எது செய்தாலும் உலகம் கவனிக்கணும்!

ஆடியோ கீ போர்டு, லேப்டாப், ஸ்பீக்கர் மூன்றையும் இணைத்து கண்கள் லயித்து "ஹம்' செய்கிறார்.
எது செய்தாலும் உலகம் கவனிக்கணும்!

ஆடியோ கீ போர்டு, லேப்டாப், ஸ்பீக்கர் மூன்றையும் இணைத்து கண்கள் லயித்து "ஹம்' செய்கிறார். "அசைந்தாடும் காற்றுக்கும்...' என கருப்பு வெள்ளை கட்டைகளில் டியூன் போடுகிறார். லேசாக லயம் தப்பும் போது, "நீ பாத்துட்டு போனாலும்...' என பாடல் மாற்றி சுவாரஸ்யம் சேர்க்கிறார். இயக்குநர் அவதாரம் எடுத்தாலும், இசையமைப்பாளர் என்ற இயல்பிலேயே இருக்கிறார். "பெரியண்ணா', "பார்வை ஒன்றே போதுமே', "சார்லி சாப்ளின்', "சுந்தரா டிராவல்ஸ்' என படத்துக்கு படம் ஹிட் ஆல்பம் தந்த இசையமைப்பாளர் பரணி இப்போது இயக்குநர். படத்துக்கு பெயர் "ஒண்டிக்கட்ட.' 

இசையமைப்பாளர்கள் எல்லாம் ஹீரோக்கள் ஆகிற கால கட்டத்தில், நீங்கள் இயக்குநர் என மாற்றி யோசிக்கிறீர்களே...?

கொஞ்சம் இசை ஞானம் இருந்தது. எல்லாரையும் கேட்கும் வைக்கும் திறன் இருந்தது. அது மட்டுமே என்னை மக்கள் அறியும் வண்ணம் செய்தது. இத்தனை வருட நீண்ட பயணத்தில், இதுவரை 40 படங்களுக்குதான் என்னால் இசையமைக்க முடிந்தது. இது ரொம்பக் குறைவுதான். ஆனால், என் தொழில் மீது இருக்கிற திருப்தி அதை விட முக்கியமானது. 100 படங்கள் செய்தோம் என்று கணக்கு வைத்துக் கொண்டு பயணிக்க எனக்கு விருப்பமில்லை. "நல்ல இசை தருகிறேன், ஒரு படம் பண்ணலாமா சார்....' என திறன் வாய்ந்த பல இயக்குநர்களை நானே அணுகி பேசியிருக்கிறேன். ஆனால், யாரும் உடன் பயணிக்கத் தயாரில்லை. சரி வருகிற வாய்ப்புகளுக்கு இசை தருவோம் என்பதற்கும் மனமில்லை. அதனால்தான் இந்த இடைவெளியில் நானே ஒரு இயக்குநராக உருமாறி விட்டேன். எது செய்தாலும் நம்மை இந்த உலகம் கவனிக்க வேண்டும் என ஒரு சினிமாவில் வருகிற வசனம் மாதிரிதான், இந்த இயக்குநர் இடம். நல்ல சினிமாக்கள் பற்றி நிறைய கனவுகள் உண்டு. இதுவும் ஒரு நல்ல சினிமா என்ற நோக்கில் எடுத்து வருகிறேன். 

படம் எப்படி இருக்கும்..?

என் காதலி உன் மனைவியாகலாம்... உன் மனைவி என் காதலியாக முடியாது... இது பாக்யராஜ் சார் பேசும் வசனம். இந்த வசனத் தழுவல்தான் இந்தக் கதை. தஞ்சாவூர் பக்கம் கிராமத்தில் இருந்த போது, செவி வழிச் செய்தியாக வந்த ஒரு சம்பவம்தான் திரைக்கதை. அந்த நிஜ சம்பவத்தின் லைன் மட்டுமே எடுத்துக் கொண்டு, சினிமாவுக்கான சமரசங்களுடன் செய்து முடித்திருக்கிறேன்.  பிரிந்து போகிற காதலி எப்படி மீண்டும் ஹீரோவைத் தேடி வருகிறார் என்பதை சுவாரஸ்யம் குறையாமல் சொல்லியிருக்கேன். 

காதல், அன்பு, மனிதநேயம், சமூக அக்கறை என்று படம் முழுக்க மென்மையான உணர்வுகள் கூடவே வரும். மொழி, மதம், ஜாதி கடந்தும் நிலைத்து நிற்பது அன்பும் மனிதநேயமும்தான் என்று இந்தப் படத்தில் அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். "அழகி', "பருத்தி வீரன்', "வெயில்' மாதிரி எதார்த்தமான கதைக் களம் இந்தப் படத்தில் இருக்கும். 

இப்போதைய சினிமா டிரெண்டுக்கு இந்த மென்மையான உணர்வுகளை சொல்வது சரியாக வருமா...?

எப்போதுமே மென்மையான உணர்வுகளை எல்லாரும் மதிப்பார்கள். சினிமாவில் எப்போதும் டிரெண்ட் என்று ஒரு விஷயம் இல்லை. நாம் சொல்ல வருகிற  விஷயத்தை சரியா சொன்னாலே போதும். மக்கள் அதை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். 

காமெடி, கமர்ஷியல் என சில படங்கள் ஜெயித்து விட்டால், எல்லாப் படங்களும் ஜெயித்து விட்டதாக நினைக்கிறோம். அது அப்படி இல்லை. விஷுவல் ட்ரீட்மென்ட் இருந்தால் மக்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள். அதற்காகவே கதையில் வருகிற சம்பவம் நடந்த தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளிலேயே போய் படம் பிடித்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு காட்சியும் அப்படி வந்திருக்கிறது. எங்கள் ஊரின் வெயிலை, மழையை, வாழ்க்கையை, கலாசாரத்தை இந்த சினிமா மூலம் உலகத்துக்குச் சொல்லக் கூடிய வாய்ப்பாகவே இந்த படைப்பை பார்க்கிறேன். 
 

- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com