முகம் காட்டும் மிர்ரர் கேக்!

மிர்ரர் கேக், ஆரஞ்சு ஷிபான் கேக், ரெட் பெல் வித் ஒயிட் சாக்லெட் கேக் இவையெல்லாம் என்ன? என்று யோசிக்கிறீர்களா?
முகம் காட்டும் மிர்ரர் கேக்!

மிர்ரர் கேக், ஆரஞ்சு ஷிபான் கேக், ரெட் பெல் வித் ஒயிட் சாக்லெட் கேக் இவையெல்லாம் என்ன? என்று யோசிக்கிறீர்களா? இவையெல்லாம் புதுவித கேக்கின் வகைகள். இவைகளை செய்து, இன்று ஃபேஸ்புக் உலகில் மிகப் பிரபலமாக இருப்பவர் ப்ரியங்கா. இவர், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு வரை சாதாரண இல்லத்தரசியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைச் சந்தித்தோம்:

"எனக்கு சிறுவயதிலிருந்தே ஏதாவது வேலைக்குச் செல்ல வேண்டும். சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசை. ஆனால் கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணம். குடும்பம், குழந்தை என்றாகிவிட்டது. கையில் பத்துமாத கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வேலைக்குச் செல்ல ஆசைப்படுகிறேன் என்றால் நிச்சயமாக பிறந்தவீட்டிலும் சரி, கணவர் வீட்டிலும் சரி ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் வீட்டில் சும்மாவே சுத்தி சுத்தி வருவதும், டிவி பார்ப்பதும், தூங்குவதுமாக பொழுதை கழிக்க எனக்கு விருப்பமில்லை. அதனால் பெரும்பாலும் இணையதளத்திலேயே பொழுதைக் கழிக்க ஆரம்பித்தேன். புதுப்புது சமையல் குறித்து நிறைய தேட ஆரம்பித்தேன். அப்போது தற்செயலாக கேக் செய்வது பற்றி இருந்தது. அதனைப்பார்த்துவிட்டு அவற்றின் செய்முறைகளை குறிப்பெடுத்து செய்து பார்த்தேன். நன்றாக வந்தது. வீட்டிலுள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தேன். அனைவரும் சாப்பிட்டுவிட்டு சூப்பராக இருக்கிறது. "எந்த கடையில் வாங்கியது?' என்றார்கள். நானே செய்தேன் என்றால் யாரும் நம்பவில்லை. அதனால் மீண்டும் அவர்கள் எதிரிலேயே ஒரு கேக்கை செய்து கொடுத்தேன்.

எல்லாருக்கும் ஆச்சர்யம். அதிலிருந்து வீட்டில் அடிக்கடி கேக் செய்ய ஆரம்பித்தேன். அக்கம்பக்கம் வீடுகளுக்கும் எனது கேக் செல்ல ஆரம்பித்தது. இதற்கிடைய, கல்லூரியில் படிக்கும் எனது தம்பி அவனது பிறந்தநாளுக்காக கேக் கொண்டுபோய் கல்லூரி நண்பர்களுக்கு கொடுக்க, கேக் சாப்பிட்ட அத்தனை பேருக்கும் பிடித்துப் போனது. அதிலிருந்து தம்பி கல்லூரியில் யாருக்கு பிறந்தநாள் என்றாலும் கேக் ஆர்டர் என்னிடம் வர ஆரம்பித்தது. கேக்கின் சுவை நன்றாக இருந்ததாலும், ஹோம்மேட் கேக் என்பதாலும் பிறந்தநாள் போக, வீக் எண்ட், டிரீட் என்று சும்மாவே கேக் ஆர்டர் செய்ய ஆரம்பித்தார்கள். இதையடுத்து அக்கம்பக்கம் வீடுகளிலிருந்தும், உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று ஆர்டர் நிறைய வர ஆரம்பித்துவிட்டது. கடந்த கிருஸ்துமஸின் போது இரவு பகலாக கேக் செய்து கொண்டே இருந்தேன். அவ்வளவு ஆர்டர் வந்து குவிந்துவிட்டது. நிறைய ஆர்டர்கள் வர ஆரம்பித்ததால், "OMG கேக்ஸ்' என்று பெயரிட்டுள்ளேன். இப்போதைக்கு அருகிலிருப்பவர்களுக்கு டெலிவரியும் செய்கிறோம்.

