ரோல்பால்: உலக கோப்பை வெற்றி மறக்கமுடியாதது!

சமீபத்தில் நடந்து முடிந்த 4-ஆவது  உலககோப்பை  "ரோல்பால்'  விளையாட்டு போட்டியில் உலக கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்  இந்திய ரோல்பால் பெண்கள்  அணியினர்.  
ரோல்பால்: உலக கோப்பை வெற்றி மறக்கமுடியாதது!

சமீபத்தில் நடந்து முடிந்த 4-ஆவது  உலககோப்பை  "ரோல்பால்'  விளையாட்டு போட்டியில் உலக கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்  இந்திய ரோல்பால் பெண்கள்  அணியினர்.   அதில்  தமிழ்நாடு ரோல்பால் பெண்கள் அணியின் கேப்டனாக இருக்கும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த  சுஷ்மிதாவும்  ஒருவர். அவரைச் சந்தித்தோம்:
"சின்ன வயதில்  சம்மர் கிளாஸ் போகும் போது  அங்கே சிலர் ஸ்கேட்டிங்  செய்வதை பார்த்து  அதில் ஆர்வம் ஏற்பட்டு ஸ்கேட்டிங் பயிற்சியில் சேர்ந்தேன்.   அதில் நிறைய பரிசுகள் வாங்க ஆரம்பித்ததும்  ஈடுபாடு அதிகமாகியது. 3 வயதிலேயே ஸ்பீடு ஸ்கேட்டிங் செய்வேன்.  இந்நிலையில் 2012- இல்தான் "ரோல்பால்'   விளையாட்டைப் பற்றி எனக்கு தெரிந்தது. அதன்பிறகு ரோல்பால் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.  அப்போது ரோல்பால்  தமிழ்நாட்டில் அவ்வளவாக வளராத நேரம்.    
அந்த சமயத்தில் தென்னிந்தியா விளையாட்டு வீரர்கள் மற்ற விளையாட்டு வீரர்களைப் போன்று சலுகைகள் இங்கும் வர வேண்டும் என்று ஸ்ட்ரைக்கெல்லாம் நடத்தினார்கள்.  அதன் மூலம்  ஆண்களைவிட பெண்களுக்கு நிறைய வாய்ப்புகள்  கிடைத்தது.  பெண்கள் பிரிவிற்கு 17 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்து. ஆண்களுக்கு 19 வயதிற்கு மேல்தான் போட்டிகளில் கலந்து கொள்ள முடிந்தது.   ரோல்பால் என்பது 12 பேர் கொண்ட  டீம் கேம்.   ஆறு  பேர் மெயினிலும், ஆறு பேர் ரிவர்ஸிலும் விளையாட வேண்டும்.  அந்த வகையில் ஆண்கள் டீம் பெண்கள் டீம் என்று ஒவ்வொரு நாட்டிலிருந்தும் மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்பட்டு  உலக கோப்பை போட்டியில் கலந்து கொண்டார்கள்.   நான் இது வரை இரண்டு இண்டர்நேஷனல் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியிருக்கிறேன். ஆசிய போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன்.  
தற்போது 4- வது உலக கோப்பை பங்களாதேஷில்  நடை பெற்றது.  இதில் கிட்டத்தட்ட 40 நாடுகள் கலந்து கொண்டன.   அதில் இந்தியா கோப்பையை வென்றிருக்கிறது.  மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐஸ்வர்யா கேப்டனாக இருந்து வழிகாட்டினார். தமிழ்நாட்டிலிருந்து  நானும்,  கீர்த்திகா என்பவரும் தேர்வாகியிருந்தோம். 
 இந்தமுறை உலககோப்பை போட்டியில் கலந்து கொள்ள  உண்மையில் நான் தேர்வாக வில்லை. இது "லக்' என்று தான் சொல்ல வேண்டும்.  ஏற்கெனவே   தேர்வாகியிருந்த 12 பேரில் ஒரு பெண்ணுக்கு  கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட  எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.  இதனால் இந்த  உலக கோப்பை வெற்றி  எப்போதும் என்னால் மறக்க முடியாத விளையாட்டாக இருக்கும்.  இதையடுத்து ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு இந்தியாவிற்காக விளையாடி  வென்று வர வேண்டும் என்பதே லட்சியம்'' என்றார்.
தமிழ்நாடு  ரோல்பால் விளையாட்டின் பெண்கள் அணி பயிற்சியாளர் பிரேம்நாத் கூறுகையில்:
"ரோல்பால் 4-ஆவது உலக கோப்பை போட்டியில் கோப்பை வென்று வந்திருக்கிறோம். அதில் தமிழ்நாடு சார்பில் சுஷ்மிதா, கிருத்திகா இரண்டு பேரும் கலந்து கொண்டனர்,  உலக கோப்பை வெல்வதில் தமிழ்நாட்டின் பங்கும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 
ரோல்பால்  விளையாட்டைப் பொருத்தவரை கடந்த பத்து ஆண்டுகளாகத்தான்  தமிழ்நாட்டில் பிரபலமாக உள்ளது.  ரோல்பால் என்பது  ஸ்கேட்டிங், கைப்பந்து, கூடைப்பந்து இது மூன்றும் இணைந்த விளையாட்டு.  ஸ்கேட்டிங்கில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே ரோல்பால் விளையாட முடியும்.    ரோல்பாலுக்கு அரசு சார்பில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த விளையாட்டில் இருப்பவர்களுக்கு  ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பும் உண்டு. 
தமிழ்நாடு பெண்கள் அணிக்காக  கடந்த ஆறு ஆண்டுகளாக  கோச்சாக இருந்து பயிற்சி அளித்து வருகிறேன்.   பொதுவாக ஸ்கேட்டிங்  விளையாட்டை  வெளியேயிருந்து பார்ப்பவர்கள் ரிஸ்க்கான விளையாட்டாக நினைப்பார்கள். அதிலிருந்து ரோல்பால் என்றால் எப்படியிருக்குமோ என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால்  அப்படியேதுமில்லை, இதில் முழு கவனத்தோடும், ஆர்வத்தோடும் விளையாடினால் எல்லாமே சுலபம்தான்.  அதுபோன்று ரோல்பால் விளையாட்டில் மட்டும்தான்  சர்வ தேச அளவில் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு  ஒரே நேரத்தில் ஒரே ஏஜ் குரூப்பில் 12 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்.  அதுவே ஸ்கேட்டிங், ஸ்பீடு ஸ்கேட்டிங் எல்லாம் தனித்தனி நபராகத்தான் கலந்து கொள்ள முடியும்.  அதனால்   வரும்காலத்தில் இன்னும் நிறைய மாணவ மாணவிகள் இந்த விளையாட்டில் வர வேண்டும்'' என்றார். 
- ஸ்ரீதேவி குமரேசன்
 படங்கள்: டி. சம்பத்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com