைவியின் வீடு' என்று பெயர் சூட்டி, அவ்வப்போது சென்று தன் குழந்தைகளிடம் அன்புகாட்டி, தேவையானவைகளைச் செய்து, மாதந்தோறும் மனைவிக்குப் பணம் (மனதுக்குள் ஜீவனாம்சமாக எண்ணி) கொடுத்துவரும் அவர், தங்குவதென்னவோ ஒரு தனி அறையை வாடகைக்கு எடுத்து தாயுடன்தான்.  20 ஆண்டுகள் கடந்தும்,  மனைவியின் மனநிலை மாறவில்லை.   ஆகாதென எண்ணிய இளைய மருமகளோ, அத்தனை சொந்தங்களையும் அரவணைத்துச் சென்று கொண்டிருக்கிறார். 

இங்கே ஆண்கள் அனைவருமே அரக்கர்கள் போலவும், பெண்கள் எல்லோரும், கொடுமைகளுக்கு உட்பட்டிருப்பதாகவும், காட்டிக்கொண்டிருந்த தோற்றமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியிருக்கிறது. 

2. என் கல்லூரி காலங்களில் பக்கத்து வீட்டில் வசித்தார்கள் முருகேசன்} சாந்தி தம்பதியர். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).  புகுந்த வீட்டிலிருந்து கணவரின் சகோதரர் மற்றும் சகோதரிகள் எப்போதாவது அண்ணனின் (சாந்தியின் கணவர்) வீட்டிற்கு வருவார்கள். அவர்கள் வரும்போதெல்லாம், சாந்தி ஒரு சைவ சாப்பாடு கூட சரிவர செய்து போடமாட்டார். என்றோ ஒருநாள் வந்து ஒருவேளை சாப்பிட்டுச் செல்வார்கள் அவ்வளவுதான்.

அதே நேரம் சாந்தியினுடைய அம்மா, மற்றும் அவரது சகோதர சகோதரிகள் ஒவ்வொரு விடுமுறையின் போதும் குடும்பத்தோடு வருவார்கள். அப்போதெல்லாம்  அசைவம் பலவிதமாகவும், சைவசாப்பாடு என்றால் வடை ,பாயசம் உட்படவும்  அமர்க்களப்படும்.

இதை கண்டும் காணாததுமாக சென்றாலும், ஒரு நாள் பொறுக்க மாட்டாமல் கணவர் சாந்தியை அடித்துவிட்டார். அசராத சாந்தியோ கணவரிடம் சொன்னார்: 
 "விருந்து போல் சமைத்துப் பரிமாறினால், கணவரின் வீட்டார் நாம் நன்றாக இருப்பதாக எண்ணி உதவி கேட்டு விடுவார்கள். சரிவர சமைக்கவில்லை எனில், நாம் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்து உதவி கேட்டு வரமாட்டார்கள்.    அதே நேரம் தன்னுடைய பிறந்த வீட்டிலிருந்து வருபவர்களென்றால், மாப்பிள்ளை தன்னை நன்றாக வைத்திருப்பதாக எண்ணிக் கொள்வார்கள்'' என்று தனது கற்பனைக் காரணத்தைக் கூறி சமாளித்தார்.   முருகேசன் சமாதானமானதுபோல் நடித்தாரேயன்றி,  "நாடகமா ஆடுகிறாய்... நய வஞ்சகி' என்று நொந்துபோன மனதுடனே வாழ்ந்து வந்தார்.

3.  சந்தானம்-அம்சவல்லி  இருவரும்  மனமொத்த தம்பதியர் என சுற்றமெல்லாம் பேசியது. உண்மையாகவே அப்படித்தான் எல்லோரும் நம்பினார்கள். நிஜம் என்னவோ வேறாக இருந்திருக்கிறது. உயிரைப் பறிக்கும் நோயொன்று சந்தானத்தைத் தாக்கியபோதுதான் தெரிந்தது மனைவியின் கொடூர முகம்.   உடல் நலத்துடன் நன்றாக நடமாடியபோது, மனைவியின் அதிகார தோரணையை அடக்கி வைக்க வழிவகை தெரியாமல் இருந்த சந்தானம், தன் இறுதிப்பயணத்திற்கான நாளை எண்ணிக்கொண்டிருந்த நிலையிலும் சந்தித்த மருட்டல்கள் அப்பப்பா.... கணக்கிலடங்காதவை. 

மனைவியின் தயவின்றி தன்னால் இம்மியும் நகரமுடியாது என்ற நிலையில், அந்தப் பெண்மணி அதிகாரத்தை செலுத்தத் தயங்காதது மட்டுமல்ல, தான் நினைத்தது நிறைவேறவில்லையென்றால், குளிப்பாட்டிவிடுவதற்கும், பெட்பேன் வைப்பதற்கும் கூட முடியாதென "பிளாக் மெயில்' செய்தபோது, "இனி பொறுப்பதற்கில்லை' என நெடுங்காலமாக, மனைவியால் அனுபவித்த சித்திரவதைகளை வெள்ளைத் தாள்களில் கறுப்பு மை கொண்டு கடிதம் தீட்டினார் மைத்துனர்க்கு. கடிதத்தை மைத்துனர் மறைத்துவிட்டாலும், காற்றில் கலந்த அவருடைய மூச்சு, அவலங்களோடு அவர் வாழ்ந்த வாழ்க்கை சொந்தங்களிடமிருந்து சொற்களாய் வெளிவந்தது.

