"டார்கெட் கோல்ட்'

நீலகிரி மலையின் அடிவாரத்தில் கல்லாறு பகுதியில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் தவதன்யா துப்பாக்கி சுடுதலில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.
"டார்கெட் கோல்ட்'

நீலகிரி மலையின் அடிவாரத்தில் கல்லாறு பகுதியில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் தவதன்யா துப்பாக்கி சுடுதலில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடுதலுக்கான போட்டிகளில் 50 மீட்டர் ஸ்மால் புரோன் ரைபிள் பிரிவில் 3 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் மகளிர் ஜூனியர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற 7 மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற தென்மண்டல அளவிலான போட்டிகளில் மகளிர் ஜூனியர் தனிநபர் பிரிவில் ஒரு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தையும், தேசிய அளவிலான போட்டியாளர்கள் பங்கேற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் மகளிர் ஜூனியர் தனிநபர் பிரிவில் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

இவற்றைத் தவிர கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும், புணேயில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று "ஏஎஸ்எஸ்எப் ஷூட்டர்' என்ற தகுதியையும் பெற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் பகிர்ந்து கொண்டது:
"விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும்போது தேசிய மாணவர் படையில் சேர்ந்து, ரைபிள் கற்றுக் கொண்டபோதுதான் துப்பாக்கி சுடுதலின் மீது ஆர்வம் பிறந்தது. அதைத் தொடர்ந்து இந்தப் பள்ளியில் சேர்ந்ததும் தனிப்பட்ட முறையில் சிறப்பு பயிற்சிகளை எடுக்க ஆரம்பித்தேன்.

கடந்த 2 ஆண்டுகளாக கோவை ரைபிள் கிளப்பில் பயிற்சி பெற்று வருகிறேன். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தேசிய அளவில் தேர்வு பெற்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதே எனது கனவு. அடுத்த மாதம் கேரளத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்கிறேன். இதில் கிடைக்கும் கூடுதல் புள்ளிகள் எனது ஒலிம்பிக் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்" என்றார் தவதன்யா.

இவரது பயிற்சியாளர் வெங்கடாசலபதி கூறுகையில், "தவதன்யாவிடம் இயற்கையாகவே அமைதி, பொறுமை, ஒருமுகச் சிந்தனையும் அமைந்துள்ளன. தொடர்ந்து தீவிர பயிற்சிகளை மேற்கொண்டால் நாட்டுக்காகப் பதக்கம் வெல்வது சாத்தியமே'' என்றார்.
- ஏ.பேட்ரிக்





 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com