சமையல்.... சமையல்.... சமையல்....

ஸ்வீட் கார்ன் முந்திரி கேக், கடலை - துவரை கோதுமை ரொட்டி, பைங்கன் பாஜா, வெண்டைக்காய்  மல்லி சப்ஜி

ஸ்வீட் கார்ன் முந்திரி கேக்!

தேவையானவை: 
ஸ்வீட் கார்ன்- 2
முந்திரி பருப்பு - 100 கிராம்
கோவா - 200 கிராம்
சர்க்கரை - முக்கால் கிலோ
 நெய் - ஒரு பெரிய கிண்ணம்
ஏலப்பொடி - 1 சிட்டிகை
பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
குங்குமப்பூ - சிறிதளவு
 கேசரி பவுடர் - 1 சிட்டிகை
செய்முறை: ஸ்வீட் கார்னை வேகவைத்து, உதிர்த்துக் கொள்ளவும். பின்னர் உதிர்த்த கார்னை மைப்போன்று மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின்னர், முந்திரி பருப்பை, வெறும் வாணலியில் மொரமொரப்பாக வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.  கோவாவை  துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய்விட்டு ஸ்வீட் கார்ன் விழுதைச் சேர்த்து,  பச்சை வாசனை போக நன்றாக வதக்கிக் கொள்ளவும். இத்துடன் முந்திரிப்பொடி,  துருவிய  கோவா சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கி தனியே வைக்கவும். பின்னர்,  இன்னொரு அடிகனமான வாணலியில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் வரை நீர்விட்டு, கரைத்து சூடாக்கவும். அது கொதித்து கம்பிப்பதம் வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, அத்துடன் உடனடியாக ஸ்வீட்கார்ன் கலவையைச் சேர்த்து, மறுபடியும் அடுப்பில் வைத்து, மீதி நெய்யை ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.  ஸ்வீட் கார்ன் முந்திரி கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு பந்துபோல  வந்ததும்,  ஏலப்பொடி, பச்சை கற்பூரம், சிறிது சூடான பாலில்  கரைத்த  குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். பின்னர்,  நெய் தடவிய  தாம்பாளத்தில் கொட்டி வில்லைகளாகப் போடவும். சுவையான ஸ்வீட் கார்ன் முந்திரி கேக் தயார்.

கடலை - துவரை கோதுமை ரொட்டி

தேவையானவை:
 கடலைப் பருப்பு - 100 கிராம்
 துவரம் பருப்பு - 100 கிராம்
 கோதுமைமாவு - 100 கிராம் 
வெங்காயம் - 1 கிண்ணம்
 பச்சை மிளகாய் - 5
கொத்துமல்லி - 1 கைப்பிடி அளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:   பருப்புகளை ஒரு மணி நேரம்  நீரில் ஊரவைத்து, கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.    பச்சைமிளகாய், கொத்துமல்லி மைப்போன்று அரைத்துக் கொள்ளவும்.  பின்னர், கோதுமை மாவு மசித்த பருப்பு, அரைத்த பச்சைமிளகாய் கொத்துமல்லி விழுது, மிகவும் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து கெட்டியான தோசை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.  பின்னர், அடுப்பில் தோசைக்கல்லைப்போட்டு சூடானதும், எண்ணெய் தடவிய பின் மாவை சிறிது எடுத்து  தோசைக் கல்லில் வைத்து பரத்தி சுற்றிலும் எண்ணெய்விட்டு அடுப்பை சிம்மில் வைத்து சுட்டெடுக்கவும்.  சுவையான கடலை துவரை கோதுமை ரொட்டி தயார். இதற்கு  தொட்டுக் கொள்ள  ஒன்றுமே வேண்டாம். அப்படியே சாப்பிடலாம்.

