உலகத்தில் அர்ஜுனர்கள்தான் அபூர்வம்!

எல்லா வகையான வயசுக்குள்ளேயும் ஒரே விதமான சந்தோஷமும், மன நிறைவும் இருக்கின்றன. சின்ன வயதில் சாக்லேட் கிடைக்கவில்லையென்றால்
உலகத்தில் அர்ஜுனர்கள்தான் அபூர்வம்!

எல்லா வகையான வயசுக்குள்ளேயும் ஒரே விதமான சந்தோஷமும், மன நிறைவும் இருக்கின்றன. சின்ன வயதில் சாக்லேட் கிடைக்கவில்லையென்றால் இந்த உலகமே வேண்டாம் என நினைக்கிற மனசு 20 வயதில் காதல், 40 வயதில் தொழில், 60 வயதில் கடவுள் என யோசிக்க ஆரம்பிக்கிறது. நாம் ஒவ்வொருத்தரும் அந்தந்த வயதுக்குரிய வாழ்க்கையை அதற்குரிய பருவத்தில்  வாழ்வதே இல்லை. இறந்த காலத்தை நிகழ் காலத்தில் வாழ்ந்திட முடியுமா...? அல்லது வருங்காலத்திலாவது வாழ்ந்திட முடியாதா... என்று ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனால், நிகழ்காலத்தை தவற விடாத மன நிலை வாய்க்கும் போதுதான் இங்கு எல்லாமே அர்த்தமாகிறது. ஆத்மார்த்தமாக பேசி ஈர்க்கிறார் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர். "மறுபடியும் ஒரு காதல்' படத்தை இயக்கியவர். இப்போது "பள்ளி பருவத்திலே' படத்தின் இயக்குநர்.

மாணவர்களின் பள்ளி சூழலில் இங்கே நூறு படங்கள் வந்து விட்டன... அதிலிருந்து இது எப்படி வித்தியாசப்படும்...?
நிறைய வித்தியாசங்கள் இருக்கும். பள்ளி மாணவர்களின் கதை என்றாலே, வரம்பு மீறிய காதல், காமம், பெற்றோர்களை ஏமாற்றுவது, பொய் சொல்லுவது.. இன்னும் இன்னப் பிற மீறல்களைத்தான் பல சினிமாக்கள் அர்த்தப்படுத்தி வந்திருக்கின்றன. இது அது போன்று இருக்காது. நல்ல சினிமாக்கள் பற்றி நல்ல கனவுகள் உண்டு. அதன் மீட்புருவாக்கத்தில் நான் எழுதிய கதை இது. ஒரத்தநாடு பக்கம் கிராமத்து வாழ்க்கை என் பூர்வீகம். இப்போது சென்னை, மலேசியா என வாழ்க்கை மாறி மாறி பயணிக்கிறது. ஆனாலும், எப்போதைக்குமான மனசு அந்தப் பள்ளி வாழ்க்கையிலேயே சிலாகிக்க விரும்புகிறது. சக தோழர்கள், ஆசிரியர்கள், அந்த மர நிழல், குளம், ஆறு என எதையும் மறக்க மறுக்கிறது மனசு. ஆயிரங்களில் இருந்து லட்சங்களுக்கு மாறின வாழ்க்கை கிடைத்தாலும், இன்னொரு முறை அந்த வாழ்க்கையை வாழவே முடியாது.  வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது மாதிரி,  முகத்தால்... குரல்களால்... செயல்களால்... சாயல்களால்தான் நம் பிரிவுகளையும் பிரியங்களையும் நிரப்பிக் கொண்டே இருக்கிறோம். யாராவது வந்து யாருடைய இடத்தையேனும் தங்கள் சாயல்களால் இட்டு நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இதுதான் இந்தக் கதைக்கான பாதிப்பு. இதனால் இது வித்தியாசப்படும். 

