வானூர்தியை வாடகைக்குத் தருவேன்!

ஆறு மாதத்திற்கு முன் சர்வதேச வணிக இதழான "ஃபோர்ப்ஸ்' இதழ் "சாதனையாளர்கள் - முப்பது வயதுக்கு கீழிருக்கும் முப்பது பேர்' என்ற பட்டியலை வெளியிட்டிருந்தது.
வானூர்தியை வாடகைக்குத் தருவேன்!

ஆறு மாதத்திற்கு முன் சர்வதேச வணிக இதழான "ஃபோர்ப்ஸ்' இதழ் "சாதனையாளர்கள் - முப்பது வயதுக்கு கீழிருக்கும் முப்பது பேர்' என்ற பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் கனிகா டெக்ரிவால் இடம் பெற்றிருந்தார். 2015 - இல் "(பிறருக்கு) ஊக்கம் தருபவர்கள்' என்ற தலைப்பில் நூறு பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ஏழு இந்தியர்கள் இடம் பெற்றிருந்தார்கள். அதில் ஒருவர் கனிகா டெக்ரிவால்.

இளம் வயதில் ஒரு தொழில் முனைவராக உயர்ந்து நிற்கும் கனிகா, ஆண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட துறை ஒன்றில் நுழைந்து வெற்றிக்கனியைப் பறித்திருப்பவர். கெ ட் செட் கோ (Get set go) என்ற நிறுவனத்தின் தலைவியும் கனிகாதான். வித்தியாசமாக யோசித்து தன்னைச் சுற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடி சுவர்களை சுக்கு நூறாக உடைத்து சாதனை புரிந்திருக்கும் கனிகா புற்றுநோய் பிடியிலிருந்து தப்பி வந்திருப்பவரும் கூட. அவர் கூறுகையில்:
"நான் பாரம்பரிய மார்வாடி குடும்பத்தில் பிறந்தவள். அதனால் வணிகம், வர்த்தகம் தொடர்பான பண்புகள் என் ரத்தத்தில் கலந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. அதனால் என்றாவது ஒரு நாள் சொந்தமாக தொழில் ஒன்றை நடத்துவேன் என்ற நம்பிக்கை இருந்து வந்தது. வானில் பறக்கும் விமானத்தை வாய் பிளந்து அண்ணாந்து பார்க்காத சின்னஞ் சிறுவர்கள் உண்டா... நான் மட்டும் விதிவிலக்காவேனா என்ன..?
விமானம் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. நான் எம்பிஏ பட்டதாரி. எனக்குப் பிடித்தது விமானம் என்பதால் , விமானக் கம்பெனிகள் பலவற்றில் வேலை பார்த்தேன்.''

சொந்தமாக வணிக நிறுவனம் ஒன்று தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது எதிர் பாராத விதமாக திடீரென்று புற்று நோய் என்னைத் தாக்கியது. அப்போது எனக்கு வயது இருபத்திரண்டு. நான் புற்று நோய் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காதவள், புற்று நோய் குறித்து பேச விவாதிக்க விருப்பம் இல்லாதவள். அதனாலோ என்னவோ, என்னுள் புற்று நோய் வேர் விடத் தொடங்கியது. பரிசோதனையில் தெரிய வந்தாலும், உயிர் பிழைத்து விடலாம் என்ற நம்பிக்கையை டாக்டர்கள் தரவில்லை . அப்போதே பாதி உயிர் போய்விட்டது. வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உறுதியில், இருந்த பாதி உயிருடன் ஒன்பது மாதம் சிகிச்சையில் கழித்தேன். இறைவன் அருளால், புற்று நோய் குணமானது. இந்த சிகிச்சைக் காலத்தில் உதித்ததுதான் "கெட் செட் கோ'.

டாக்சியை எப்படி ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஏற்பாடு செய்கிறோமோ அதே மாதிரி தனிப்பட்ட பயணத் தேவைகளை பூர்த்தி செய்ய வாடகைக்கு தனி விமானம் அல்லது ஹெலிகாப்டர்களை தேவைப்படுபவர்களுக்கு ஏற்பாடு செய்து தரும் நிறுவனம்தான் "கெட் செட் கோ'. 2013 -இல் தொடங்கிய நிறுவனம், இந்த தொழில் செய்யும் முதல் இந்திய நிறுவனம் ஆகும். இப்போதெல்லாம் திருமணத்திற்கு மணமக்கள் வந்திறங்குவது குட்டி விமானம் அல்லது ஹெலிகாப்டரில். அவர்களுக்கு வாடகை விமானத்தை அல்லது ஹெலிகாப்டரை எனது நிறுவனம் ஏற்பாடு செய்துதரும். சிகிச்சைக்காக புகழ் பெற்ற மருத்துவமனைகள் இருக்கும் நகரங்களுக்கு நோயாளியை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். அந்த சமயங்களில் எங்களை அணுகுபவர்களுக்கு தேவையான ஊர்தியை ஏற்பாடு செய்து தருவோம்.

தொடக்கத்தில் யாருமே என்னை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. பெண்களுக்கு ஏற்ற வேலை "பேக்கரி பதார்த்தங்கள் உருவாக்குவது' என்று தீர்மானித்திருந்தவர்கள் அநேகம். சிலர் விமானத்துடன் எனக்கிருக்கும் ஈர்ப்பை தெரிந்து கொண்டவர்கள், "ஏர் ஹோஸ்டஸôகப் போயிருக்கலாமே' என்றார்கள். ஆனால் நான் "வாடகைக்கு வானூர்தியை ஏற்பாடு செய்து தரும் தொழிலைத்தான் செய்வேன் என்று உறுதியாக நின்ற போது, " கர்வம் பிடித்தவள்' என்று முணுமுணுத்தார்கள். ஆனால்... எனது நிறுவனம் சிறகு விரித்துப் பறந்தது. எனது நிறுவனத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் முதலீடு செய்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் சில பிரபல தொழில் அதிபர்களும் முதலீடு செய்திருக்கிறார்கள். இப்போது மூச்சுவிடக் கூட நேரமின்றி உழைக்கிறேன்.

அத்தனை பிசி.. சொந்தமாகவும் விமானங்கள் எனது நிறுவனத்திற்கு உள்ளன. வாடகைக்குத் தர ஒப்புக் கொள்ளும் விமானச் சொந்தக்காரர்களிடமிருந்தும் விமானங்களை பயன்படுத்திக் கொள்வோம். எனது நிறுவனம் டில்லி, மும்பை, பெங்களூரு, துபாய், நியூ யார்க் நகரங்களில் செயல்படுகின்றன. எனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்யும் திட்டமும் உண்டு. மனத்துக்குப் பிடித்த அதுவும் மனதுக்கு ரொம்பவும் பிடித்த தொழிலைச் செய்வதால், ஒவ்வொரு நாளும் புதிதாகத் தெரிகின்றன. உற்சாகம் தருகின்றன. ஒவ்வொரு நாளும் புதிதாகப் பலவற்றைத் தெரிந்து கொள்கிறேன். அதுதான் எனது தொழில் வெற்றியின் ரகசியம்'' என்கிறார் கனிகா.
- அங்கவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com