நெற்றிக்கண்! 13

இரண்டு நாள்கள் கழித்து, அப்பாவும் அம்மாவும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, வாசல் கதவைத்தாளிட்ட பின், தாமரை துரையின் கைப்பேசியுடன் தொடர்பு கொண்டாள். ""சொல்லுங்க, தாமரை''
நெற்றிக்கண்! 13

இரண்டு நாள்கள் கழித்து, அப்பாவும் அம்மாவும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, வாசல் கதவைத்தாளிட்ட பின், தாமரை துரையின் கைப்பேசியுடன் தொடர்பு கொண்டாள். ""சொல்லுங்க, தாமரை''
அன்று தொலைபேசியில் துரைமுருகன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் தன்னோடு பேசியவற்றைச் சுருக்கமாய் ஏற்கெனவே சொல்லியிருந்த அவள் அவற்றை யெல்லாம் இப்போது விவரமாய் அவனுக்குச் சொன்னாள். 
அவள் சொல்லி முடிக்கக் காத்திருந்த பின், ""உங்கப்பாதான் அந்தாளை அப்படிப் பேச வெச்சிருக்காரு. உங்கப்பாவோட ஆஃபீஸ்ல மிமிக்ரி பண்ற ஒரு ஆளு வேலையாயிருக்கான்'' என்று தொடங்கிய அவனை அவள் இடை மறித்தாள்.
""தெரியும். அப்பா ஆஃபீஸ் ரெக்ரியேஷன் க்ளப் ட்ராமாக்கள்லே அவன் நடிச்சு நானும் பாத்திருக்கேன். அவனோட மிமிக்ரியையும் கேட்டிருக்கேன். எம். ஆர். ராதா மாதிரி, சிவாஜி கணேசன் மாதிரி, கமல் மாதிரி, கே.ஆர். விஜயா, ரேவதி மாதிரியெல்லாம் பேசிக் கைதட்டல் வாங்குவான். இருந்தும், எனக்கு அப்படி இருக்கலாமோன்னு கொஞ்சங் கூடச் சந்தேகமே வரல்லே, துரை. ஆனா அந்தாளு என்னை "நீ, உன்னை, உன்னோட'ன்னெல்லாம் ஒருமையில பேசினான். நீங்க அப்படிப் பேசப்பட்டவர் இல்லையேன்னு மட்டும் யோசிச்சேன். ஒருக்கா உணர்ச்சி வசத்துல அப்படிப் பேசுறீங்களோன்னு தோணிச்சு. எல்லாம் நம்ம துரதிருஷ்டம். ஆனா, ஒண்ணு, துரை. எங்க வீட்டுக்காரரு தங்கமானவரு. மனசால கூட அவர மாதிரி ஒரு புருஷனுக்குத் துரோகம் நினைக்கிறது ரொம்பத் தப்பு. உங்களை இழந்த வருத்தம் மட்டும் ஆரம்பத்துல இருந்திச்சு, துரை. ஆனா நான் என்னோட எண்ணங்களால கூட அவருக்குத் துரோகம் நினைச்சதே இல்லே''
""நீங்க இப்படிச் சொல்றதைக் கேட்டு எனக்கு உண்மையாவே ரொம்ப சந்தோஷமாயிருக்கு, தாமரை. ரொம்பப் பெருமையாவும் இருக்கு''
தாமரையின் விழிகளில் நீர் படர்ந்தது. தலையைத் தாழ்த்திக் கொண்டாள். பதில் சொன்னால் தனது உடைந்த குரல் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.
