கேதார கௌரி விரத மகிமை! 10 - ஜோதிர்லதா கிரிஜா

"போடா. போ. வேற எந்த துரோகத்துக்கும் மன்னிப்பு உண்டுடா. ஆனா, நான் உன்னை மன்னிச்சாலும், நட்புத் துரோகத்தை மட்டும், கடவுள் மன்னிக்க மாட்டாருடா.
கேதார கௌரி விரத மகிமை! 10 - ஜோதிர்லதா கிரிஜா

"போடா. போ. வேற எந்த துரோகத்துக்கும் மன்னிப்பு உண்டுடா. ஆனா, நான் உன்னை மன்னிச்சாலும், நட்புத் துரோகத்தை மட்டும், கடவுள் மன்னிக்க மாட்டாருடா. தெரிஞ்சுக்க. வீடு தேடி வந்தியேன்னு எங்கம்மா எதிர்ல நான் சாதாரணமா இருந்தேன். .. என்ற துரை, போய் உன்னோட எசமானர்கிட்ட சொல்லு.  நான் நல்லவனாத்தான் இருந்தேன்.  ஆனா, ஜாதி வெறிபிடிச்ச அந்த ஆளு எங்க உறவை முறிச்சதுக்குப் பெறகு நான் பொல்லாதவனாயிட்டேன். என்னோட திட்டமெல்லாம் இதுதான். தாமரையோட லெட்டர்ஸை அவ புருஷன் கையில சேர்த்து அவங்க விவாகரத்து ஆனதும் தாமரையைக் கல்யாணம் கட்டுவேன்... இதை உன்னோட அந்த எசமான் கிட்டச் சொன்னாலும் சொல்லிக்கடா... என்ன? சொல்றியா?''
"இல்லே, துரை! இனிமேப்பட்டு இந்த விஷயத்துல நான் தலையிடறதாயில்லே. இது வரைக்கும் தலையிட்டதுக்கு மன்னிச்சுக்க.''
"சர்த்தான், போடா.''
"ராமநாதன் தலையைக் குனிந்து கொண்டு பூங்காவை விட்டு வெளியேறினான். பூங்காவின் பெஞ்ச்சில் உட்கார்ந்த துரைக்குப் பழைய ஞாபகங்கள் மேலும் கிளறப்பட்ட நிலையில் மனம் பெரிதும் சோர்வடைந்தது. எனினும் நினைவலைகள் மனக்கடலில் எழுந்து வீழ்வதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. "நாம் என்னதான் திட்டமிட்டாலும், எதுவுமே விதிப்படிதான் நடக்கிறது...' என்று எண்ணிப் பெருமூச்செறிந்தான்.
தாமரையின் பரிசை வாங்கிக்கொள்ளும் ஆசையில், மறுநாள் தபால்காரர் வரும் வேளையில் வெளியே எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தான். "என்ன பார்சல்' என்று அம்மா விசாரித்தால் என்ன சொல்லுவது என்று கணம் போல் மலைத்தான். "ஆஃபீஸ் சமாச்சாரம்' என்று பொய் சொல்ல வேண்டியதுதான் என்று நினைத்தான். பன்னிரண்டு மணி வரையில் காத்திருந்த பிறகு அஞ்சல் அலுவலகத்துக்கே போய்க் கேட்டான். விரைவு அஞ்சல் எதுவும் அவன் பெயருக்கு வரவில்லை என்று அறிந்து, எதற்கும் இருக்கட்டும் என்று அதைப் பெறச் சேதுமணியை அனுமதித்துக் கடிதம் எழுதி அவளிடம் கொடுத்துவைத்தான். 
தான் வாக்களித்திருந்தபடி கைப்பேசியைத் தாமரையால் அனுப்ப முடியாமல் போனதற்கு ஏதோ மோசமான நிகழ்வு காரணமாக இருந்திருக்கவேண்டும் என்று அவனுக்கு உள்ளுணர்வாய்த் தோன்றி ஒரு கலக்கத்தை உண்டாக்கிற்று. 
துணிக்கடை ஒன்றிலிருந்து அவன் தாமரையோடு தொலைபேச முற்பட்ட கணத்தில், "துரைங்கிறது நீ தானேப்பா?'' என்று மெதுவாக  ஆனால்,  அதிகார தோரணையோடு  ஒரு குரல் அவன் காதருகே ஒலிக்க, அவன், பக்கவாட்டில் திரும்பிப்பார்த்தான்.
சீருடையில் இரண்டு காவல்துறை ஊழியர்கள் அவனருகே நின்றிருந்தனர். ஒருவர் காவலர் என்பதையும், மற்றவர் ஆய்வாளர் என்பதையும் அவர்களின் சீருடைகளிலிருந்து அவன் புரிந்து கொண்டான். மேற்கொண்டு அவர்கள் ஏதும் சொல்லாமலே, தனக்கு ஏதோ விபரீதம் நேரப் போகிறது என்பது அவனுக்கு உள்ளுணர்வாய்ப் புரிந்து போனது.
