நெற்றிக்கண்! 8 - ஜோதிர்லதா கிரிஜா

"இதோ, உங்கப்பாவே வந்துட்டாரு, மேடம். பேசுறீங்களா?''  என்று அவன் அந்தக் கணத்தில் தனது தடுமாற்றத்தைச் சமாளித்துக்கொண்டு ஒலிவாங்கியை மேசை மீது கிடத்திவிட்டுத் தனது இருக்கைக்குப் போய் உட்கார்ந்தான்.
நெற்றிக்கண்! 8 - ஜோதிர்லதா கிரிஜா

"இதோ, உங்கப்பாவே வந்துட்டாரு, மேடம். பேசுறீங்களா?''  என்று அவன் அந்தக் கணத்தில் தனது தடுமாற்றத்தைச் சமாளித்துக்கொண்டு ஒலிவாங்கியை மேசை மீது கிடத்திவிட்டுத் தனது இருக்கைக்குப் போய் உட்கார்ந்தான். நாற்காலி ஓசைப்பட்டதிலிருந்து அது தாமரைக்குப் புரிந்தது.  
 அவளுக்குப் படபடவென்று வந்துவிட்டது. தொலைபேசியின் மறுமுனையில் தான் இருந்த கணத்தில், "தொலைபேசிப் பேச்சின்போது அவளுடன் சேர்ந்துகொண்டு இரைச்சலாய்ச் சிரிக்கிற அளவுக்குத் தாமரை என்ன சொல்லியிருந்திருப்பாள்' எனும் கேள்வி அப்பாவின் மனத்தில் நிச்சயம் தோன்றியிருக்கும். அப்பா ரொம்பவும் அறிவுக்கூர்மையுள்ளவர். என்ன விஷயம் என்று என்னைக் கேட்பதோடு நிறுத்தாமல் துரையையும் கண்டிப்பாய்க் கேட்பார்.  இரண்டு பதில்களும் முரண்பட்டால் கண்டுபிடித்து விடுவார்' என்று தோன்றியதில் அவளுக்கு வெலவெலவென்று இருந்தது. "அப்பா கேட்டால் என்ன சொல்லுவது?' என்று ஒன்றும் புரியவில்லை. இருப்பினும், தனது தயக்கம், அச்சம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு ஒரு நாள் உண்மையைச் சொல்லித்தானே தீர வேண்டும் எனும் கேள்வியும் அவள் உள்ளத்தில் எழவே செய்தது.
 சதாசிவம் ஒலிவாங்கியை எடுத்து, "ஹலோ'' என்றதும்,  "அப்பா! நீங்க ஆபீஸ்லேர்ந்து வர்றப்ப பாண்ட்ஸ் சந்தனப் பவுடர் - ஃபேஸ் பவுடர் - மறக்காம வாங்கிட்டு வாங்கப்பா. அதுக்குத்தான்  ஃபோன் பண்ணினேன்'' என்று சமாளிக்கப் பார்த்தாள்.
 "நான் திரும்பி வர்றதுக்கு ரெண்டு மணி நேரமாவது ஆகும்னு சொல்லியும்  ஃபோன் பண்ணியிருக்கியே? நான் ஒரு முக்கியமான  ஃபைலை மறந்து இங்கேயே விட்டுட்டுப் போயிட்டேன். அதை எடுக்கிறதுக்காகத்தான் போன சுருக்குல திரும்பிவந்தேன்''  என்று அவர் ஒரு மாதிரியான தொனியில்  கூறவும்,  "வெளியே கிளம்பிட்டிருக்கிறதா, அதான் சொன்னீங்களேப்பா.  நான் துரைகிட்ட பாண்ட்ஸ் பவுடர் வேணும்னு சொல்லி, உங்ககிட்ட சொல்லிடுங்கன்னு சொல்றதுக்காக  ஃபோன் பண்ணினேன்ப்பா, நீங்க இருக்க மாட்டீங்கன்றதை மறந்துபோய்ப் பண்ணல்லேப்பா''
 அவர் தனது பதிலை நம்பவில்லை என்பது உள்ளுணர்வாய் அவளுக்குப் புரிந்து போனது. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. 