""உங்க கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் கழிச்சுதான் எனக்குத் தெரிஞ்சுது, தாமரை. உள்ளுர்ல கல்யாணத்தை வெச்சா நான் ஏதாச்சும் கலாட்டாப் பண்ணுவேனோன்னு உங்கப்பா திருப்பதியிலே நடத்தினதா பின்னால நான் ஊகிச்சப்போ எனக்கு மனசே சுக்கல் சுக்கலாச் செதறிப் போறாப்ல ஆயிடிச்சு. அப்பால தேத்திகிட்டேன், தாமரை! எங்கம்மாவுக்கு வந்த பயமுறுத்தல் லெட்டரெல்லாமும் உங்கப்பா வேலைதான். ஒருக்கா எல்லா அப்பா அம்மாக்களையும் போல தூக்குல தொங்குவேன்னெல்லாம் கூட அவங்க உங்களைப் பயமுறுத்தியிருக்கலாம்.''
""அதுவும் பண்ணினாங்கதான். ஆனா நான் அதுக்கெல்லாம் மசியல்லே. தூக்குல தொங்குறதுக்கு உங்களுக்கு மட்டுந்தான் தெரியுமான்னு நானும் பதிலுக்கு அவங்களை எதிர்த்துப் பேசினேன். அதனால, சீலிங் ஃபேனைக்கூட என் ரூம்லேர்ந்து கழட்டிட்டாங்க. கடைசியில அப்பிடி ஒரு ஃபோன் கால் வந்ததும் நான் நிதர்சனத்தை ஏத்துக்கிட்டேன். என்னதான் இருந்தாலும், தற்கொலை பண்ணிக்கிட்டு, உங்களையும், எங்கம்மா அப்பாவையும் சோகத்துல ஆழ்த்த நான் விரும்பல்லே. கடவுள் எனக்குன்னு விதிச்சதைக் குறை காணாம ஏத்துக்குறதுதான் புத்திசாலித்தனம்னு முடிவு பண்ணி அவருக்குக் கழுத்தை நீட்டினேன். ஆனா, துரை கல்யாணத்துக்கு அப்புறம் நான் அவருக்கு மனசால கூட துரோகமே நினைச்சதில்லே''
""நான் நம்புறேன், தாமரை! நீங்க திருப்பித் திருப்பி அதை எனக்குத் தெரிவிக்க வேண்டியதில்லே. நான் எந்த வகையிலேயும் உங்க வாழ்க்கையிலே குறுக்கிடவே மாட்டேன். இந்த ஃபோன்கால் கூட நீங்களா பண்ணினதுதான். அது கூடத் தப்புன்னு நினைக்கிறவன் நான்! நீங்க மறுபடியும் மறுபடியும் இது மாதிரிப் பேசுறதை நினைச்சா என் மேல ஏதாச்சும் சந்தேகப்படுறீங்களோன்னு தோணுது, தாமரை''
""அய்யோ! அப்படியெல்லாம் எதுவும் இல்லே. உங்க மனசு மாறி நீங்களும் கல்யாணம் பண்ணிக்கணும்கிறதுக்காகத்தான் திருப்பித் திருப்பி அது மாதிரி சொல்றேன், துரை! இப்ப இவரோட நான் சந்தோஷமாத்தான் இருக்கேன். உங்க மனசு சமாதானம் அடையணும்கிறதுக்காக நான் பொய் சொல்லல்லே, துரை! இவ்வளவு உயர்ந்த மனுஷன் கிட்டேருந்து என்னோட பழைய காலத்தை மறைக்கிறோமே, நியாயமான்ற கேள்வி மட்டும் அப்பப்போ என் மனசில தோணுது''
"'வேணாங்க! அதை மட்டும் பண்ணிடாதீங்க. உங்க வாழ்க்கையை நீங்களே நரகமாக்கிக்காதீங்க, தாமரை! நம்ம விஷயம் பத்தி அவரு கிட்ட சொல்ல மாட்டேன்னு நீங்க எனக்கு வாக்குக் குடுங்க''
""தாமரைக்கு அழுகை வெடித்துப் புறப்படும் போல் ஆயிற்று. வெகு பாடுபட்டு அடக்கிக் கொண்டாள் : சத்தியமாச் சொல்ல மாட்டேன், துரை. சத்தியமாச் சொல்லவே மாட்டேன்''
""அம்மாடி! இப்பதான் எனக்கு நிம்மதியாச்சு. அப்பால, இன்னொரு விஷயம். உங்க லெட்டர்ஸ் எல்லாம் எங்கிட்ட பத்திரமாய் இருக்கு. உங்ககிட்ட திருப்பிக் குடுத்துட்றதுதான் நியாயம். ஆனா, அதுக்கு நாம சந்திக்கணும்! அது வேண்டாமேன்னு தோணுது. யார் கண்ணுலயாவது இல்லாட்டி உங்க கணவர் பார்வையிலேயே கூட விதிவசமா சினிமாவில் வர்ற மாதிரி பட்டுட்டோம்னா வம்பை விலை குடுத்து வாங்குறதா ஆயிடும். அதனால, நானே எல்லாத்தையும் கிழிச்சுப் போட்டுடறேன். சரியா?''
