பாமர மக்களுக்கும் கர்நாடக இசை! - சங்கீதா சிவகுமார்

காலம் காலமாக மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே கர்நாடக இசை சொந்தமாக இருப்பதை மாற்றி, பாமர மக்களுக்கும்
பாமர மக்களுக்கும் கர்நாடக இசை! - சங்கீதா சிவகுமார்

காலம் காலமாக மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே கர்நாடக இசை சொந்தமாக இருப்பதை மாற்றி, பாமர மக்களுக்கும் கர்நாடக இசை போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் மீனவ குப்பத்து பிள்ளைகளுக்கும், மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கும் இலவசமாக முறைப்படி கர்நாடக இசையையும், இசை வாத்தியங்கள் இசைக்கவும் கற்றுத் தருகிறார் கர்நாடக இசைப் பாடகி சங்கீதா சிவகுமார். இவர், பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணாவின் மனைவியும் ஆவார்.  

இவரைச் சந்தித்தோம்:
"எனக்குப் பூர்வீகம் எர்ணாகுளம். சிறுவயதிலேயே எனக்கு இசை மீதிருந்த ஆர்வத்தினால், ஒரு மார்கழி திருவிழாவிற்கு உறவினர் மூலம் சென்னை வந்தேன். எம்.எஸ்.அம்மா, டி.கே. பட்டம்மாள், செம்மங்குடி மாமா, டி.கே.ஜெயராமன்.  இவர்களுடைய பாடல்களையெல்லாம் கேட்டு மயங்கிவிட்டேன். அப்போதே  இசைதான் எனக்கான துறை என்று முடிவு செய்துவிட்டேன். எம்.பி.ஏ படிப்பேன் என்று எதிர்பார்த்த என் பெற்றோர் என்னை புரிந்து கொண்டு எனக்காக வீட்டையே சென்னைக்கு மாற்றினர். ஸ்டெல்லா மேரிஸில்தான் பி.எஸ்.சி கணிதம் படித்தேன். இங்கே வந்தப்பறம் சாருமதி ராமச்சந்திரனிடம் இசை கற்றுக் கொண்டேன். அப்போதெல்லாம் நான் பார்த்த ஒரு விஷயம் இளைஞர்கள் யாரும் அவ்வளவாக இசைத்துறையில் இல்லை. 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள்தான் பாடிக் கொண்டிருந்தார்கள். இளைஞர்களுக்கு பாடுவதற்கு ஒரு மேடை கிடைப்பது என்பது பிரம்ம பிரயத்தனம். 

இந்நிலையில்  இளைஞர்களுக்கும் இசைத்துறையில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இசை பயின்றுகொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து YACM (youth Association for carnatic music) என ஓர் அமைப்பை உருவாக்கினோம். அதில்  டி.எம். கிருஷ்ணாவும் பொறுப்பில் இருந்தார். இந்த அமைப்பில் 30 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டும்தான் இருக்க முடியும். இந்த அமைப்பு தொடங்கிய பிறகு எங்களுக்காக நாங்களே மேடைகளை  உருவாக்கி கச்சேரிகளை அமைத்துக் கொண்டோம்.  அங்கேதான் கிருஷ்ணாவையும் சந்தித்தேன்.  திருமணமும் செய்து கொண்டேன். அது மறக்க முடியாத நிகழ்வு. 

அந்த சமயத்தில்தான் 2000- ஆம் ஆண்டு தொடங்கியது. அது மில்லனியம் ஆண்டு என்பதால் அப்போது நடந்த மார்கழி திருவிழாவை மிக விமர்சையாக கொண்டாட நினைத்தோம். அதற்காக, அப்போது இசை ஜாம்பவான்களாக இருந்த பெரியவர்கள் அனைவரையும் அழைத்தோம். இரவு முழுவதும், இசையை மையமாக வைத்து விளையாட்டு, ஸ்டால்ஸ், கேம்ஸ் என அமர்க்களப்படுத்தினோம். அந்த விழாவின் ஹை லைட் பார்த்தீங்கன்னா, ஒரு 600 ஸ்கூல் பிள்ளைகளை  25 பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுத்து, மைத்ரி பாடவைத்தோம்.  அவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்ற அந்த தருணங்கள் மிக அருமையானது. 

அதன்பிறகு  இளைஞர்களுக்கும் சபாக்களில் பாட வாய்ப்பு  கிடைக்க ஆரம்பித்தது. இந்த பீரியட்ல தான் ஒரு குரூப் அப்படியே மேலே வந்தார்கள். உன்னிகிருஷ்ணன், சஞ்சய் சிவா, பாம்பே ஜெயஸ்ரீ,  நித்யஸ்ரீ, டி.எம்.கிருஷ்ணா என பலரும்  வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தார்கள். இப்படி படிப்படியாக வளர்ந்து விட்டோம். 