"ஆமா, இன்ஸ்பெக்டர்!' என்று அவன் பணிவுடன் பதில் சொன்னான்.
"கொஞ்சம் வெளியே வர்றீங்களா?''
"எதற்கு?'' என்று கேட்க நினைத்தவன்,  "ஓ! வர்றேனே!'' என்று அவர்களோடு வெளியே போனான். 
கடை வாசலில் ஒரு ஜீப் நிறுத்தப்பட்டிருந்தது. "ஏறுங்க'' என்று ஆய்வாளர் சொன்னதும், "எதுக்குங்க?'' என்று அவனால் கேட்காதிருக்க முடியவில்லை.
"உங்களைச் சோதனை போடணும். நாங்க தேடுறது ஸ்டேஷன்ல உங்ககிட்ட கிடைக்காட்டி, உங்க வீட்டுக்கு வந்து தேடும்படி இருக்கும். இங்க வெச்சு உங்களை அசிங்கம் பண்ண வேணாம்னுதான் ஸ்டேஷனுக்குக் கூப்பிடுறோம். ஏறுங்க...'' அவனுக்கு ஒன்றும் புரியாத போதிலும், வாக்குவாதத்தையும் விரோதத்தையும் தவிர்க்கும் பொருட்டு அவரைக் கீழ்ப்படிந்தான். 
காவல் நிலையத்துள் புகுந்ததுமே அங்கே அமர்ந்திருந்த சதாசிவம் அவன் பார்வையில் பட்டார். அவனுக்குப் புரிந்துவிட்டது.
அவன் அவரைத் துணிச்சலுடன் ஏறிட்டான்.  அவன் கண்களைச் சந்திக்க முடியாமல் முகம் திருப்பிய சதாசிவம், "இனிமே தானே சோதிக்கப் போறீங்க?'' என்று ஆய்வாளரைப் பார்த்து வினவினார்.
"ஆமா.  நீங்கதான்  தெருவில வெச்சு எதுவும் அசிங்கப் படுத்தவேணாம். அந்தப் பையனோட தங்கச்சிக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணம்''னு சொன்னீங்களே! அதான் உங்க விருப்பப்படி இங்கிட்டே கூட்டியாந்துட்டோம்...  உன் பர்ஸை எடுப்பா.''
துரை தன் கைப்பெட்டியிலிருந்து தோல்பையை எடுத்து நீட்டினான். அதை ஆய்வாளர் சதாசிவத்திடம் கொடுக்க, அவர் அதைத் திறந்தார்.
"இதோ பாருங்க, இன்ஸ்பெக்டர்! இந்த சீரியல் நம்பருக்குத் தொடர்ச்சியான ஆயிரம் ரூபாய் நோட்டுங்க என்கிட்ட இருக்கு.... பாங்க் சீலோட இருக்கு, சார். செக் பண்ணுங்க...'' என்ற சதாசிவம் தம் கைப்பையிலிருந்து மீதமிருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுக்கற்றையை எடுத்து ஆய்வாளரிடம் கொடுக்க, அவர் சோதித்த பின் அவற்றை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு,  "கேஸ் எழுதிக்கலாமா?'' என்றார்.
"வேணாம், சார். நான் புகார் குடுக்கப் போறதில்லே. ஏன்னா இவனோட தங்கச்சிக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணம். விட்றுங்க...'' என்ற சதாசிவம்,  "வாயைத் தொறந்து கேட்டிருந்தா நானே குடுத்திருந்திருப்பேன், சார். இப்படி அசிங்கமா நடந்துக்கிட்டான். இனி இவனை நான் எங்கிட்ட வேலைக்கு வெச்சுக்க முடியாது. இவனுக்குச் சீட்டுக் கிழிச்சு நான் லெட்டர் குடுக்கிறப்ப ஏதாச்சும் தகராறு செஞ்சான்னா, உங்க கிட்ட வர்றேன். அப்ப நீங்க இவன் திருடினதையும் நான் மன்னிச்சு விட்டுட்டதையும் சொன்னீங்கன்னாப் போதும்...இந்தப் பணத்தை அவனே வெச்சுக்கிறட்டும்...''
ஆய்வாளர் அவனது பணப்பையை அவனிடமே நீட்டினார். அந்த ஐயாயிரத்தை உருவி வெளியே எடுத்த துரை புன்சிரிப்புடன், சதாசிவத்தின் முன் மேசை மீது வைத்தான். "எனக்கு வேணாம், சார்!'' என்றான்.
ஆய்வாளர் அவனை வியப்பாகப் பார்த்தார். சதாசிவத்தின் முகம் இருளடித்துப் போனது.            