பைங்கன் பாஜா

தேவையானவை:
 கத்தரிக்காய் - அரை கிலோ
எண்ணெய் - அரை லிட்டர்
கடலை மாவு - 200 கிராம்
தனியா - அரை தேக்கரண்டி
பிளாக்  சால்ட் - சிறிது (மணத்திற்காக)
தேவையான அளவு - உப்பு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிது
சர்க்கரை - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
செய்முறை:  கத்தரிக்காய்  காம்புகளை நீக்கிவிட்டு, நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். கத்தரிக்காயை வேக வைக்க வேண்டாம். தனியா, மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி, இஞ்சி, கடலை மாவு, சர்க்கரை,  தேவையான உப்பு, பச்சைமிளகாய் எல்லாவற்றையும்  மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.  விழுது போன்று ஆக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு நன்கு சூடானதும், அடுப்பை சிம்மில் வைத்து கத்தரிக்காய் துண்டுகளை இந்த விழுதில் முக்கி எடுத்து எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும். பின்னர் அதன் மீது ப்ளாக் சால்ட்டை தூவவும். பைங்கன் பாஜா தயார்.

வெண்டைக்காய்  மல்லி சப்ஜி!

தேவையானவை:
வெண்டை - கால்கிலோ
 தக்காளி - 4
 வெங்காயம் - 3
கொத்துமல்லி - நறுக்கியது 1 கிண்ணம்
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறிது
பூண்டு - 4 பல்
தயிர் - சிறிது
எண்ணெய் - கால் கிண்ணம்
செய்முறை:  வெண்டைக்காயை, சுத்தம் செய்து பின் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.  நீளவாக்கில் அல்ல, அகல வாக்கில்.  பின்னர் தயிர்விட்டு பிசறி வைக்கவும். பின்னர், வாணலியில்  எண்ணெய்விட்டு, காய்ந்ததும் வெண்டைக்காயைச் சேர்த்து சிறிது நீர் தெளித்து, மூடிவைத்து வேகவிடவும். வெந்த பின் தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் மறுபடியும் வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு ,  நறுக்கிய  வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு  வதக்கவும்.  அத்துடன் கொத்துமல்லி, பச்சைமிளகாய் , இஞ்சியை  சிறிது உப்பு சேர்த்து மைப்போன்று அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.  பின்னர்,  வதக்கிய வெண்டைக்காயை   சேர்த்து உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும். சாப்பாத்தியுடன் சாப்பிட வெண்டைக்காய் மல்லி சப்ஜி அருமையாக  இருக்கும்.

மல்ட்டி ஃப்ரூட் அல்வா!


தேவையானவை: 
 முலாம்பழம் - 1
 ஆப்பிள் - கால் கிலோ
பலாச்சுளை - 10
 பூவன்பழம் - 2
தேங்காய் -  1 மூடி
ஏலப்பொடி  - 1 தேக்கரண்டி
சர்க்கரை - அரை கிலோ
முந்திரி  பருப்பு - 20 
நெய் - 200 கிராம்
செய்முறை:   முலாம்பழம்,  ஆப்பிள், தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.   பலாச்சுளையை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.  வாழைப்பழத்தை   தோலுரித்து மசித்துக் கொள்ளவும். பின்னர்,   சர்க்கரையை  கம்பி பதம் அளவு பாகு காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளவும்.  பின்னர் அடிகனமான பாத்திரத்தை  அடுப்பில் வைத்து   காய்ந்ததும், நெய் ஊற்றி பழங்கள், துருவிய தேங்காய், மசித்த பலாச்சுளை, வாழைப்பழம்  எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.  அத்துடன் சர்க்கரை பாகு சேர்த்து கிளறவும்.  நன்கு சுருண்டு அல்வா பதம் வந்ததும், முந்திரி பருப்பை வறுத்து  போடவும், ஏலத்தூளைப்போட்டு கிளறி இறக்கவும்.  சுவையான சத்தான மல்ட்டி ஃப்ரூட் அல்வா தயார். 

இந்த வாரம் சமையல் குறிப்புகளை வழங்குபவர் சுகந்தா ராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com