""சரி, துரை''
""சத்தியமாக் கிழிச்சு எரிச்சுடுவேன். உங்களை வேற யாருக்கும் கட்டிக் குடுத்துடக் கூடாதுன்றதுக்காக அந்த லெட்டர்ûஸ வெச்சு நான் ப்ளேக்மெய்ல் பண்ணுவேன்னு உங்கப்பாவைப் பயமுறுத்தினது உண்டுதான். ஆனா உண்மையில அப்படி ஒரு எண்ணம் எனக்குக் கிடையவே கிடையாது. அதனால நானே எல்லாத்தையும் எரிச்சுடறேன். நீங்க என்னை நம்புறீங்கல்ல?''
""கண்டிப்பா, துரை. அப்படியே பண்ணிடுங்க.'' 
""அப்புறம் உங்க செல்ஃபோன்ல இப்ப டிஸ்ப்ளே ஆன என்னோட செல் நம்பரை மறக்காம அழிச்சிடுங்க, தாமரை. நீங்க குறிச்சுக்கிட்ட என் நம்பரையும் உங்க டயரியிலேர்ந்து நல்லாஅழிச்சிடுங்க''
""சரி. பண்ணிடறேன். அப்புறம், நீங்களும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும். ஒரு நல்ல பொண்ணு உங்களுக்குக் கிடைக்கணும்னு நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன். நீங்களும் அவ கிட்ட நம்ம விஷயத்தைச் சொல்லக்கூடாது. சரியா?''
""சரி, தாமரை. பாக்கலாம்''
""பாக்கலாம்னெல்லாம் சொல்லக்கூடாது. கண்டிப்பாப் பண்ணிக்கணும். இல்லாட்டி, என்னாலதானேன்னு எனக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படும். அது உங்களுக்குப் பிடிக்குமா, துரை?''
சில நொடிகளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்த பின், ""சரி, தாமரை. உங்க இஷ்டப்படியும் எங்கம்மா இஷ்டப்படியும் 
பண்ணிக்கிறேன்''
""ஆல் த பெஸ்ட், துரை''
""வெச்சுடட்டுமா?''
""சரி, துரை... ஆனா, அதுக்கு முன்னால் இன்னும் ஒரே ஒரு விஷயம். ரெண்டு நாள் முந்தி, காலையிலேர்ந்து உங்க ஞாபகமாவே இருந்திச்சு. உங்களை மறந்துட்டேன்னு நான் சொன்னா அது பச்சைப் பொய். ஆனா, அடிக்கடியெல்லாம் நினைச்சு மனசை உழப்பிக்கிறதில்லே. ஏன் இன்னைக்கு ரொம்பவே ஞாபகம் வருதுன்னு ஆச்சரியப்பட்டுக்கிட்டே இருந்தேன். அதுக்கு விடை கிடைச்சிடுச்சு. உங்களைச் சந்திக்க இருந்ததாலதான் உள்ளுணர்வா அப்படி அதிகமா ஞாபகம் 
வந்திருக்கு'' 
""எனக்கும் அதே அனுபவம்தான், தாமரை. நானும் ஆச்சரியப்பட்டுக்கிட்டே தான் இருந்தேன். இனி நாம அடிக்கடி நினைக்காம இருப்போம், தாமரை! உங்க கணவருக்கு நீங்களும் துரோகம் நினைக்க வேண்டாம். என்னோட வருங்கால மனைவிக்கு நானும் துரோகம் நினைக்க வேண்டாம். நாம வெறும் நண்பர்கள் மட்டுமேதான்கிறதா நினைப்பை மாத்திப்போம். என்ன சொல்றீங்க? நான் சொல்றது சரிதானே?''