 அவர் அத்தோடு விடவில்லை  "இதென்ன புதுசா என்னைப் பவுடர் வாங்கிட்டு வரச்சொல்றே? எப்பவும் தெரு முக்குல இருக்குற கடையிலதானே மாசாந்திர சாமான்களுக்கெல்லாம் லிஸ்ட் குடுப்பே?''”
"அந்தக் கடைக்குத்தாம்ப்பா  ஃபோன் பண்ணினேன்.  எடுக்கவே மாட்டேன்றாங்க. அதான்''
"சரி. வாங்கிட்டு வர்றேன்'' என்று அவர் தொலைபேசித் தொடர்பைத் துண்டிக்க முனைந்த அதே கணத்தில் அவரது மற்றொரு தொலைபேசி கிணுகிணுத்தது அவளது காதில் விழுந்தது. 
 அதன்  பிறகு சரியாக ஒரு நிமிடத்துக்குள் அவள் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.  எடுத்துப் பதில் சொன்னாள். மறுமுனையில் துரை அவசரக் குரலில் பேசினான்  "தாமரை,   உங்கப்பா இன்னொரு  ஃபோன்ல பேசிட்டு இருக்காரு.  அது டில்லியிலேர்ந்து வந்த கால்,  குறைஞ்சது பத்து நிமிஷமாச்சும் ஆகும். அதான் என் ரூமை விட்டு வெளியே போய் என் ஃப்ரண்டு கிட்டேர்ந்து மொபைலை வாங்கிப் பேசுறேன். எதுக்குச் சிரிச்சீங்கன்னு என்னை உங்கப்பா கேட்டா நான் என்ன சொல்லட்டும்?''
 "நான் அது பத்தி யோசிச்சாச்சு,  துரை  "உங்க தங்கச்சி கல்யாணம் முடிஞ்சதும் உங்களுதா? நான் வேணா உங்களுக்குப் பொண்ணு பாக்கட்டுமான்னு கேட்டேன். அதுக்குத்தான் அப்படிச் சிரிச்சீங்க'ன்னு சொல்லப்போறேன். என்ன சொல்றீங்க?''
 "என்னைக் கேட்டாருன்னா, நானும் அப்படியே சொல்லிடுறேன்.  நம்ம ரெண்டு பேரையுமே தனித்தனியா விசாரிப்பாரோன்னு எனக்குத் தோணுது.   ஏன்னா, டெலிஃபோன்ல பேசிக்கிட்டு இருந்தது நீதான்னு சொல்ல வேண்டி வந்துட்டதாலயும் நான் எரைஞ்சு சிரிச்சதாலயும் அவருக்கு ஏதேதோ சந்தேகங்கள் வந்திருக்கும்.  ஏன்னா, அவர் முகம் ஒரு மாதிரி இறுக்கமாயிருந்திச்சு. தவிர, தன்கிட்ட வேலை செய்யிற எவனும் தன் மகளோட சிரிச்சுப் பேசுறதை யாருமே ரசிக்க மாட்டாங்க.  சரி. நான் என் ரூமுக்குப் போறேன்.  நான் டாய்லெட்டுக்குப் போயிருந்ததா அவர் கேட்டாருன்னா சொல்லிக்கிறேன்''
 அப்போதுதான்,   தான் வைத்திருப்பது போன்றே, துரைக்கும் ஒரு கைப்பேசி வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் எனும் எண்ணம் அவளுக்கு வந்தது.  தன் கைச்செலவுக்கென்று அப்பா கொடுத்துவரும் பணத்தை அவள் தேவையற்ற எந்தப் பொருளையும் வாங்கி செலவு செய்வதில்லை. சேமித்தே வந்திருந்தாள். எனவே வெளியே போகும்போது வாங்கிவிட அவள் உடனே முடிவு செய்தாள்.