வேறு என்ன மாதிரியான பின்னணி இது...?
சாரங்கன் என்று ஒரு ஆசிரியர் இருந்தார். அவர்தான் எங்கள் எல்லாருக்கும் ரோல் மாடல். மாணவர்களின் நலனை மட்டுமே குறியாக கொண்டு வாழ்ந்தவர். டாக்டர், இன்ஜினியர், வழக்கறிஞர், பத்திரிகையாளர் என பல பேருக்கு சமூகத்தில் அந்தஸ்து கொடுத்தவர். அந்த ஆசிரியரின் அர்ப்பணிப்பு இந்தக் கதையின் பேசு பொருளாக இருக்கும். உலகத்தில் அர்ஜுனர்கள்தான் அபூர்வம். தகுதியான ஒரு குரு கிடைக்கலாம். அவருக்கு தட்சணைத் தரலாம். வேண்டிய மட்டும் வித்தைகள் பழகலாம். ஆனாலும், குருவை மிஞ்சும் சிஷ்யன் என்று பெயர் எடுப்பது பெரிய விஷயம். ஒரு குரு பல விதமான பரீட்சைகள் வைத்து, திறமையான ஒருவனை தேர்ந்தெடுத்து இவன்தான் என் சிஷ்யன் என்று சொல்கிற முதிர்ச்சியை விட, இப்படிப்பட்ட ஒருத்தர்தான் என் குரு என்று, ஒரு சிஷ்யன் தன் குருவைத் தேர்ந்தெடுக்கிற பக்குவம் ரொம்ப பெரிய விஷயம். இப்படி பல சிஷ்யர்களை உருவாக்கி விட்ட, அந்த குருவுக்கு ஒரு பெரிய பிரச்னை... அது என்ன? எப்படி? என்பது கதையின் போக்காக போகும். 

கே.எஸ்.ரவிகுமார், பொன்வண்ணன், ஊர்வசி, ஆர்.கே.சுரேஷ் என நம்பகமான நடிகர்கள் இருப்பது, கதைக்கு பலம்...?
சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த போது, நான் போய் நின்ற இடம் கே.எஸ்.ரவிகுமார் அலுவலகம். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது நான் இயக்கும் சினிமாவில் அவர் நடிப்பது எனக்கு பெருமை. அந்த சாரங்கன் ஆசிரியர் அவர்தான். அதைப் போல் பொன்வண்ணன், ஊர்வசி, ஆர்.கே.சுரேஷ் என எல்லாரும் என் மீதும், என் கதையின் மீதும் இருந்த நம்பிக்கையில் கை கோத்தார்கள். நந்தன் ராம் ஹீரோ. இசையமைப்பாளர் சிற்பியின் மகன். ஹீரோயின் வெண்பா. "கற்றது தமிழ்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஈர்த்தவர். இதைத் தவிர தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, பேராசிரியர் ஞானசம்பந்தம், "பருத்தி வீரன்' சுஜாதா என எல்லாருக்கும் பரிச்சயமான நடிகர்கள். கதை கேட்ட உடனே, நடிக்க வந்த எல்லாருக்கும் நன்றி. வைரமுத்து சாருக்கு நான் பெரிய ரசிகன். அதனால் அவர்தான் பாடல் எழுத வேண்டும் என்று போய் நின்றேன். கதை கேட்டு விட்டு, இது என்ன விருதுக்காக எடுக்கப்படும் படமா? என்றார். அதுவும் நோக்கம் என்றேன். மூன்று பாடல்கள் தந்தார். மாணவ சமுதாயத்தின் எழுச்சியை, விளக்கும் விதமாக ஒரு சூழல்... அதற்கான ஒரு பாடலில் "காற்றை வெட்டிக் கொல்ல வாள் ஏது...?'' என்று ஒரு வரி போட்டுக் கொடுத்தார். அந்தப் பாடல் அத்தனை ஜீவனாக வந்திருக்கிறது.
 - ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com