பக்தர்களை அசத்திய கொலு கண்காட்சி! சொல்கிறார்: அபர்ணா

தங்கள் வளர்ப்பு பெற்றோர் காலத்தில் அவர்களுடன் இணைந்து வீட்டில் 5 அறைகளில் நவராத்திரி கொலு கண்காட்சி வைக்கத் தொடங்கிய வங்கி பெண் உயரதிகாரி எஸ். அபர்ணா.
பக்தர்களை அசத்திய கொலு கண்காட்சி! சொல்கிறார்: அபர்ணா

தங்கள் வளர்ப்பு பெற்றோர் காலத்தில் அவர்களுடன் இணைந்து வீட்டில் 5 அறைகளில் நவராத்திரி கொலு கண்காட்சி வைக்கத் தொடங்கிய வங்கி பெண் உயரதிகாரி எஸ். அபர்ணா. இன்றளவும் தங்கள் வளர்ப்பு தாய்-தந்தை நினைவாக "மயிலாப்பூர் ஸ்ரீ சுமுகி ராஜசேகர் அறக்கட்டளை' என்ற பெயரில் தனது சகோதரர்கள் எஸ். சுரேந்திரநாத், எஸ். அமர்நாத் மற்றும் தங்களுடன் இணைந்து கொண்ட பரதநாட்டிய கலைஞர் எஸ். சுகதனுடன் இணைந்து "தீம்மேட்டிக்' எனப்படும் ஏதாவது ஒரு மையக் கருத்தை வலியுறுத்தும் வகையிலான கொலு கண்காட்சியை நடத்தி வருகிறார். கொலு வைப்பது குறித்த பயிற்சியையும் அளித்து வருகிறார். இது குறித்து அபர்ணா கூறுவதாவது:

"எனது சகோதரர்களில் ஒருவரான சுரேந்திரநாத் அடிப்படையில் கலை இயக்குநராக இருப்பதால், கொலு பொம்மைகள் வைப்பது முதல் கண்காட்சியில் அவற்றை நிர்மாணிப்பது வரையிலான பணிகளை மேற்கொள்ள எளிதாகிறது. மற்றொரு சகோதரரான அமர்நாத் சென்னை மாநிலக் கல்லூரியில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தாலும், சிற்பங்கள் மீது கொண்டிருக்கும் தீரா காதல், எங்களோடு இணைந்து இருக்கும், நாங்கள் எங்கள் குழந்தையாக கருதும் சுகதன் அடிப்படையில் பரதநாட்டியக் கலைஞராக இருப்பதால், சிற்பங்களுக்குரிய பாவனை முதல் அனைத்து வகையான செயல் பாட்டுக்கும் பக்கப் பலமாக இருப்பதால், எங்களால் இந்தளவுக்கு கொலுக் கண்காட்சியை சிறப்பாக நடத்த முடிகிறது. தொடக்கத்தில் வீட்டில் சிறிய அளவில் ஒரு அறையில் வைக்கத் தொடங்கிய கொலு கண்காட்சி இன்றைக்கு 5 அறைகளில் வைக்கும் அளவிற்கு அதிகரித்து இருக்கிறது. எங்கள் வீட்டில் வைக்கும் கொலு கண்காட்சியைப் பார்க்க கூடும் கூட்டமே தனி. 

சென்னை மாகாணமாக இருந்த போது "விந்தியா பப்ளிகேஷன்' என்ற பெயரில் புத்தகப் பதிப்பகத்தை நடத்தியவர் எங்கள் வளர்ப்பு தந்தை ராஜசேகர். வளர்ப்புத் தாய் சுமுகி, மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். அவர்கள் மறைந்துவிட்ட நிலையில், அவர்கள் பெயரில் ஸ்ரீ சுமுகி ராஜ சேகர் நினைவு அறக்கட்டளையைத் தொடங்கி நடத்தி வரும் நாங்கள், கொலுக் காட்சிகள் வைப்பது குறித்த பயிற்சி வகுப்புகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்'' என்கிறார் அபர்ணா.

"கடந்த 1980 -ஆம் ஆண்டுமுதல் தான் வீட்டில் பிரம்மாண்ட அளவில் கொலுக் காட்சியை வைக்கத் தொடங்கினோம். அக்காலத்தில் 5 படி 6 அடி உயரத்துக்கு அமைத்து 1000-த்துக்கும் மேற்பட்ட பொம்மைகளை வைத்து கொலு வைப்போம். 4 அடி உயரம் வரையிலான பொம்மைகள் இந்த காட்சியில் இடம் பெறும். மற்றவர்களும் வைக்கிறார்கள் என்பதற்காக வைக்காமல், ஏதேனும் கருத்தை உணர்த்தும் வகையிலான கொலு காட்சிகளை வைத்து வீட்டில் நடத்துவோம். 