 சற்றுப் பொறுத்து, அவனே அவளோடு தொலைபேசியில் பேசினான்.  "தாமரை,  நாந்தான்.  உங்கப்பா கிளம்பிப் போயிட்டாரு.  ஆனா, நான் ஊகிச்சபடியே, போறதுக்கு முன்னாடி, முகத்தை சாதாரணமாவே வெச்சுக்கிட்டு, "தாமரையோட எதுக்குச் சிரிச்சே'ன்னு கேட்டாரு.  நானும் வெக்கப்பட்டுக்கிட்டே நீங்க சொல்லிக்குடுத்த மாதிரியே சொன்னேன்''.
"என்ன சொன்னாரு அதுக்கு?''
"முதல்ல சிரிச்சாரு.  அப்பால, "நூத்துக் கௌவி மாதிரி அவ உனக்குப் பொண்ணு பாக்கறாளாமா? முதல்ல அவளுக்குக் கல்யாணம் ஆவட்டும். அதுக்குப் பெறகு அவ உனக்குப் பொண்ணு தேடட்டும்'' அப்படின்னு சொல்லிட்டு வெளியே போனாரு.  சிரிச்சாரே ஒழிய,  அவரு மொகம் சரியாயில்லே, தாமரை''.
 "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னுவாங்கள்லே? அதுமாதிரி அவரோட மொகம் ஒரு மாதிரி இருந்திச்சுன்றது உங்க பிரமையாக் கூட இருக்கும்''
 "இருக்கலாம்.  நான் ஒரு மொபைல் வாங்கிடலாம்னு இருக்கேன், தாமரை''
 "அட,  எனக்கும் அதே மாதிரி தோணிச்சு,  துரை.  நாம ரெண்டு பேருமே ஒரே மாதிரி நினைச்சிருக்கோம், பாருங்க.  ஆனா ஒண்ணு. நான் உங்களுக்கு ஒரு மொபைல் வாங்கிப் பிரசண்ட் பண்ணணும்னு நினைச்சேன்''.
"உங்களுக்கு ஏன் வீண் செலவு? நானே வாங்கிக்கிறேன், தாமரை,  அப்பால உங்கப்பா கேட்டாருன்னா கணக்குச் சொல்ல வேண்டிவரும். எதுக்கு வம்பு?''
 "எனக்குப் பாக்கெட் மணி மாசாமாசம் ஆயிரம் ரூபா தர்றாரு, துரை. நிறையவே நான் சேமிச்சு வச்சிருக்கேன். இதுவரையில கணக்குக் கேட்டதில்லே... அதனால,  அடுத்த மாசம் -  இன்னும் பத்தே நாள்ல -  வரப்போற உங்க பொறந்த நாள் பரிசா அதை நான் உங்களுக்குத் தரப்போறேன்,  துரை, மறுக்காதீங்க''.
 "அட,  என் பொறந்த நாள் உங்களுக்கு 
எப்படித் தெரியும், தாமரை?''
"மறந்துட்டீங்களா,  உங்க சர்ட்டிஃபிகேட்ஸோட ஜெராக்ஸ் எல்லாம் எங்கிட்ட இருக்குதே''
"ஆமா..  அப்பால உங்க இஷ்டம்.  அது சரி,  உங்க பொறந்த தேதி என்ன?''
"மே,  பதினெட்டு, துரை,  பதிலுக்குப் பதில் பரிசு குடுத்துப் பழி வாங்குறதுக்கா? சரி, என் மொபைல் நம்பரைக் குறிச்சுக்குங்க.''
 "சொல்லுங்க... ஆங். குறிச்சுண்டாச்சு''.