எங்களுக்கு அடுத்த ஜெனரேஷனும் வந்தாச்சு. எனக்குள் எப்பவுமே ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. பொதுவாக இசை எனும்போது ஒரு வகுப்பைச் சார்ந்தவர்களுக்கே சொந்தமாக இருந்து வருகிறது என்று தோன்றியது. காரணம், ஒருமுறை வாடிக்கையான பியூட்டி பார்லருக்குச் சென்றிருந்தேன். என்னுடைய பியூட்டிஷியனுக்கு  இசை கச்சேரி கேட்க வேண்டும் என்று ஆசை. அவரை கச்சேரிக்கு அழைத்தேன். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார். காரணம் கேட்டபோது, "நான் எல்லாம் எப்படிம்மா அங்கே வருவதுன்னு' சொன்னார். அந்த விஷயம் என்னை ரொம்ப பாதிச்சது. இசையைப் பொருத்தவரை நாங்கள் ரொம்ப ஈசியா நினைச்சுக்கிட்டிருந்தோம். அது அவ்வளவு ஈசி யில்லை என்பது அப்போதுதான் புரிந்தது. இதில் ஒரு விஷயம் பார்த்தீங்கன்னா இசை கச்சேரியைப் பொருத்தவரை யாரையும் வரக் கூடாதுன்னு யாரும் சொல்வதில்லை. அதேபோன்று யாரையும் வாவென்று யாரும் அழைப்பதுமில்லை. அந்த வேறுபாடு சமூகத்தில் கட்டாயமாக இருக்கிறது. 

இந்தநிலை மாறிவர ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். கிருஷ்ணாவுடன் ஆலோசித்தேன். அவருக்கும் அதில் ஆர்வம் இருந்தது. சரி என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, இசை அடித்தட்டு மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்று நினைத்தோம். இதற்காக பெசன்ட்நகர் பக்கத்தில் உள்ள  ஊருர்ஆல்காட் குப்பம் என்ற மீனவ கிராமத்தை தேர்ந்தெடுத்தோம். அங்கே உள்ள மக்களுக்கு நல உதவிகள் செய்து வரும் நித்தியானந்த் உதவியுடன் அந்த மக்களிடம் பேசி புரிய வைத்து கர்நாடக இசையுடன், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு என ஊருர்ஆல்காட் குப்பம் விழா என இரண்டுநாள் நிகழ்ச்சியை நடத்தினோம். அதிலிருந்து தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக இவ்விழாவை நடத்தி வருகிறோம். 

குழந்தைகள்தான்  இந்த நாட்டின் வருங்காலத் தூண்கள். அவர்களை சின்னதிலிருந்தே கலைகளில் ஈடுபடுத்தி  நல்லதொரு அடிப்படை  கொடுத்துவிட்டால், அவர்கள் வளர வளர வளமான வாழ்க்கை அமையும், நாடும் நன்மை பெறும் என்று நினைத்தேன். இதற்கு ஆரம்பகட்டமாக பெசன்ட் நகரில் உள்ள அவ்வை ஹோமில் உள்ள பிள்ளைகளுக்கும், ஊருர்ஆல்காட் குப்பத்தில் உள்ள பிள்ளைகளுக்கும் இசை மற்றும் இசை வாத்தியங்கள் வாசிக்க கற்றுக் கொடுத்தோம்.

அவ்வை ஹோமை பொருத்தவரை பெண்கள் மட்டுமே இருக்கும் இடம். பெண் பிள்ளைகள் வாத்தியங்கள் வாசிப்பார்களா? என்ற சந்தேகம் எழுப்பினர். நிச்சயம் வாசிக்க முடியும் என்று கற்றுக் கொடுக்க ஆரம்பித்தோம். கர்நாடக இசையுடன் சேர்த்து பறை இசையையும் வாசிக்க சொல்லிக் கொடுத்தோம். ஒரு டீம்மாக சேர்ந்து 20 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பறை இசை, கடம், கஞ்சிரா எல்லாம் வாசிக்க கற்றுக் கொடுத்தோம். அவை எல்லாம் வாசிப்பது அவ்வளவு சுலபமல்ல.  ஆனால் அந்த பிள்ளைகள் அவற்றை வெகு அழகாக வாசிக்கிறார்கள். ஆர்வமுடன் கற்றுக் கொள்கிறார்கள். அதில் ஒருபெண் கடம் வைத்துக் கொள்ளும் அழகே அழகு.

இதன்  அடிப்படையில் தொடங்கப்பட்டதுதான் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு இசை கற்றுக் கொடுப்பது. கலையை எல்லா தளத்திற்கும் கொண்டு போக இது ஒரு வாய்ப்பாக இருக்கும். தற்போதைக்கு எல்டாம்ஸ் சாலை, கோட்டூர்புரம், கோபாலபுரம், தரமணி ஆகிய நான்கு இடங்களில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் இருந்து சுமார் 100 பிள்ளைகளை  தேர்ந்தெடுத்து 6- 7 வது வகுப்பில் இருந்து  தொடங்கி நான்கு ஆண்டுகளாவது அவர்களுக்கு இசையை முறைப்படி கற்றுக் கொடுப்பதுதான் எங்கள் நோக்கம். 

அதைத்தான் செயல்படுத்தி வருகிறோம். இதற்கு எங்களுக்கு உறுதுணையாக ஆன்மஜோதி நடராஜனும் உதவி வருகிறார். எடுத்தவுடேனேயே அந்த  பிள்ளைகளுக்கு ச.. ரி..க..ம.. என்றால் எதுவும் புரியாது. அதனால்  வருணிகா என்ற எங்கள் தோழி ஏலேலோ ஐலசா... போன்ற கட்டுமர பாடல், அரசமரம்.... அரசமரம்... ஆற்றோரம் அரசமரம்... போன்ற  கர்நாடக இசையில் நாட்டுபுறப் பாடல் போன்று எழுதி மெட்டமைத்துக் கொடுத்தார். இதெல்லாம் அவர்களுக்கு புரிதலையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி உள்ளது'' என்றார். 
 - ஸ்ரீதேவிகுமரேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com