பெங்களூரு நாகரத்னம்மாள்

பெங்களூரு நாகரத்னம்மாள்

சமீபத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு கலைஞரின் வாழ்க்கையை மேடையில் வெறும் அபிநயத்துடன் ஒரு கதை மாதிரி சுவாரசியமாகச் சொல்வது சவாலான பணி.

சமீபத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு கலைஞரின் வாழ்க்கையை மேடையில் வெறும் அபிநயத்துடன் ஒரு கதை மாதிரி சுவாரசியமாகச் சொல்வது சவாலான பணி.

வேண்டிய இடத்தில் மட்டுமே இசையைச் சேர்த்து, கதை சொல்லிய பாணி வித்தியாசமாக இருந்தது. முன்பே கலாஷேத்ராவை நிறுவிய ருக்மிணிதேவி பற்றி ஒரு வாழ்க்கைச் சரிதம் மேடையில் வழங்கிய பரதநாட்டியக் கலைஞர் லக்ஷ்மி விசுவநாதன், இந்த முறை பெங்களூர் நாகரத்னம்மாவின் போராட்டம் மிகுந்த வாழ்க்கை வரலாற்றை, துளியும் மிகையில்லாமல் வழங்கியதுதான் நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணம்.

"நான்தான் பெங்களூர் நாகரத்னம்மா!' என்ற அறிமுகத்துடன் தொடங்கி, சிறு வயது முதல் தன் வாழ்க்கையை சின்னச் சின்ன வாக்கியங்களில் சொன்ன முறை இருக்கிறதே, அது வெகு தெளிவாக இருந்தது. தாயார் புட்டு லக்ஷ்மிக்கு மகளாகப் பிறந்து ஐந்து வயதில் நடனம் கற்றதிலிருந்து தொடங்கி, சென்னைக்கு வந்து ஜார்ஜ் டவுனில் குடியேறியது வரை, துல்லியமாக நாகரத்னம்மாவின் கதையைச் சொன்னார்.

வசனம் முழுக்க ஆங்கிலத்தில்தான். ஒருவரே கதை சொல்லும் "மோனோலாக்' வகையைச் சேர்ந்த வடிவத்தில் முழு நிகழ்ச்சியையும் அமைத்துக் கொண்டாலும், அங்கங்கே சில பாடல்களுக்கு நடனம் ஆடும்போது மட்டும் தன் மாணவிகளை மேடையில் விட்டுவிட்டு, மெல்ல மறைந்து விடுகிறார். சாதாரண ரசிகரும் உணரும் வகையில் வசனத்தை உச்சரித்தது நிகழ்ச்சிக்கு கூடுதல் வலு சேர்த்தது.

தம் குரு பிடாரம் கிருஷ்ணப்பா பற்றி, தன்னை ஆதரித்த பிரமுகர்கள் பற்றி, தான் கன்னடம் தவிர, தெலுங்கும் தமிழும் கற்றது பற்றி, எல்லாம் சொல்லிக் கொண்டே வந்தார். ஏன், ஆங்கிலம் கூடக் கற்றுக்கொண்டார்! மைசூர் அரண்மனையில் தம்மை அங்கீகரித்ததைப் பெருமையுடன் கூறிவிட்டு, எனது நடன நிகழ்ச்சிக்காக அன்றைக்கு எல்லா மன்னர்களும் விரும்பி அழைத்தார்கள். திருவிதாங்கூர் ராஜா, விஜயநகர ராஜா, பொப்பிலி ராஜா, என்று என்னை அழைக்காதவர்களே இல்லை!' என்றார் வெகு இயல்பாக.

பாட்டு, நடனத்துடன், ஹரிகதையையும் இவர் விட்டு வைக்கவில்லை. இலக்கியத்திலும் இவருக்கு ஆர்வம் இருந்ததால், அபூர்வமாகக் கைக்குக் கிடைத்த முத்துப்பழனியின் "ராதிகா சந்தவனம்' என்ற நூலை தூசு தட்டி வெளிக் கொண்டு வந்தார். "அதைப் போய் தடை செய்தார்கள்' ஆனால் பின்னர் தடை நீக்கப்பட்டது.

தியாகராஜரின் பாடல்களை இசைக் கச்சேரிகளில் பாடி வந்தவர் ஒரு நாள் திருவையாற்றில் அவர் சமாதிக்கு வந்தார். "மண்ணும், மரமும் செடியும் கொடியுமாக பயங்கரமாக இருந்தது. சமாதி இருந்த பாதையில் நடக்கவே பயமாக இருந்தது. "இப்படியா இவர் சமாதி இருக்க வேண்டும்' என்று தோன்றியது! - அப்போதே தீர்மானித்தார், இங்கே சமாதியின் மேல் ஒரு கோயில் கட்டுவது என்று.

சரி, கோயில் கட்டிய பிறகு ஆராதனை நடத்த ஆசை கொண்டார். சின்னக் கட்சியும் பெரிய கட்சியும் இவரை அனுமதிக்கவில்லை. "இது பெண்கள் கட்சி' என்று மகளிரைச் சேர்த்துக்கொண்டு, கோயிலின் பின்னே தம் அஞ்சலியைச் செலுத்தினார் நாகரத்னம்மாள். பின்னர் சின்னக் கட்சியும் பெரிய கட்சியும் ஒன்று சேர்ந்து சமாதி முன் ஆராதனை நடத்தத் தொடங்கியது சரித்திரமாகிவிட்டது.

வருமான வரி கட்டிய முதல் பெண் கலைஞர் இவர்.

லக்ஷ்மி விசுவநாதன் மேடையில் அலங்காரம் எதுவும் செய்யாமலே, தன் வசனத்தாலும் அதைச் சொல்லும் விதத்தாலும் நிகழ்ச்சியை ஓர் உன்னதப் படைப்பாக வழங்கியதைப் பாராட்ட வேண்டும்.
- சாருகேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com