இப்படி ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்க்கும்போது பெண்கள் தாம் பொறுமைசாலிகள் என்ற சொலவடையை மாற்றி ஆண்கள் அதிபொறுமைசாலிகள் என்று சொல்லத் தோன்றுகிறது.  பொதுவாக, ஒரு பெண் தன் வருமானத்திலிருந்து கணவரின் சொந்த உறவுகளுக்கு செலவு செய்வதில்லை.  ஆண் தன் வருமானத்தில் மனைவியின் சொந்த உறவுகளுக்கும்  செலவு செய்கிறான்.  பணவிஷயத்தில் பெண்ணைவிட ஆணுக்கே பெருந்தன்மை  அதிகம் உண்டு.   அதற்காக பெண்ணுரிமை காக்க சிறப்புச் சட்டங்கள் இருப்பதுபோல், ஆண்களுக்கு அவசியம் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.  காரணம், மணவாழ்வில் சிக்கல்கள் வந்துவிட்டால் அதிக அளவில் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள்.

ஆணை முன்னிறுத்தியே நம் குடும்ப அமைப்புகள் வழிவழியாய் வந்து கொண்டிருக்கிறது. "பிறந்த வீடு'ம், "புகுந்தவீடு'ம் பெண்களுக்கென மட்டுமே பகுத்துரைக்கப்பட்டவை. 

எவ்வளவுதான் கல்வி, பதவி, பொருளாதார நிலைகளில் சுதந்திரம் பெற்றிருந்தாலும், குடும்பங்களில் விரிசல்கள் எனில், அடிப்படைத் தேவைகள் உட்பட அனைத்திலும் நிர்க்கதியாய் நிற்பவர்கள் பெண்ணினம்தான். 

பெண்டாட்டி செத்தால் கணவன் புதுமாப்பிள்ளை என்பது பழமொழி. கிட்டத்தட்ட மணமுறிவென்றாலும் மாஜி கணவன் புதுமாப்பிள்ளைதான். மனைவிகளைப் பொருத்தவரை, அவர்களின் மனம், வயது, வசதி, குழந்தை இப்படி பல காரணங்கள் மறு வாழ்க்கையைத் தீர்மானம் செய்கின்றன. ஆனாலும், மறுமண வாழ்வை எண்ணிப்பார்க்கும், எதிர்நோக்கும், பெண்கள் சதவீதம் மிக மிகக் குறைவென்று சொல்லலாம். 

ஆண்களில் அதிகம் பேர் பாதிக்கப்படுவது பொய்ப்புகார்களால் என்ற குற்றச்சாட்டுகளில் உண்மைத்தன்மை இல்லாமல் இல்லை. அதேநேரம், பல குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்ற நம் சட்ட நோக்கில், உண்மைக் குற்றவாளிகளே ஆனாலும், நிரபராதிகளாக பலர் நம் கண்முன்னே நடமாடிக் கொண்டுதானிருக்கிறார்கள்.

ஆதலால், சட்டம் இயற்றுபவர்கள் சிந்தித்து, குடும்ப வன்முறைக்கெதிராக பெண்களுக்கான சட்டங்களை சரிவர செய்து வைத்தார்கள். இயற்றப்பட்டதன் நோக்கம் சில பொய்ப்புகார்களால் சிதைக்கப்படுவதை, அதனை அமல்படுத்தும் நீதிமன்றங்களும் சரிவரக் கண்ணுறத் தவறவில்லை. 

பிரச்னைகளின் தோற்றம், பரிணாமம், பரிமாணம், மாறிவரும் சமூகச் சூழல், கலாசாரம், கண்ணியம் அனைத்தும் கவனத்தில் கொண்டு சாட்டையடித் தீர்ப்புகளை பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல வழங்கி, முன்தீர்ப்புச் சட்டங்களாகவும் ஆகிக் கொண்டிருப்பதை நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். சட்டங்கள் எந்த பாலினத்தவர்க்கு ஆதரவாக இயற்றினாலும், மனுக்களும், புகார்களும் நிஜமா, பொய்யா என்பதை நீதிமன்றம் சீர்தூக்கிப் பார்க்கும்போது சகோதரர்களே... சகோதரிகளே...  தர்மம் வெல்லும், நீதி நிலைக்கும். . .  வெல்லட்டும் , நிலைக்கட்டும் என்று கூறி விடைபெறுகிறேன்!
(நிறைவு பெற்றது)
தொகுப்பு: ரவிவர்மன் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com