தபேலா வாசிப்பை சுவாசிக்கிறேன்!

தமிழ்நாட்டில் தபேலாவைத் தொழில் ரீதியாக வாசிக்கும் ஒரு பெண் கூட இல்லை. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை எடுத்துக் கொண்டாலும் தபேலா வாசிக்கும் பெண் கலைஞரை வலை விரித்துத் தேடினாலும்
தபேலா வாசிப்பை சுவாசிக்கிறேன்!

தமிழ்நாட்டில் தபேலாவைத் தொழில் ரீதியாக வாசிக்கும் ஒரு பெண் கூட இல்லை. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை எடுத்துக் கொண்டாலும் தபேலா வாசிக்கும் பெண் கலைஞரை வலை விரித்துத் தேடினாலும் ஒருவர் கூட கிடைக்க மாட்டார். இந்நிலையில், தபேலாவை பிரமாதமாக வாசிக்கும் தென்னிந்தியாவின் ஒரே பெண் கலைஞர் என்று பெயரெடுத்திருக்கிறார் ரத்னஸ்ரீ ஜயர். அவர் கேரளத்தைச் சேர்ந்தவர். இவர் வீட்டில் தமிழ்தான் பேச்சு மொழி. முன்னோர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்து, வைக்கம் அருகே வசிப்பவர்கள். பொதுவாக அகில இந்திய அளவில் தபேலா வாசிப்பில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிலரில் ரத்னஸ்ரீ ஐயரும் ஒருவராயிருக்கிறார். சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூரில் நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தாலும், ரத்னஸ்ரீ அதிகம் வாசிப்பது வட மாநிலங்களில்தான். கர்நாடக சங்கீதத்தை விட ஹிந்துஸ்தானி சங்கீதத்துடன் தபேலா இயல்பாக இணைந்து இழைகிறது. அதனால் ரத்னஸ்ரீக்கு வடக்கே வரவேற்பு அதிகம். தபேலாவில் அகில இந்திய அளவில் பாண்டித்தியம் உள்ள வல்லுநராக மாற தீவிர தபேலா வாசிப்புடன் ஆராய்ச்சியிலும் மூழ்கியிருக்கும் ரத்னஸ்ரீ ஐயர் தனது இசைப் பயணம் குறித்து மனம் திறக்கிறார்:
"வீட்டில் நான்தான் கடைக்குட்டி. நான்கு அண்ணன்கள். அதில் சதீஷ் அண்ணன் நாட்டுப்புற நடனம் பயின்றார். வீட்டில் டான்ஸ் மாஸ்டர் வந்து நடனம் சொல்லிக் கொடுப்பார். நடனப் பயிற்சியின் போது பாடலுடன் ஹார்மோனியமும் தபேலாவும் இன்னும் பல இசைக் கருவிகள் பின்னணியில் இசைக்கப்படும். எனக்கென்னவோ தபேலாவின் "கும் கும்' என்று அதிரும் ஒலியும்.. அந்த ஒலியை எழுப்பும் விரல்களின் துள்ளலும் கவர்ந்தது. அப்போது எனக்கு ஐந்து வயதிருக்கும். பயிற்சி முடிந்ததும்... அங்கிருக்கும் தபேலாவில் விரல்களைத் தட்டி இசைக்க முயற்சிப்பேன். இதைப் பார்த்த அப்பா என்னை தபேலா வகுப்பில் சேர்த்தது விட்டார். இப்படித்தான் தபேலாவுடன் எனக்கு உறவு ஏற்பட்டது. அது தொப்புள் கொடி உறவாக மாறிவிட்டது.

பள்ளி, கல்லூரி கலைவிழாக்களில் தபேலா வாசித்து பரிசுகள் பெற்றிருக்கிறேன். ரசாயனத்தில் முதுகலை பட்டம் முடித்தாலும், என் குரு செல்லப்பன் மாஸ்டர் வழி காட்டுதலின்படி தபேலாவில் டிப்ளோமா பெற ஆந்திராவில் "பொட்டி ஸ்ரீராமுலு தெலுகு பல்கலைக்கழகத்தில்' சேர்ந்தேன். அங்கு தபேலா அறிஞர் ஜெயகாந்த் அவர்களின் வழிகாட்டலில் தபேலா கற்றேன். பிறகு, மும்பையில் "அகில பாரதீய கந்தர்வ மஹா மண்டல்' இசைக் கல்லூரியில் தபேலாவில் "விசாரத்' பட்டம் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றேன். அத்துடன் மனம் நிறைவு பெறவில்லை. மஹாராஷ்டிராவில் கோலாப்பூர் சிவாஜி பல்கலைக் கழகத்தில் தபேலாவில் முதுகலை பட்டம் பெற்றேன். புகழ் பெற்ற தபேலா வித்வான்கள் - பேராசிரியர்கள் மனோகர் கேஷ்கர், ஃபயாஸ் கான் அரவிந்த் முல்கோன்கர் வழிகாட்டலில் இந்த படிப்புகளை அதிக மதிப்பெண்களுடன் நிறைவு செய்ய முடிந்தது.

