ஜவுளி ரகங்களை அறிமுகப்படுத்தும் ஈரோடு ஜவுளிச் சந்தை!

தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஜவுளிச் சந்தை ஈரோட்டில் வாரந்தோறும் கூடுகிறது.  
ஜவுளி ரகங்களை அறிமுகப்படுத்தும் ஈரோடு ஜவுளிச் சந்தை!

தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஜவுளிச் சந்தை ஈரோட்டில் வாரந்தோறும் கூடுகிறது.  இந்திய அளவில் பருத்தி துணிகள் அதிக அளவில் விற்பனையாகும் சந்தை இதுதான். இங்கு கொள்முதல் செய்யப்படும் ஜவுளிகள் தரம் மிக்கவை என்பதை முன்னாள் முதல்வர் அண்ணா தனது நாடகத்தில் பதிவு செய்துள்ளார். ஈரோட்டில் பெரியாருடன் இணைந்து அண்ணா பணியாற்றியபோது ஈரோடு ஜவுளிச் சந்தையைக் கண்டு வியந்த அவர், அப்போது எழுதிய பிரபலமான நாடகங்களில் மணமகனுக்கும், மணமகளுக்கும் துணிகளை ஈரோடு ஜவுளிச் சந்தையில்தான் தேர்வு செய்ய வேண்டும் என பதிவு செய்துள்ளார்.

அந்த அளவுக்குப் பெருமை பெற்றது ஈரோடு ஜவுளிச் சந்தை.

தொடக்க காலத்தில் கருங்கல்பாளையம், மணிக்கூண்டு பகுதிகளில் நடந்த ஜவுளிச் சந்தை இப்போது பன்னீர்செல்வம் பூங்கா அருகே ஈரோடு மாநகராட்சிக்குச் சொந்தமான 3.25 ஏக்கர் நிலத்தில் 1984-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இச்சந்தையில் சேலைகள், லுங்கிகள்,  துண்டுகள், போர்வைகள், சுடிதார்கள்,  உள்ளாடைகள், ஆயத்த ஆடைகள், மேசை விரிப்புகள்,  படுக்கை விரிப்புகள்,  தலையணை உறைகள்,  மிதியடிகள் உள்ளிட்டவற்றில் சுமார் 1,000 ரக ஜவுளிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மாலை வரை ஜவுளிச் சந்தை நடைபெறும். மாநகராட்சி இடம் தவிர, தலைமை அஞ்சல் நிலையம் எதிரே உள்ள சென்ட்ரல் திரையரங்கு வளாகம், அசோகபுரம், சித்தோடு டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தை வளாகம் ஆகிய இடங்களிலும் ஜவுளிச் சந்தை நடைபெறுகிறது.

மாநகராட்சிக்குச் சொந்தமான கனிமார்க்கெட்டில் வாரத்தின் பிற நாள்களிலும் இயங்கும்.  இங்கு வார நாள்களில் 500 கடைகளும்,  ஜவுளிச் சந்தையின்போது 900 கடைகளும் இயங்கும்.  ஜவுளிச் சந்தையில் பண்டிகைக் காலங்களில் தினமும் ரூ. 2 கோடியும், பிற நாள்களில் தினமும் ரூ. 1 கோடியும் ஜவுளி வர்த்தகம் நடைபெறும்.

அதேபோல, கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு, சித்தோடு அருகே கங்காபுரத்தில் டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையும் இயங்கி வருகிறது. திருப்பூரில் உற்பத்தியாகும் 80 சதவீத பனியன், ஜட்டிகளும்,  ஈரோட்டில் உற்பத்தியாகும் லுங்கிகள், சட்டைகள்,  ஆயத்த ஆடைகள்,  துண்டுகள் ஆகியவற்றில் 100 சதவீதமும், தமிழகத்தில் பிற பகுதிகளில் உற்பத்தியாகும் சுடிதார்களில் 70 சதவீதமும், போர்வைகளில் 70 சதவீதமும் ஈரோடு சந்தையின் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.

ஈரோடு ஜவுளிச் சந்தையில் கொள்முதல் செய்வதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்களில் இருந்தும் வாரந்தோறும் வியாபாரிகள் வந்துசெல்கின்றனர்.

ஈரோடு ஜவுளிச் சந்தையில் ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், மதுரை, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உற்பத்தியாகும் ஜவுளி ரகங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சூரத், புணே, மும்பை, அகமதாபாத் ஆகிய பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சேலை ரகங்களும் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இங்கு பண்டிகைக் காலங்களில் வெளிமாவட்ட வியாபாரிகள் 50,000 பேரும், வெளிமாநில வியாபாரிகள் 25,000 பேரும், பிற காலங்களில் வெளிமாவட்ட வியாபாரிகள் 25,000 பேரும், வெளிமாநில வியாபாரிகள் 15,000 பேரும் ஜவுளிக் கொள்முதல் செய்ய வருகின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது புதிய ஜவுளி ரகங்கள் இச்சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கான மோடி உடை  வாடிக்கையாளர்களால் விரும்பி வாங்கப்பட்டது. இந்த ஆண்டு பெண்களுக்கான மஸ்தானி (மிடி போன்ற சுடிதார்), சராரா (பெரிய கவுன்) ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, ஈரோடு கனிமார்க்கெட் வாரச் சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.செல்வராஜ் கூறியதாவது: 
தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், புதுவை என 5 மாநில வியாபாரிகளைக் கவர்ந்திருக்கும் இச்சந்தை ஈரோட்டின் வளர்ச்சியில் முக்கிய அங்கமாகத் திகழ்ந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் புதிய ஜவுளி ரகங்களை கொல்கத்தா, சூரத் போன்ற நகரங்களில் இருந்து கொள்முதல் செய்து அறிமுகப்படுத்தி வருகிறோம். 
 - பீ.ஜெபலின் ஜான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com