போராடினால் வெற்றி நிச்சயம்! -மாளவிகா ஐயர்

தற்போது 28 வயதாகும் மாளவிகா ஐயரை பொறுத்த வரை 26 மே 2002 -ஆம் ஆண்டு மறக்கமுடியாத நாளாகும்.
போராடினால் வெற்றி நிச்சயம்! -மாளவிகா ஐயர்

தற்போது 28 வயதாகும் மாளவிகா ஐயரை பொறுத்த வரை 26 மே 2002 -ஆம் ஆண்டு மறக்கமுடியாத நாளாகும். கும்பகோணத்தில் கிருஷ்ணன் - ஹேமா தம்பதியரின் மகளாக பிறந்த மாளவிகா, தந்தை ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் நீர்பாசனத்துறை பொறியாளராக வேலை பார்த்து வந்த காரணத்தால் அங்கு தங்கி படித்து வந்தார். 13 வயதான மாளவிகா 9- ஆம் வகுப்பில் படித்துவந்த நேரத்தில் 2002-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று வீட்டிற்கு வந்த விருந்தாளிகளுடன் அவரது தந்தை உள் அறையில் பேசி கொண்டிருக்க மாளவிகாவின் சகோதரி அம்மாவுக்கு உதவியாக சமையலறையில் இருந்தார்.

தன்னுடைய ஜீன்ஸ் பாண்ட் பாக்கெட் கிழிந்திருப்பதை கண்ட மாளவிகா, அதை பெவிகால் தடவி ஒட்ட நினைத்து, பெவிகால் விரிந்து விடாமலிருக்க அதன்மீது கனமான பொருளை வைக்க நினைத்தார். பிகானீரில் இவர்கள் குடியிருந்த காலனியின் பின்புறம், ஒரு காலத்தில் இருந்த ஆயுத கிடங்கு தீப்பற்றி எரிந்து வெடி பொருள்கள் சிதறி கிடந்ததை அறியாத மாளவிகா, அங்கு கையில் கிடைத்த ஒரு கனமான பொருளை கொண்டு வந்து ஜீன்ஸ் பாண்ட் மீது அழுத்தி வைத்தார்.

பகல் 1.15 மணியளவில் ஜீன்ஸ் பாண்ட் மீது அழுத்தி வைத்திருந்த கனமான பொருளை மாளவிகா எடுக்க முயற்சித்தார். அழுத்தமாக ஒட்டிக் கொண்டிருந்ததால் தன் வலுவை பயன்படுத்தி பிடுங்க முயற்சித்தபோதுதான் அந்த விபரீதம் நடந்தது. அது ஒரு வெடிகுண்டு, வெடித்து சிதறியதால் ஏற்பட்ட சத்தம் கேட்டு மாளவிகாவின் பெற்றோரும், விருந்தினரும் ஓடிவந்து பார்த்தபோது, மாளவிகா கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தார். உடனடியாக மாளவிகாவின் உடலை ஒரு மூட்டை போல் தூக்கி ஜீப்பில் போட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏராளமான வெடி குண்டு துகள்கள் கைகளில் ஊடுருவியிருந்தன. நோய் தொற்று ஏற்படாமலிருக்க மூன்று மாதங்கள் காயங்களை திறந்தபடியே வைத்து சிகிச்சையளித்தனர், பின்னர், சென்னையிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து 18 மாதங்கள் தொடர்ந்து சிகிச்சையளித்தனர். ஆனால் இரண்டு கைகளிலும் மணிக்கட்டுவரை இழக்க வேண்டியதாயிற்று.

விபத்து காரணமாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்ததால் மாளவிகாவால் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுத முடியாமல் போய்விட்டது. இருப்பினும் தனியாக தேர்வு எழுத தீர்மானித்தார். இதற்காக சென்னையிலேயே பதிவு செய்து, உள்ளூர் கோச்சிங் சென்டருக்கு தன்னுடைய அம்மா உதவியுடன் சென்று படிக்கத் துவங்கினார். உதவியாளர் துணையுடன் தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் ஒரே நாளில் மாளவிகாவின் வாழ்க்கையைப் புரட்டி போட்டது. மாநில அளவில் 500 மதிப்பெண்களுக்கு 483 மதிப்பெண்கள் பெற்றதோடு, கணிதத்திலும், அறிவியலிலும் 100 மதிப்பெண்கள், இந்தியில் 97 மதிப்பெண்கள் என எடுத்திருந்தார். வெடிகுண்டு விபத்தில் கைமணிக் கட்டுகளை இழந்த மாற்றுத் திறனாளியான பெண் ஒருவர் இத்தனை மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அன்றைய இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், மாளவிகாவை சந்திக்க ஜனாதிபதி மாளிகைக்கு அழைப்பு விடுத்து நேரில் சந்தித்து பாராட்டினார்.