2000, 2003 - ஆம் ஆண்டுகளில் தனியார் தொலைக்காட்சிகள் நடத்திய கொலுக் கண்காட்சி போட்டியில் எங்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, "மயிலை டைம்ஸ்' நடத்திய கொலுக் கண்காட்சியில் தொடர்ந்து நாங்கள் முதல் பரி சு பெற்ற நிலையில், அந்த இதழின் நிர்வாகம், நீங்கள் போட்டியில் பங்கேற்பதைக் காட்டிலும், மயிலாப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் வீடுகளில் கொலுக் கண்காட்சியை நடுவராகச் சென்று பார்வையிட்டு சிறந்த காட்சியைத் தேர்வு செய்து தாருங்கள் என்று அழைப்பு விடுத்ததால், அதன் அடிப்படையில் நடுவராகப் பணியாற்றி வந்தோம்.

இதைத்தொடர்ந்து 2010-ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் உதவி ஆணையராகப் பொறுப்பில் இருந்த பொன். ஜெயராமன் அழைப்பின்பேரில் கொலுக் கண்காட்சி நடத்தினோம். பின்னர் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மாற்றலாகிவிட அவரது அழைப்பின் பேரில் அங்குச் சென்று கொலு வைத்தோம். 

அடுத்து, 2014 ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கநாதர் கோயில் இணை ஆணையராக பொன். ஜெயராமன் மாற்றப்பட, அவரின் வேண்டுகோளுக்கிணங்க, ஒரே ஆண்டில் மதுரையிலும், ஸ்ரீரங்கத்திலும் கொலு கண்காட்சியை நடத்தினோம். தற்போது, ஸ்ரீரங்கத்தில் "பக்தியும் முக்தியும்' ஸ்ரீமன் நாராயணனே என்ற கருத்தில் கண்காட்சியை நடத்தினோம். நவராத்திரி கொலு க் கண்காட்சிக்கான பணிகளை நாங்கள் 4 மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடுவோம். இந்த ஆண்டுக்கான கொலு மையக் கருத்து என்ன என்பதை சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்திடமும் பேசி, அதைத்தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியவை குறித்து நாங்கள் கூடி விவாதித்து அதற்கான பணிகளை மேற்கொள்வோம். 

கொலு காட்சியில் வைக்கப்படும் பொம்மைக்கு அபிநயம்(முகபாவம்), அங்கலட்சணம், அங்கசுத்தம் ஆகியவை தேவை. இதில் ஒன்று சரியில்லை என்றாலும் கண்காட்சியைப் பார்க்க வருபவர்களை அந்த பொம்மை ஈர்க்காது. எனவே ஒவ்வொரு சிலை வடிவமைப்பிலும் எங்கள் ஆலோசனைகள் இருக்கும். கொலுக் கண்காட்சிக்காக எங்களுக்குத் தேவைப் படும் பொம்மைகள் சென்னை குறளகத்திலுள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரிய அலுவலகத்திலும், மயிலாப்பூர் மாட வீதிகளிலிருந்தும் ஆர்டர்கள் அளித்து பெற்றுக் கொள்வோம். கடலூர், புதுச்சேரி பகுதிகளிலிருந்தும் எங்களுக்கு பொம்மைகள் தயாரித்து வழங்குகின்றனர். மேலும், கலை சம்பந்தப்பட்ட கண்காட்சி நடைபெறும் பகுதிகளுக்கும் சென்று பார்வையிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். கலைப் பொருள்கள் மீதான சேகரிப்பும் கொலு கண்காட்சியை சிறப்பாக நடத்துவதற்கும் ஊன்றுகோலாக இருக்கிறது.

ஸ்ரீரங்கம் கோயிலில் இந்த ஆண்டில் வைத்திருந்த காட்சியில், நவபக்தி முறை குறித்த சிற்பங்களுக்கு எங்களுடன் இருக்கும் சுகதன்தான், ஒவ்வொரு அபிநயத்துக்கும் ஏற்றவாறு பாவனை அளித்தார். அதன் அடிப்படையில் நவபக்தி சிற்பங்களை அமைத்தோம்'' என்கின்றனர் மயிலை மூவர் என்றழைக்கப்படும்  எஸ்.சுரேந்திரநாத், அமர்நாத், அபர்ணா.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் ஈடுபாடு உண்டு. சிலருக்கு எழுத்து மீது ஈடுபாடு இருக்கும். சிலருக்கு வாகனம் ஓட்டுவதில் தீவிர ஈடுபாடு இருக்கும். ஆனால் மயிலையைச் சேர்ந்த மூவருக்கு கொலுக் கண்காட்சி மீதும், கலைப் பொருள்கள் மீதும் தீவிர ஈடுபாடும், ஆர்வமும் இருக்கிறது. தங்களின் உணர்வை காட்சியாகப் படைத்து, அதை மற்றவர்களையும் பிரமிப்புடன் பார்க்க வைக்கின்றனர் இவர்கள். மயிலை சகோதரர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரிகளாக இருப்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.
- கு.வைத்திலிங்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com