மனைவிக்கு கோயில் கட்டிய ஆந்திரப் பிரதேச போலீஸ் அதிகாரி!

மனைவியை  தெய்வமாக வணங்கும்  கணவர்கள்  சிலராவது  இருக்கத்தான்  செய்கிறார்கள். அந்த வகையைச் சேர்ந்தவர் முனி ராமையா.  
மனைவிக்கு கோயில் கட்டிய ஆந்திரப் பிரதேச போலீஸ் அதிகாரி!

திருமண பந்தம் என்பது நுட்பமான உறவு. ஒரு சில பந்தங்கள், விளையாட்டு பந்தயமாக மாறி  நீயா? நானா? என்று  பிரச்னையில் முடிந்தாலும்,  நீ பாதி.. நான் மீதி  என்று  வாழும் பந்தங்கள் அதிகம். கணவனைத் தெய்வமாகக்  காணும் வணங்கும் பெண்கள் அநேகர் உண்டு. அதுபோல  மனைவியை  தெய்வமாக வணங்கும்  கணவர்கள்  சிலராவது  இருக்கத்தான்  செய்கிறார்கள். அந்த வகையைச் சேர்ந்தவர் முனி ராமையா.  

முனி ராமையா திருப்பதியில்  காவல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணி புரிகிறார்.  அவரது மனைவி  ஸ்ரீவாணி.  இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள்.  மகிழ்ச்சியான வாழ்க்கை. 

யார் கண் பட்டதோ... 2015- இல் ஸ்ரீவாணி நோய் வாய்ப்பட்டு தவறிவிட்டார். மனைவி  இறந்த  துயரம் ராமையாவை  வாட்டியது. உற்றார் உறவினர்கள் எத்தனை ஆறுதல் கூறியும்  ராமையாவின் துயரம் அதிகரித்ததே  தவிர  குறையவில்லை. 

எங்களுக்குத் திருமணம் 1988 -இல்  நடந்தது.  திருமணம் ஆன நாள் முதல், வேலை நிமித்தமாக, நான் வெளியூர் செல்ல நேர்ந்தாலும் நான்  பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பார் என் மனைவி வாணி. சாப்பிடும் நேரம்  வந்ததும், மறக்காமல்  போனில் அழைப்பார். சாப்பிட்டீங்களா? என்ன  சாப்டீங்க? எங்கே சாப்டீங்க? என்று விசாரிப்பார்.  இரவு எவ்வளவு நேரம் நான் தாமதமாக வீடு திரும்பினாலும் சாப்பிடாமல்  எனது வருகைக்காகக் காத்திருப்பார். இரவு உணவை, இருவரும்  ஒன்றாகவே சாப்பிடுவோம்... திருமணம் ஆனது  முதல்  இந்த வழக்கத்தை வாணி விடவேயில்லை.

காவல்துறையில் திறமையாகப் பணியாற்றி ஐநூறுக்கும் மேற்பட்ட வெகுமதிகள், பாராட்டுகள், பரிசுகள்  கிடைக்க என் மனைவிதான்  காரணம். எனது மனைவியின்  உற்சாக  வார்த்தைகளால்தான்  இன்று நான் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக உயர முடிந்தது.

வாணிக்கு  செம்பருத்தி பூ என்றால் ரொம்பவும் பிடிக்கும்.   வாணியின்  நினைவாக  வாணி மாதிரியே  ஒரு சிலையை  பளிங்குக் கல்லில்   உருவாக்கச் சொன்னேன்.  நான்   ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம்  ராஜம்பேட்டையைச் சேர்ந்தவன்.  வாணியின்  மறைவிற்குப் பிறகு,  வாணி நினைவாக  கோயில் கட்ட தீர்மானித்து,   சொந்த ஊரான ராஜம் பேட்டையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான பதினான்கு  செண்ட் நிலத்தில்  முப்பத்தாறு  லட்சம் செலவில் முற்றிலும் பளிங்குக் கற்களால்  ஆன அழகிய கோயில் கட்டியுள்ளேன். கோயிலுக்குள்  வாணியின்  உருவச் சிலையை பிரதிஷ்டை செய்து  தினமும் பூஜை செய்வதற்காக பூசாரி ஒருவரையும் நியமித்திருக்கிறேன்.   வீட்டில், ஒவ்வொரு நாளும்  மனைவியின் படத்தை வணங்கிவிட்டு...  வாணியின் படத்தை  அவளுக்குப் பிடித்த செம்பருத்தி பூக்களால்  அலங்காரம் செய்துவிட்டுதான் அலுவலகத்துக்கு செல்கிறேன்'' என்று உருகுகிறார் ராமையா.  இதைச் சொல்லும் போது ராமையாவின்  கண்களில்  கண்ணீர்த் துளிகள்.
- அங்கவை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com