 "இனிமே மொபைலுக்கே  ஃபோன் பண்ணுங்க...  சரி. போய் உங்க வேலையைப் பாருங்க.  மறுபடியும் எங்கப்பா சந்தேகப்பட்டு வந்துடப் போறாரு...  என்னோட மொபைல் நம்பரோட மேட்ச் ஆற மாதிரியா ஒரு  மொபைலை வாங்க முயற்சி பண்றேன்''
"சரி. நான் சீட்டுக்குப் போறேன்'' என்ற துரை தொலைபேசி இணைப்பைத் துண்டித்தான்.
அவளும் ஒலிவாங்கியைக் கிடத்தினாள்.  மறுகணமே தொலைபேசி ஒலிக்க,  ஒலிவாங்கியை  எடுத்தாள் தாமரை. சதாசிவம்தான்.
 "யாரோட பேசிட்டு இருந்தே இவ்வளவு நேரம்?''
 "என்னோட  ஃப்ரண்ட் அநுசூயா கூடப் பேசிட்டு இருந்தேன்ப்பா''
 "இப்ப ஒரு ரெண்டு நிமிஷம் முன்னாடி மறுபடியும் என் ஆஃபீசுக்கு  ஃபோன்  பண்ணினியா?''
 "அதான் பேசிட்டேனேப்பா உங்களோட,   எதுக்குக் கேக்குறீங்க?''
 "துரைக்கு  ஃபோன்  பண்ணினேன். எங்கேஜ்  டோன் வந்திச்சு. அதான் கேட்டேன்''
 "இல்லேப்பா. நான் பண்ணலை. வேற யாராச்சும் பண்ணியிருப்பாங்க... சரி. இப்ப எதுக்குக் கூப்பிட்டீங்க?''
  "வேற ஒண்ணுமில்லே.  துரைகிட்ட  
ஃபோன்ல என்ன சொன்னே? அப்படி சிரிச்சானே?''
  திட்டமிட்டு வைத்திருந்தபடி அவள் சொல்ல,  "என்கிட்ட வேலை செய்யிறவங்களோட வெல்லாம் சிரிச்சுப் பேசுறது, கொள்றது இதெல்லாம் வேணாம். நீ யாரு அவனுக்குப் பொண்ணு பாக்குறதுக்கும் இன்னொண்ணுக்கும்? அதான் சாக்குன்னு எத்தையானும் கற்பனை பண்ணிக்கிட்டு ஒளறத் தொடங்கிடுவாங்க. என்ன? புரிஞ்சுதா?'' என்றார் அவர் அதட்டலாக. 
"அவரு அப்படியாப்பட்ட ஆளில்லேப்பா''.
"நீ ஒண்ணும் அவனுக்கு  சர்ட்டிஃபிகேட் தரவேணாம். எல்லாம் நாம குடுக்கிற இடத்தைப் பொறுத்தது. சரி. வைக்கிறேன்'', என்று அவர் தொடர்பைத் துண்டித்ததுமே தாமரை துரையோடு பேசி,   நடந்ததைச் சொன்னாள்.
"அதுமட்டுமின்றி, "துரை! அப்பாவுக்கு அடி மனசில என்னமோ நெருடியிருக்கு. ரிசீவரைச் சரியா வைக்காம அவரு கௌம்பிப் போயிட்டதாயிருக்கட்டும். அதனால எங்கேஜ்ட் டோன் வந்ததாகவும் இருக்கட்டும். அவரே திரும்பி வந்து பாக்கட்டும். போங்க... முதல்ல அதைக் கொஞ்சம் துக்கினாப்ல வைங்க'' என்று அவள் அவனுக்கு யோசனையும் சொன்னாள்.
 "நல்ல கிரிமினல் மூளை உங்களுக்கு'' என்று அவன் சிரித்துவிட்டு அவளைப் பாராட்டிய பின் அப்படியே செய்வதாகச் சொல்லி உடனே அதைச் செய்தான். 
-  தொடரும்...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com