"என்ன சார்? இவன் போகட்டுமா?''  என்ற அவரது கேள்விக்கு, 
"போகட்டும் விடுங்க'' என்று அவர் சொன்ன பிறகு, துரை,  "ரொம்ப தேங்க்ஸ், சார்!''  என்று சதாசிவத்தைப் பார்த்துப் புன்சிரிப்புடன் கூறிவிட்டுக் காவல் நிலையத்திலிருந்து வெளியேறினான்.
கனத்த இதயத்துடன் வெளியே வந்த அவன், தான் வீட்டிலிருந்து கிளம்பியபோது தெரு முனையில் நின்றிருந்த காவல்துறை ஜீப் தன்னைப் பின்பற்ற நிறுத்தப்பட்டிருந்த ஒன்றுதான் என்பதைப் புரிந்துகொண்டான். தாமரையும் தானும் நேசிக்கிற விஷயம் வெளிப்பட்டுவிட்டதன் விளைவே யாவும் என்பது புரிந்துவிட்டாலும், எப்படித் தெரிந்தது எனும் கேள்வி அவனை அலைக்கழிக்கலாயிற்று.
மறு நாளே அவளைப் பெண்பார்க்க எவரேனும் திடீரென்று அழைக்கப்பட விருந்த நிலையால் தனது எண்ணத்தைத் தாமரை வெளியிட வேண்டிய கட்டாயத்துக்குத் துரத்தப்பட்டு விட்டாளோ? இல்லாவிட்டால் தனக்கு அனுப்பவிருந்த பார்சலும் கையுமாய்ப் பிடிபட்டு விட்டிருப்பாளோ?' என்றெல்லாம் அவன் தன் மனத்தை உழப்பிக்கொண்டான்.
அவனால்தான் எங்கிருந்தாவது அவளோடு தொலைபேச முடியும்.  அவனுக்குத் தொலைபேசி இல்லாததால் அவளால் அவனோடு தொடர்பு கொள்ள முடியாது.  இந்த நிலையில் என்ன செய்வது என்று அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.  தாமரையின் தோழிகள் ராணி, மஞ்சுளா ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களை அவன் அறிந்திருந்தான். எதிர்வீட்டு மஞ்சுளாவோடு பேசுவதை விடவும், பக்கத்து வீட்டு ராணியோடு நாசூக்காய்ப் பேசி, ஏதேனும் விஷயம் இருப்பின் தெரிந்துகொள்ள முடியும் என்று உடனே அவன் எண்ணினான்.  அதனால் அந்தப் பெண்ணுக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்படுமோ என்று சற்றே கிலியாகவும் அவனுக்கு இருந்தது. இருப்பினும், கெளசல்யாவின் திருமணத்துக்குக் கட்டாயம் வரச்சொல்லி நினைவூட்டுவதற்காகவே அழைத்ததாக அப்போது எவரேனும் அருகில் இருக்க நேர்ந்து கேட்டால் சொல்லுமாறு யோசனை சொல்லிவிட்டு விசாரிக்கத் தீர்மானித்தான். 
பேருந்து பிடித்துப் போய்த் துணிக்கடை வாசலில் நிறுத்தியிருந்த தனது ஆட்டோவில் ஏறிக்கொண்டு ஒரு பொதுத் தொலைபேசியிலிருந்து ராணியின் வீட்டு இலக்கத்தைச் சுழற்றினான். 
ராணியின் அம்மா யாரென்று கேட்டுவிட்டு, ராணி மொட்டை மாடியில் துணி உலர்த்தப் போயிருப்பதாய்ச் சொல்லிக் காத்திருக்கச் சொன்னாள். 
இரண்டே நிமிடங்களில் வந்துவிட்ட ராணி, குரலைத் தாழ்த்திக்கொண்டு, "துரை! தாமரை அவங்க வீட்டு மொட்டை மாடியிலதான் துணி உலர்த்த வந்த சாக்குல என்னோட பேசிட்டு இருக்கா.  இப்பதான் எல்லாத்தையும் சொல்லிமுடிச்சா.  உடனே உங்க  ஃபோன் வந்திச்சு.  எங்கம்மா  "ஆட்டோ டிரைவர் துரைகிட்டேருந்து ஃபோன்'' னு கத்திக் கூப்பிட்டதால அவளை இருக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன்.  அவ வெளியே எங்கேயும் போக முடியாத நெலமையில இருக்கா... அதாவது ஹவுஸ் அரெஸ்டுல வெச்சிருக்காங்க. என்ன சொல்லணும்னு சொல்லுங்க. இல்லாட்டி ஒண்ணு பண்ணுங்க. என்னோட செல் நம்பருக்கு அடிங்க. நான் அதை எடுத்துக்கிட்டு மொட்டை மாடிக்குப் போறேன். நீங்க ஃபோன் பண்ணினதும் என் செல்ஃபோனை அவ கிட்ட வீசிப் போட்டுப் பேசச் சொல்றேன். நாலடி தானே? என் செல்ஃபோனை ஒரு பையில போட்டுத் துணி உலர்த்துற கொம்பு நுனியில் மாட்டி, தாமரைகிட்ட குடுக்கறேன். அவ பேசுவா...''  என்று கூறித் தனது கைப்பேசியின் இலக்கத்தையும்  சொன்னாள்.
அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு அவன் அப்படியே செய்தான்.  காதலர்க்கு உதவ வேண்டும் என்று நினைப்பவர்களுக்குக் கூட  மூளை எப்படியெல்லாம் வேலை செய்கிறது என்று வியந்துபோனான்.
"துரை! நான் அப்பா கிட்ட மாட்டிக்கிட்டேன்.   என் மேல சந்தேகம்னு அம்மாகிட்ட  அப்பா ரகசியமாச் சொல்லி வெச்சு என்னைக் கண்காணிக்கவும் சொல்லியிருந்திருக்காரு.  நான் உங்க செல்ஃபோன் பார்சலைக் கட்டி முடிச்சுட்டுக் குளிக்கப் போனதும் அப்பாவுக்கு அம்மா ஃபோன் பண்ணிட்டாங்க.  அப்பா அரை மணிக்குள்ள வந்துட்டாரு.  குளிச்சு முடிச்சுட்டு நான் சாப்பிட்டுக்கிட்டு இருந்தப்ப வந்துட்டாரு. நேரே என் ரூமுக்குப் போய் அலமாரியிலேர்ந்து அந்தப் பார்சலை எடுத்துப் பிரிச்சுட்டாரு.  ஆனா, நான் சாப்பிட்டு முடிக்கப் பொறுமையாக் காத்திருந்தாரு. கை கழுவிட்டு நான் என் ரூமுக்குள்ள நுழைஞ்சப்பதான் ஓசைப்படாம அவர் அப்படி பண்ணியிருந்தது எனக்குத் தெரிஞ்சிச்சு.  நான் உள்ளே போனதும் என் ரூம் கதவைச் சாத்தினாரு.  "என்ன இதெல்லாம்''னு  கேட்டு செல்ஃபோனைக் காட்டினாரு.  என்னால அவரை நிமிந்தே பாக்க முடியல்லே.  "காதல் பரிசா அனுப்புறே, காதல் பரிசு?'' அப்படின்னு கேட்டுட்டுப் பளார்னு என் ரெண்டு கன்னத்துலயும் ஓங்கி அறைஞ்சாரு.  "இனிமே வீட்டு வாசப்படியை விட்டு எறங்கினே, காலை முறிச்சுடுவேன்.  அவன் தங்கச்சி கல்யாணம் முடியட்டும்.  அதுக்கு அப்பால அவனுக்கும் வேட்டு வைக்கிறேன்.  அவன் காலையும் முறிக்கிறேன்.  அப்பதான் அந்தப் பயலுக்கு உன்மேல தான் ஆசைப்பட்டது தப்புன்னு புரியும்'' அப்படின்னு கூப்பாடு போட்டுட்டு செல்ஃபோனைத் தானே வச்சுக்கிட்டாரு. இப்ப என்ன பண்றது, துரை?''    
"எந்தங்கச்சி கல்யாணம் முதல்ல முடியட்டும், தாமரை. அப்புறம் யோசிப்போம்...''
"அதுக்குள்ள எங்கப்பா முரட்டுத்தனமா என்னை எவனுக்கும் கல்யாணம் பண்ணிக் குடுத்துடக் கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கிறதைத் தவிர வேற வழியே இல்லே, துரை!''
"உங்கம்மா இதுல நமக்கு ஒத்தாசையாயிருக்க மாட்டாங்களா, தாமரை?''
"அவங்க ஒரு வாயில்லாப் பூச்சிங்க. தவிர படிக்காதவங்க வேற.''
"படிப்புக்கும் அதுக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்கிறதாத் தெரியல்லே.  உங்கப்பா படிச்சவரு தானே? ஜாதி உணர்ச்சியை அவரால் ஜெயிக்க முடிஞ்சிச்சா, தாமரை?  "ஜாதி'ன்ற கண்ணுக்கே புலப்படாத வெத்து மாயம் இந்த நாட்டு மக்களோட உடம்புக்குள்ளே ரத்தத்தோட ரத்தமாக் கலந்து ஓடிக்கிட்டு இருக்குதுன்னு தோணுது, தாமரை! நாம எப்படி ஜெயிக்கப் போறோம்? ஒண்ணும் புரியலியே!''
தாமரை அழத்தொடங்கினாள்.  
 - தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com