கதை என்பது வெறும் கதையல்ல!

இயக்குநர் கே. விஸ்வநாத்... 100 ஆண்டு கால தென்னிந்திய திரையுலகின் உன்னதக் கலைஞன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதாசிரியர் என அத்தனை துறைகளிலும்
கதை என்பது வெறும் கதையல்ல!

இயக்குநர் கே. விஸ்வநாத்... 100 ஆண்டு கால தென்னிந்திய திரையுலகின் உன்னதக் கலைஞன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதாசிரியர் என அத்தனை துறைகளிலும் சினிமாவை உயர்த்தி பிடிக்கும் படைப்பாளி. இப்போது மத்திய அரசு அறிவித்திருக்கும் தாதா சாஹேப் பால்கே விருது சினிமா பயணத்தில் அவருக்கான மணி மகுடம். தென்னிந்தியாவே கவனிக்கும் திரைக் கலைஞன் என்றாலும், ஆந்திரத்தில் திருப்பதிக்கு அருகில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குக் கூடத் தெரியாமல் அமைதியாக இருக்கிறார் "கலா தபஸ்வி' என ஆந்திர மக்களால் அழைக்கப்படும் விஸ்வநாத். 

ஐந்து தேசிய விருதுகள், 20 நந்தி விருதுகள், பத்துக்கும் அதிகமான ஃபிலிம்பேர் விருதுகள்... இப்போது சினிமாவின் உயரிய தாதா சாஹேப் பால்கே விருது என பெரிய அங்கீகாரங்கள்.... ஆனாலும், இந்த எளிமை எப்படி கைக் கூடி வந்தது....?

விருதுகளையும், பாராட்டுகளையும் பெரிதும் மதிக்கிறேன். ஆனால், விருது மேடைகளை விட்டு இறங்கும் போதே, அந்த விருதுகளையும் மறந்து விடுவேன். அதனால் எந்த விருதும் என்னிடம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. தாதா சாஹேப் பால்கே விருது என் பயணத்தில் இன்னுமொரு அழகு. அவ்வளவுதான். 

உங்கள் படத்தின் கதையை எதன் அடிப்படையில் தீர்மானிப்பீர்கள்...? அதன் அளவுகோல் என்ன...?

நான் என் கதையை கற்பனையாக யோசித்ததே இல்லை. என்னை பாதித்த விஷயங்கள், சந்தித்த மனிதர்கள், வாசித்த புத்தகங்கள் என ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத புள்ளிகளில் இருந்துதான் என் படத்துக்கான கதைகளை தீர்மானிக்கிறேன். என் கதைகளும், கதாபாத்திரங்களும் நம் மண்ணையும், மக்களையும் சார்ந்ததாக இருக்கும். திரைக்கதாசிரியன் என்பவன் தான் சந்திக்காத, பார்க்காத ஒரு உலகத்தைப் பற்றி படம் எடுத்து விட முடியாது. அப்படி எடுத்தால் அது படமே கிடையாது.  எனக்கு சிறு வயதில் இருந்தே இசை, நடனம் மீது ஆர்வம் அதிகம். அந்த பாதிப்பில் இருந்து பார்த்த உலகத்தைத்தான் 
"சங்கராபரணம்', "சலங்கை ஒலி' படங்களில் பிரதிபலித்தேன். ஏனென்றால் கதை என்பது வெறும் கதையல்ல. அது பெரும் உணர்வு. அதைத்தான் என் 50 படங்களிலும் வைத்திருக்கிறேன். 

ஆரம்ப கால சினிமா வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் போது என்ன தோன்றும்...?

27 வயது இருக்கும் போது, சென்னை ஸ்டுடியோவில் சவுண்ட் இன்ஜினீயராக பயணம் தொடங்கியது. சில தெலுங்குப் படங்களுக்கு சவுண்ட் இன்ஜினீயராகப் பணியாற்றிவிட்டு, திரைப்பட இயக்கம் மீதிருந்த ஈர்ப்பின் காரணமாக, பிரபல தெலுங்கு இயக்குநர் ஆதுர்தி சுப்பாராவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். பிறகு, ராம்நாத், கே.பாலசந்தர், ஓவியர் - இயக்குநர் பாபு எனப் பல இயக்குநர்களிடம் சினிமா கற்றேன். 1965-ஆம் ஆண்டு "ஆத்மகௌரவம்' என்ற நாவலை அதே பெயரில் தெலுங்குத் திரைப்படமாக எடுத்து, இயக்குநராக அறிமுகமானேன். முதல் படமே சிறந்த திரைப்படத்துக்கான நந்தி விருதைப் பெற்றது. இதுதான் என் வாழ்க்கையின் ஆதித் தொடக்கம். இதை அடிக்கடி திரும்பி பார்த்துக் கொள்வதுண்டு. அந்த வாழ்க்கை நிகழ்வுகள் நன்றாக இருக்கும். 

ஆரம்பக் காலத்தில் இருந்து இப்போது வரையிலான சினிமா வரைக்கும், நடிகர்களின் ஆதிக்கமே சினிமாவில் அதிகமாக இருக்கிறது...?

நானும் ஒரு நடிகராக இருந்து கொண்டு, இதற்கு பதில் சொல்வது கஷ்டம்தான். (சிரிக்கிறார்) உலகில் மிகச் சிறந்த நடிகர் என எவரையும் கூறி விடமுடியாது. ஒரு இயக்குநரை சிறந்தவர் என்று அவர் இயக்கிய ஒரு படத்தை வைத்தே சொல்லி விடலாம். நடிகனை அப்படி இனம் காண முடியாது. எல்லா கதாபாத்திரங்களுக்கும் பொருந்தி வருகிற நடிகர் இன்னும் பிறக்கவில்லை. 

இப்போதைய தமிழ் சினிமாவை கவனிக்கிறீர்களா... பிடித்திருக்கிறதா...?

தமிழ் சினிமாவில் அதன் மரபு மாறாமல் அவ்வப்போது படங்கள் வருவதைப் பார்க்கிறேன். மகேந்திரன், பாலுமகேந்திரா இருவரின் படங்களும் இலக்கிய தரம் வாய்ந்தவை. ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமா மும்பையை நோக்கி இருந்தது. அதை இப்போது வந்துள்ள இயக்குநர்கள் மாற்றியிருக்கிறார்கள். இந்த இளைஞர்களிடமிருந்து இன்னும் நல்ல நல்ல சினிமாக்களை எதிர்பார்க்கிறேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com