""துரை எது சொன்னாலும் அது சரியாத்தான் இருக்கும்'' என்று சொல்லி அவள் சிரித்த சிரிப்பில் அவனும் கலந்து கொண்டான்.

வெளியே போயிருந்த சதாசிவம் மாலை ஐந்தரை மணிக்கு விசாலாட்சியுடன் வீடு திரும்பினார். இருவருக்கும் காப்பி எடுத்து வந்து தாமரை சாப்பாட்டு மேசை மீது வைத்தாள்.
அவள் வந்து இறங்கிய அன்று இருந்ததை விடவும் அவளது முகம் அதிகமாய் இறுகியிருந்ததைக் கண்ணுற்ற சதாசிவம் வியப்படைந்தார். அவளுக்குத் தம் மீது இருந்த மனத்தாங்கல் குறையவில்லை என்பது அவர் அறிந்திருந்ததுதான். இருப்பினும் அது அதிகமாகி இருந்ததாய் அவருக்குத் தோன்றியது.
""என்ன, தாமரை, ஒரு மாதிரி இருக்கே?''
""அதைப்பத்தி உங்களுக்கு என்ன கவலை?''
""என்னம்மா இப்படிப் பேசறே?''
""மிமிக்ரி ஆர்ட்டிஸ்டை வெச்சு இன்னும் என்னவெல்லாம் ஃப்ராட் பண்றதாய் இருக்கீங்க? உங்க வண்டவாளம் எனக்குத் தெரிஞ்சு போயிடிச்சு''
சதாசிவத்தின் தலை தாழ்ந்தது. 
""என்ன படிப்புப் படிச்சீங்க? ஜாதி, மதம் இதையெல்லாம் ஜெயிக்க முடியாத படிப்பு ஒரு படிப்பா?''
""இதெல்லாம் உனக்குச் சம்பந்தம் இல்லாத விஷயம்''
"'எது எனக்குச் சம்பந்தம் இல்லாத விஷயம்? என்னோட வாழ்க்கை எனக்குச் சம்பந்தம் இல்லாத விஷயமா? கட்டில் சுகத்துல பெத்துப் போட்டுட்டுத் துளிக்கூடப் பாசமே இல்லாம இருக்கிற நீங்கல்லாம் ஒரு தகப்பனா! வெக்கமாய் இல்லே?'' 
""தாமரை! வார்த்தையை அளந்து பேசு... பெத்த தகப்பன்கிற நெனப்போட பேசுடி, மரியாதை கெட்டவளே'' என்று விசாலாட்சி குறுக்கே பாய்ந்தாள். 
