யாரும் காமெடியன் இல்லை!

வாழ்க்கையை விட சிறந்த சினிமா ஏது? கனவுக்கும், எதார்த்தத்துக்கும் இடையே ஒவ்வொரு காட்சியிலும் மாய மான் போன்று ஆச்சரியம் கொள்ள வைக்கிறது வாழ்க்கை.
யாரும் காமெடியன் இல்லை!

வாழ்க்கையை விட சிறந்த சினிமா ஏது? கனவுக்கும், எதார்த்தத்துக்கும் இடையே ஒவ்வொரு காட்சியிலும் மாய மான் போன்று ஆச்சரியம் கொள்ள வைக்கிறது வாழ்க்கை. இந்த பெருநகர வாழ்க்கையின் மீது ஒவ்வொரு நாளும் எத்தனை எத்தனை கனவுகள். எந்த மனிதர்களிடத்திலும் புத்துணர்வு இல்லை. பெயருக்கு கூட சிரிப்பு இல்லை. சக மனிதன் என்கிற அக்கறை இல்லவே இல்லை. எல்லோரும் எதைத் தேடி ஓடுகிறார்கள் என்கிற கேள்விக்கு பணம் மட்டுமே பிரதான பதிலாக வந்து நிற்கிறது. சூழ்ச்சியையும், தந்திரமாக பிழைப்பதையும் சாமர்த்தியம் என நினைக்கிற எல்லா மனிதர்களின் வாழ்க்கையும்தான் இந்த "ஜெயிக்கிற குதிரை.' அமைதியாக பேசுகிறார் ஷக்தி சிதம்பரம். "மகா நடிகன்',"இங்கிலீஷ்காரன்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர். சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் கதை சொல்ல வருகிறார். 
இந்த கதை அனுபவம் எப்படி இருக்கும்...?
பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றால், அந்த பணத்தை சம்பாதிக்க நான் என்ன செய்தால் என்ன? இதுதான் இங்கே பலருக்கும் சிந்தனை. அப்படியான மன ஓட்டத்தில் சில, பல கொள்கைகளுடன் பயணமாகிற ஒருவனுக்கு இந்த வாழ்க்கையும், சமூகமும் கொடுத்தது என்ன என்பதுதான் கதை. கதையும், அதைச் சுற்றி வரும் சூழல்களும் செம சீரியஸாக இருக்கலாம். ஆனால், இது பக்கா காமெடி. அன்பு, அழுகை, கொண்டாட்டம், நினைத்துப் பாரக்க முடியாத உறவு முடிச்சுகள், வளர்ச்சிகள், வீழ்ச்சிகள்... என கண்ணெதிரிலேயே எல்லாவற்றையும் கலைத்து போட்டு விட்டு சிரிக்கிற இந்த வாழ்க்கையை விட காமெடி ஏதாவது இருக்கிறதா என்ன? அனுதினமும் எதார்த்தங்களில் இருந்து விலகிச் செல்வதுதானே வாழ்க்கை? அதிலும் அடித்து முன்னுக்கு நிற்கிற இந்த மனித வாழ்க்கை விநோதம்தானே. எதையும் சீரியஸாக யோசிக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க காமெடி படம். இன்றைய அரசியல், சினிமா நிகழ்வுகளை கதையின் பின்னணியில் காமெடியாக சித்தரித்திருக்கிறேன். 
சமூக பொறுப்பின்மையுடன் வாழ்வதே நடுத்தர மக்களின் இயல்பு என்பதுதான் முந்தைய சினிமாக்களில் வரும் நியதி... அப்படித்தான் இருக்குமா இந்த கதை ஓட்டம்...?
ஷங்கர் சார் படங்களில் ""என்னங்க நாடு...?''
 என்கிற பாணியில் ஒரு மிடில் கிளாஸ் மாதவன் கருத்துச் சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால், பெரும்பான்மையான நடுத்தர வர்க்கம் நினைப்பது போல் நாம் இல்லை. சூழ்ச்சியும், மாயத் தந்திரங்களும் நிரம்பிய சமூகத்தை கட்டமைத்ததே இந்த நடுத்தர வர்க்கம்தான். பிளாக்கில் வாங்கிய எரிவாயு கனெக்ஷன் வைத்திருப்பது, ஆண்டு வருமானம் 40 ஆயிரம் என்று சொல்லி சலுகைகளை அனுபவிப்பது என ஒவ்வொரு இடத்திலும், இந்த வர்க்கம் தன் பிள்ளைகளுக்கு சூழ்ச்சி வலை பின்ன கற்றுக் கொடுக்கிறது. இன்னொரு பக்கம், சமூகத்தால் காமெடியர்களாக பார்க்கப்படுகிற யாரும் காமெடியன்கள் இல்லை. எல்லாம் காரியவாதிகள். இந்த சமூகம்தான் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறது. சாண் வயிற்றுக்காக திருடுபவனை விட, மக்களின் சேவகராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு திருடுபவர்களின் உலகத்தை எட்டிப் பார்ப்பதுதான் இந்த கதை.  
ஜீவனுக்கு கதை என்றாலே, இப்படித்தான் எழுதுவார்களா...?
இந்த கதையின் மீது அப்படி ஒரு நம்பிக்கை எனக்கு. ஆனால், நினைத்த நேரத்தில் எடுத்து வர முடியவில்லை. பண ரீதியாக பெரும் நஷ்டம் இருந்தது. அதையெல்லாம் சரி செய்து வரத்தான் இந்த தாமதம். இந்தக் கதைக்கு விஜய்சேதுபதியை யோசித்தேன். ஆனால், அவர் பிஸி. அதனால் வேறு யாரை இதில் வைக்கலாம் என யோசித்த போதுதான், விமான நிலையத்தில் தற்செயலாக ஜீவனை சந்தித்தேன். அவரது அப்பாவின் மரணம் அவரை ரொம்பவே உலுக்கியிருந்தது. அந்த நேரத்தில் பல பட வாய்ப்புகள் வந்தும், நடிப்பதையே தவிர்த்து வந்தார். நான் இந்தக் கதையை சொன்னதும், உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். இந்த படம் அவருக்கு முக்கியமான இன்னொரு பயணத்தை தொடங்கும். "யாருடா மகேஷ்'  டிம்பிள், சாக்ஷி அகர்வால் என ஹீரோயின்கள் இந்தக் கதைக்கு இன்னொரு பலம். 
 - ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com