27 மணிநேர பரத நாட்டியம்

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பிறந்தநாளை கொண்டாடுவர். சிலர் நட்சத்திர ஹோட்டலில் நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து கொடுத்து பிறந்த நாளைக் கொண்டாடுவர்.
27 மணிநேர பரத நாட்டியம்

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பிறந்தநாளை கொண்டாடுவர். சிலர் நட்சத்திர ஹோட்டலில் நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து கொடுத்து பிறந்த நாளைக் கொண்டாடுவர். சிலர் அநாதை ஆசிரமங்களுக்குச் சென்று உணவு, ஆடைகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். சிலர் வீட்டிலேயே உறவினர்கள், நண்பர்களை அழைத்து "கேக்' வெட்டி கொண்டாடுவர். இவ்வாறு பலரும் பலவிதமாக தங்களது சக்திக்கு ஏற்றார் போல பிறந்த நாள் கொண்டாடுவது கலாசாரமாக மாறியுள்ளது.  

ஆனால், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதத்தில் தனது 81-ஆவது பிறந்த நாளை, தொடர்ந்து 27 மணி 30 நிமிடங்கள் பரதநாட்டியம் நிகழ்த்தி பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் பிரபல பரத நாட்டியக் கலைஞர். அவர் யாரென்று கேட்க ஆசைப்படுகிறீர்களா? அவர் வேறு யாருமல்ல...  பிரபல பரத நாட்டியக் கலைஞரும் தில்லியில் நாட்டியலாயா நடனப் பள்ளியை நடத்தி வருபவருமான சரோஜா வைத்தியநாதன்தான்.  அவரது 81-ஆவது பிறந்த நாளை வித்தியாசமாகக் கொண்டாட  நினைத்தார். அது குறித்து மாநிலம், கடல் கடந்து பரவியுள்ள தன்னிடம் பரதம் பயின்ற மாணவிகளுடன் ஆலோசித்துள்ளார்.

அதில் உதித்ததுதான் பரதநாட்டியத்தில் ஒரு சாதனை நிகழ்வு. அவரது மாணவிகள், பரதக் கலைஞர்கள் என மொத்தம் 292 பேர் இந்நிகழ்வில் பங்கேற்று தொடர்ந்து 27 மணி நேரம் 30 நிமிடங்கள் மாறி, மாறி பரத நாட்டியம் நிகழ்த்தி சாதனையை நிகழ்த்தி தங்களது குரு சரோஜா வைத்தியநாதனுக்கு பிறந்தநாள் பரிசை வழங்கியுள்ளனர்.  1974 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கணேசா நாட்டியாலயா நடனப் பள்ளி, தற்போது தெற்கு தில்லி குதூப் இன்ஸ்டிடியூஷனல் பகுதியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில்  பரதநாட்டியம் கற்றுக்கொண்ட பலர் உலகின் பல இடங்களில் பரதநாட்டியப் பள்ளிகளைத் தொடங்கி  நடத்தி வருகின்றனர்.  நாட்டின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான பரதத்தை உலகின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்கின்றனர். 

பத்மஸ்ரீ, பத்மபூஷண், கலைமாமணி, சங்கீத நாடக அகாதெமியின்  விருதுகளைப் பெற்றுள்ள "கணேசா நாட்டியாலயா'வின் நிறுவனர் தலைவரான சரோஜா வைத்தியநாதன்  அண்மையில் நிகழ்த்தப்பட்ட  தொடர் பரதநாட்டிய சாதனை குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டவை இதோ:
"என்னுடைய 81-ஆவது பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாட நினைத்தேன்.  என்னுடைய மாணவர்களிடம் விருப்பத்தைத் தெரிவித்தேன். இது தொடர்பாக உலகம் முழுவதும் உள்ள மாணவர்களைத் தொடர்பு கொண்டேன். ஒரே மேடையில் பலநூறு கலைஞர்கள் பங்கேற்று குச்சுப்புடி உள்ளிட்ட நடனங்களை நிகழ்த்தி சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.   இதேபோல பரதநாட்டியக் கலைஞர்களைக் கொண்டு  பெரிய மாநாட்டைப் போல நடத்துவதற்கு ஆசை கொண்டேன். இதையடுத்து,   பரதநாட்டியம் சாதனை முயற்சி நிகழ்வு தொடர்பான அழைப்பிதழைக் கண்டவர்கள் இதில் பங்கேற்க பெருமளவில் ஆர்வம் காட்டினர்.