""நான் அப்படித்தான் பேசுவேன். பாசம் உள்ளவராயிருந்திருந்தா, என் மனசை உடைச்கிருப்பாரா? இவரு என்னைப் பெத்தவருன்ற எண்ணம் என் மனசைவிட்டுப் போயிடிச்சு. இனி இவரு யாரோ, நான் யாரோதான். பிறத்தியார் முன்னாடி மரியாதைக்குப் பேசுவேன். என் வீட்டுக்காரர், மாமியார் முன்னாடி இவரை விட்டுக்குடுக்க மாட்டேன். மத்தப்படி, இனிமே இவரோட என் மனசு ஒட்டவே ஒட்டாது. என்னைப் பத்து மாசம் சுமந்து நீங்க பெத்தீங்கன்றதுனாலயும், படிக்காதவங்கன்றதாலயும் உங்க மேல எனக்கு எந்த எரிச்சலும் இல்லே. நீங்க என் விருப்பத்துக்குச் சம்மதிக்காட்டியும் ஜாதிங்கிறது உடம்போட ஒட்டிப் பிறக்கிற ஒண்ணு இல்லேன்னு உங்களுக்கு எடுத்துச் சொல்லி என் கல்யாணத்தை நடத்தியிருந்திருக்க வேண்டிய ஒரு மனுஷன் இப்படி பண்ணி யிருக்காரே! அம்மா! உங்களுக்காக மட்டுந்தான் இனிமேற்பட்டு நான் இந்த வீட்டுக்கு வருவேன். அது கூட ரொம்ப அவசியமானா மட்டுந்தான்.''
சதாசிவம் திகைப்பும் திடுக்கீடுமாய்க் குனிந்த தலை குனிந்தவாறே உட்கார்ந்து கொண்டிருந்தார். 
தாமரை தன் கைப்பேசியை எடுத்தாள். வடிவேலுவுடன் தொலை பேசினாள்: ""என்னங்க? நாந்தான்! இன்னும் நீங்க ஆஃபீசை விட்டுக் கௌம்பல்லே இல்லே?''
""இல்லே, தாமரை! வீட்டுக்கு வழக்கமான நேரத்துக்குப் போனா போர் அடிக்குது. ஆறு மணிக்குத்தான் கௌம்புவேன். ஏன்? எதுக்குக் கேக்கறே? ஏதாச்சும் வாங்கிட்டு வந்து உங்கிட்ட குடுக்கணுமா?''
""இல்லீங்க. நான் நம்ம வீட்டுக்கு வந்துடறேன். எனக்கும் இங்கே பிடிக்கல்லீங்க. போர் அடிக்குது. அதான்...இன்னும் அரை மணி நேரத்துல இங்க இருப்பீங்களா? சரிங்க. நான் ரெடியாறேன்.''
தாமரை தன் பொருள்களைப் பையில் வைக்க எழுந்து போனதைப் பார்த்தபடி வாயிழந்தவராய்ச் சதாசிவம் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் விழிகள் கலங்கியிருந்தன.
""தாமரை! நீ செய்யறது உனக்கே நல்லாருக்காடி? உங்கப்பா அழுவுறாரு, பாரு''
""அழட்டும்! பெத்த மகளை அழ வெச்சுட்டு, இதென்ன வேஷம்! இதுக்கெல்லாம் நான் கரைய மாட்டேன். குழந்தைகளோட சந்தோஷம்தான் நம்ம சந்தோஷம்னு நினைக்கிறவங்கதான் உண்மையான அப்பா-அம்மா. மத்தவங்கெல்லாம் சும்மா''
""உன் மேல பிரியம் இல்லாமயாடி உன்னைப் பெத்து, வளத்து, படிக்க வெச்சு எல்லாம் பண்ணினோம்?''
""மிருகங்களும், பறவைங்களும் கூடத்தான் பெறுதுங்க. அதுங்கல்லாம் இப்படியா குட்டிங்களோடவும், குஞ்சுங்களோடவும் வாழ்க்கையில மண்ணை அள்ளிப் போடுதுங்க! ஒரு பொண்ணு தேர்ந்தெடுக்கிற பையன் கிட்ட குத்தம், குறை, கெட்ட நடவடிக்கை இது மாதிரி ஏதாவது இருந்தாலொழிய, பெத்தவங்க குறுக்கே வரவே கூடாது. அப்பாவாவது! அம்மாவாவது!'' என்ற தாமரை தன் பெட்டியை அடித்து மூடிவிட்டு வாசல் திண்ணைக்குப் போய் உட்கார்ந்து கணவனின் வரவுக்குக் 
காத்திருக்கலானாள். 
- முற்றும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com