இதன்பின்னர் டெல்லியில் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரம் ( ஹான்ஸ்) படித்து முடித்த மாளவிகா, டெல்லி ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் மூலம் சமூக சேவையில் மாஸ்டர் பட்டம் பெற்றார். மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க்கில் சமூக சேவையில் முதல் வகுப்பில் எம்ஃபில் பட்டம் பெற்றதோடு, "குவாலிடி ஆஃப் லைப்ஆஃப் இன்ட்டியூஜூவல் வித் ஆர்தோ டிஸபிளிடி இன் ரிஹாபிளிடேஷன் சென்டர்ஸ் இன் சென்னை' என்ற தனது ஆய்வு கட்டுரைக்காக 2012-ஆம் ஆண்டுக்கான சுழற் கோப்பையையும் பெற்றார்.

இதனால் மாளவிகாவுக்கு பல நாடுகளிலிருந்து சொற்பொழிவாற்ற வாய்ப்புகள் வரத் தொடங்கின. சர்வதேச மோட்டிவேஷனல் சொற் பொழிவாளர் தொழிலையே தேர்ந்தெடுத்ததால் நியூயார்க், நார்வே, இந்தோனேஷியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று உரையாற்றினார்.

சிறுவயது முதலே ஆடை வடிவமைப்பில் ஆர்வம் கொண்டிருந்த மாளவிகா, மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் ஆடை வடிவமைப்பிலும் சிறந்து விளங்கினார். இதனால் சென்னையில் உள்ள குளோபல் ஷேப்பர்ஸ் கம்யூனிட்டி, 2014- ஆம் ஆண்டின் சிறந்த ஆடை வடிவமைப்பாளராக இவரை தேர்வு செய்தது. உலக அளவில் பல்வேறு விருதுகளையும் வாய்ப்புகளையும் பெற்று வரும் இவர், ஐக்கிய நாடுகளின் யூத் டெவலப்மெண்ட்ஸ் ஒர்க்கிங் குரூப் ஆன்ட் யூத் அண்ட் ஜென்சர் ஈக்வாலிடி அமைப்பில் சேர்ந்துள்ள காரணத்தால், 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் வாய்ப்பை பெற்றார். இரு மணிகட்டுகளையும் இழந்த நிலையில் தொடர்ந்து இவரால் எப்படி சாதனைகளை படைக்க முடிகிறது. இதுபற்றி மாளவிகாவே கூறுகிறார், கேளுங்கள்:
"விபத்துக்கு பின் எனக்கேற்பட்ட உடல் ஊனத்தை கண்டவர்கள், என்னுடைய வாழ்க்கையையே நான் இழந்துவிட்டதாக என் கண்ணெதிரிலேயே கூறினார்கள். மருத்துவமனையில் காலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் " உன்னுடைய கால்களில் 80 சதவீதம் நரம்புகள் சிதைந்துள்ளன.

காஸ்மடிக் சர்ஜரி செய்தால் பலன் கிடைக்குமா என்பது தெரியாது. உன்னால் பழையபடி நடமாடமுடியாது'' என்றும் சொன்னார்கள். ""இதே மருத்துவமனைக்கு நடந்தே வருவேன்'' என்று உறுதியுடன் அவர்களிடம் கூறினேன்.