இதைத் தொடர்ந்து, பரதநாட்டியம் குறித்த  "நித்ய அகண்ட நிரிட்டம்' கருத்துருவை உருவாக்கி நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டது.  ஆனால், 18 மணி நேரம், 24 மணி நேரம் தொடர் பரதநாட்டிய சாதனை ஏற்கெனவே நிகழ்த்தப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால், 27 மணி நேரம் தொடர்ந்து பரதநாட்டியம்  நிகழ்வை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.  தனிநபராக பரதத்தை நிகழ்த்தாமல், ஒருவர் ஆடி முடித்த பிறகு, மற்றொருவர் ஆடுவது என தொடர்ந்து நிகழ்வை முன்னெடுக்கத் தீர்மானித்தோம்.

27  என்ற எண்ணை நான்கால் பெருக்கினால் 108 கிடைக்கும். 27-ஐ மூன்றால் பெருக்கினால் 81 கிடைக்கும்.  இதில் 81 என்ற எண் வருவதைக் காணலாம். ஆகையால், என்னுடைய 81ஆவது பிறந்தநாளுக்காக  27 மணி 30 நிமிடங்கள் நேரம்  பரதநாட்டியம் நிகழ்த்தி சாதனையைப் படைத்திட்டோம்.  இந்த நடன நிகழ்வு  "ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டு', "இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு' ஆகியவற்றில்  இடம் பெற்றுள்ளது. 

இந்த விழாவில்,  கெளரவ விருந்தினராக கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹாவும், கெüரவ விருந்தினராக மத்திய கலாசாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மாவும் பங்கேற்றனர்.  இந்த நிகழ்வு செப்டம்பர் 23-ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி, மறுநாள் பிற்பகல் 1-மணி வரை நடைபெற்றது. இதில் நானும்,  எனது மாணவர்கள், பரதக் கலைஞர்கள் என மொத்தம் 293 பேர் பங்கேற்றோம்.  பரதநாட்டியத்தை தனியாகவும்,  குழுவாகவும் வழங்கினர். இந்த நிகழ்வில் பங்கேற்ற கலைஞர்களில் 70 -க்கும் மேற்பட்டோர் என்னிடம் பரதம் பயின்றவர்கள் என்பது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் 55 பரதநாட்டிய குருக்கள் பங்கேற்றனர்.  இந்த சாதனை நிகழ்வுக்காக ஆஸ்திரியா, ஈராக், உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்தனர். இந்தியாவில் மும்பை, புணே,  திருச்சி, கோயம்புத்தூர்,  கொல்கத்தா ஆகிய நகரங்களிலிருந்தும்,   ஜார்க்கண்ட்,  பிகார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்தும் பரதநாட்டியக் கலைஞர்கள் வந்திருந்தனர்.

இந்நிகழ்வில் வசுந்தரா துரைசாமி (பெங்களூரு), கீதா சந்திரன், கனகா சுதாகர் (தில்லி)  பிரியா வெங்கட்ராமன் (குருகிராம்), ராதா அஞ்சலி  (ஆஸ்திரேலியா), ஜமுனா கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, ரமா வைத்தியநாதன், கனகா ஸ்ரீனிவாசனின்  மாணவர்கள் (தில்லி), கோபிகா வர்மா, ரோஜா கண்ணன், ரங்கநாயகி ஜெயராமனின்  மாணவிகள் (சென்னை) ஆகிய முக்கியக் கலைஞர்கள் பங்கேற்றனர். பரதநாட்டியக் கலைஞர்களைக் கொண்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது மனதுக்கு நிறைவாக உள்ளது.  இந்த நிகழ்வுக்குப் பிறகு மீண்டும் கூடுதல் வலிமை பெற்றதாக உணர்கிறேன்.  கடவுளின் அனுக்கிரஹமும் தேவையாகிறது''  என்று ஆனந்தக் கண்ணீருடன் சொல்லி முடித்தார் சரோஜா வைத்தியநாதன். 

65 ஆண்டுகளாக தொடர்ந்து பரதநாட்டிய கலைக்கே தன்னை அர்ப்பணித்து வரும் மகா கலைஞர் வேராகி உலகம் முழுவதும்  தனது விழுதுகளை விட்டுள்ளார். இந்த வேருக்கு விழுதுகள் அளித்த பிறந்தநாள் பரிசாகவே இந்த மாபெரும் பரதநாட்டிய நிகழ்வு அமைந்திருந்தது. வாழும் கலை அமைப்பின் சார்பில் மார்ச் 11-12 ஆகிய  தேதிகளில் தில்லியில் நடைபெற்ற உலக கலாசாரத் திருவிழாவில் 1,700 பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான பரத நாட்டிய நிகழ்ச்சியை சரோஜா வைத்தியநாதன் வடிவமைத்து சாதனை புரிந்து அனைவரின் பாராட்டையும்  பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எம்.வெங்கடேசன்
படங்கள்: டி. ராமகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com