பொதுவாக சாக்லெட்கேக், வெண்ணிலா கேக் என்பது நார்மல். அப்படியில்லாமல் புதுவித கேக்களைத் தேடித் தேடி செய்கிறேன். பெரும்பாலும் சீசனல் கேக்ஸ் என்று செய்கிறேன். உதாரணமாக, இப்போது சம்மர் வந்துவிட்டதால் மாம்பழங்கள் நிறைய கிடைக்கும். அதனால் மேங்கோ கேக்ஸ் செய்கிறேன். கடையில் மேங்கோ கேக் வாங்கினால் அதில் ப்ளேவருக்காக எசன்ஸ் மட்டும்தான் உபயோகிப்பார்கள். நான் அப்படி செய்யாமல் மேங்கோவிலேயே கேக் செய்வது.

மேங்கோவிலேயே க்ரீம் செய்வது என செய்ய ஆரம்பித்தேன். இதுபோன்று அந்தந்த சீசனில் அதிகமாக கிடைக்கும் பழங்களை உபயோகப்படுத்தி செய்வதாலும் எனது கேக்கின் சுவை கூடுதலாக இருக்கிறது.

மேலும், மிர்ரர் கேக் என்னிடம் ஸ்பெஷல். மிர்ரர் கேக் என்பது கேக்கில் நம் உருவத்தையே பார்க்கலாம். கேக்கின் மீது கண்ணாடி போன்று ஜெல் வகை க்ரீம் உபயோகப்படுத்துவேன். ஆரஞ்சு ஷிபான் கேக், இந்த கேக் அவ்வளவு மென்மையாக இருக்கும். நிஜ ஆரஞ்சு ஜுஸ்ஸில் இதைச் செய்கிறேன். அதிலேயே ஆரஞ்சு க்ரஞ்சி கேக், ரெட் பெல் கேக் வித் ஒயிட் சாக்லெட் க்ரீம். இதில் கேக்கின் மீதுள்ள க்ரீம் வாயில் வைத்ததும் கரைந்துவிடும். சுவையாகவும் இருக்கும்.

இதெல்லாம் புதுப்புது வெரைட்டி. இதற்கெல்லாம் நல்ல வரவேற்பும் இருக்கிறது. கேக்கின் மீது செய்யும் அலங்காரத்தைப் பார்த்துவிட்டு சிலர், "கேக் செய்வது பற்றி படித்திருக்கிறீர்களா?' என்று கேட்கிறார்கள். "இணையதளத்தைப் பார்த்து கற்றுக் கொண்டேன்' என்றால் நம்ப மறுக்கிறார்கள்.

கேக் செய்யத் தேவையான மூலப் பொருள்கள் இங்கு கடைகளில் கிடைப்பதில் சிரமம் அதிகம். அப்படியே கிடைத்தாலும் தரமானதாக இல்லை. அதனால் ஆன்லைனில்தான் மூலப்பொருள்களை ஆர்டர் செய்கிறேன். அதுப்போன்று கேக் ஆர்டர் வந்தால், அன்றே செய்து அன்றே டெலிவரியும் செய்துவிடுவேன்.

அதனால் கேக்கின் சுவை கூடுதலாக இருக்கிறது. 1 கிலோ கேக் என்றால், அதில் குறைந்தபட்சம் 200 கிராமாவது கூடுதலாக இருக்கும். இது எல்லாம்தான் எனது கேக் விற்பனை சூடுபிடிக்கக் காரணம் என்று நினைக்கிறேன்'' என்றார்.
- ஸ்ரீதேவிகுமரேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com