அதே நேரத்தில் கை மணிக்கட்டோ, விரல்களோ இன்றி வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் எழுந்தது. இந்த விபத்து மன உறுதியையும், தைரியத்தையும் அதிகரிக்க வைத்தது. என்னுடைய அம்மாவின் உதவி வலுவை அளித்தது. மருத்துவமனையில் இருந்தபோதே அம்மா மூலம் ஜெய்ப்பூரில் செயற்கை கை, கால் உறுப்புகளை செய்து தரும் அமைப்புடன் தொடர்பு கொண்டேன். முதலில் ஜெர்மனியிலிருந்து தருவிக்கப்பட்ட விரல்களுடன் கூடிய செயற்கை மணிக்கட்டை பொருத்தி, அதை இயக்குவதற்கான வசதிகளை மருத்துவர்கள் செய்து கொடுத்தனர். இதன் மூலம் செயற்கை விரல்களை பயன்படுத்தி எழுதவும், ஸ்பூன் மூலம் உணவை சாப்பிடவும் முடிந்தது. ஆனால் இயற்கை உடல் உறுப்புகள் போன்று சுலபமாக இயக்க முடியவில்லை. மேலும் இவை எடை அதிகம் என்பதால் தொடர்ந்து பயன்படுத்துவதில் சிரமம் இருந்தது.

சிறுவயதில் கதக் நடனம் கற்று வந்தேன். அந்த நடனத்திற்கு கைவிரல் அசைவுகள் முக்கியம். இந்த விபத்தால் நடனத்தையும், கம்ப்யூட்டரில் மிக வேகமாக டைப் செய்வதையும் இழக்க வேண்டியதாயிற்று. இருப்பினும் வலது கையில் ஒரு சிறிய எலும்பு வெளியே நீட்டிக் கொண்டிருப்பதால் அதன் உதவியுடன் எனக்கு வரும் இமெயில்கள், கடிதங்களுக்கு உடனடியாக பதில்களை டைப் செய்கிறேன்.

இவள் எப்படி எல்லாவற்றையும் பாசிடிவாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறாள் என்று சிலர் ஆச்சர்யப்படுவதுண்டு. கைகள் இல்லாமல் இதுவரை நான் என்ன சாதித்தேன் என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு நாளுமே எனக்கு ஒரு புதிய சவால்தான். எந்த நாளையும் வீணடிக்க நான் விரும்பவில்லை. சிறுவயது முதலே ஆடைகள் வடிவமைப்பில் எனக்கு விருப்பம் அதிகமென்பதால் ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் புதுப்புது ஆடைகளை நானே வடிவமைக்கிறேன். அண்மையில் ஆடை அணிவகுப்பு ராம்ப் ஷோவில் கூட நான் பங்கேற்றுள்ளேன். என் உடல் ஊனத்தை மறைக்க நான் விரும்பவில்லை.

உடல் ஊனம் என்பது திறமையை எந்த வகையிலும் பாதிக்காது என்பதை நம் குழந்தைகளுக்கு உணர்த்துவது நம் கடமை. பள்ளிகளில் ஆசிரியர்களால் இந்த மாற்றத்தைக் கொண்டு வர முடியும். மாற்று திறனாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் கதைகளை சொல்ல வேண்டும். நம் சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் வாழ உரிமை உண்டு. அவர்கள் திறமையை வெளிக் கொண்டு வரவேண்டுமே தவிர உடல் ஊனத்தை சுட்டி காட்டக்கூடாது.

எனக்கேற்பட்ட விபத்தால் ஊனமுற்றது குறித்து இந்திய ஜனாதிபதிக்கும், மக்களுக்கும் அனுதாபம் ஏற்பட்டது மனித இயற்கை. இதனால் மக்களின் கவனத்தை என் மீது திருப்ப வேண்டுமென்பது என் நோக்கமல்ல. என் மீது நானே கவனம் செலுத்தியதால்தான் என்னுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு வகையில் இந்த விபத்து ஏற்பட்டது நல்லதென்றே நினைத்ததுண்டு. இந்த விபரீதம் நடக்காமலிருந்தால் நான் ஒரு சாதாரண வாழ்க்கையைதான் தேர்ந்தெடுத்திருப்பேன். சுற்றியுள்ள பல வாய்ப்புகளை அனுபவங்களை அறிந்திருக்க முடியாது. நம் ஒவ்வொருவருக்குமே வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அலட்சியப்படுத்தாதீர்கள். போராடுங்கள், நிச்சயம் உங்களால் வாழமுடியும்'' என்று உறுதியுடன் கூறினார் மாளவிகா ஐயர்.
- பூர்ணிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com