கேரளாவில் மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தில் தபேலா குறித்து முனைவர் பட்டம் பெற இப்போது ஆராய்ச்சி செய்து வருகிறேன். தபேலா வாசிக்கிறேன் என்று சொல்வதைவிட சுவாசிக்கிறேன் என்பதுதான் பொருத்தம்.

தபேலா வாசிப்பில் டில்லி, அஜ்ராடா, ஃபரூக்காபாத், லக்னோ, பஞ்சாப், பனாரஸ் என்று ஆறு பாணிகள் உண்டு. அவை எல்லாம் எனக்கு நன்றாக வரும். இதனால் இந்தியாவின் பல பகுதியில் நடக்கும் கச்சேரிகளில் எந்த இடத்தில் எந்த பாணிக்கு அதிகம் வரவேற்புள்ளதோ அந்த பாணிக்கு ஏற்ற மாதிரி என்னால் வாசிக்க முடியும். தனி தபேலா நிகழ்ச்சி ஒரு மணியிலிருந்து இரண்டு மணி நேரம் வரை நீளும். ஆரம்ப காலங்களில் விரல்களில் வலியை உணருவேன். ஹிந்துஸ்தானி சங்கீத நிகழ்ச்சியில் பக்க வாத்தியமாகவும் போகிறேன். நிகழ்ச்சிக்காக வட மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். தூர்தர்ஷன் மெல்லிசை நிகழ்ச்சிகளில் நேரம் கிடைக்கும் போது தபேலா வாசிக்கிறேன். தமிழில் "பள்ளிக்கூடம் போகாமலே..' படத்தில் பின்னணி இசையில் எனது தபேலா ஒலியும் சேர்ந்துள்ளது.

தொடக்கத்தில் பெண்ணை தபேலா வாசிக்கச் செய்தால், சங்கீத கச்சேரியைக் கேட்டு ரசிக்க வருபவர்களின் கவனம் தபேலா வாசிக்கும் பெண் மீதுதான் பதியும் என்று என்னை பலர் தவிர்த்தார்கள். அதனால், நான், ஆரம்பக் காலத்தில் மெல்லிசை, சாஸ்திரிய, ஜுகல்பந்தி, கஜல் இசை நிகழ்ச்சிகளில் தபேலா வாசித்தேன். என்னை நிலை நிறுத்திக் கொள்ள அப்படி செய்ய வேண்டிவந்தது. தவிர, தபேலா உலகில் ஆண்களின் ஆதிக்கம்தான் கொடி கட்டிப் பறக்கிறது. வடநாட்டில் தபேலா வாசிக்கும் மூன்று பெண் கலைஞர்கள் உள்ளனர். தென்னகத்தில் நான் மட்டும்தான் தபேலா கலைஞி.

உஸ்தாத் ஃபைஸ்க்கான், டி.வி. கோபாலகிருஷ்ணன், டாக்டர் ஸ்ரீ ராம் பரசுராம், அபிராதித்த பானர்ஜீ, செங்கோட்டை ஹரிஹர சுப்பிரமணியம், "சந்தூர்' கலைஞர் ஹரிதாஸ், "சிதார்' கலைஞர்களான கிருஷ்ணகுமார் பவுல்ஸன், புல்லாங்குழல் கலைஞர் குடமலூர் ஜனார்த்தனன், வீணைக் கலைஞர் செளந்தரராஜன் போன்றோருடன் கச்சேரிகளில் கலந்துள்ளேன். பியானோவில் ஹிந்துஸ்தானி இசையை வழங்கும் அயர்லாந்து கலைஞர் உத்சவ் லால் இந்தியா வந்த போது அவருடன் கொச்சி நகரில் தபேலா இசைக்கும் வாய்ப்பு கிடைத்தது. தபேலா கர்நாடக இசைக்கும், ஹிந்துஸ்தானி இசைக்கும் பொருந்தும். "பாணி' மட்டும் மாறும். தபேலா வாசிக்க வகுப்புகள் எடுத்து வருகிறேன். தபேலாவுடன் நான் ஒன்றிவிட்டதால்... எனது தபேலா ஈடுபாட்டிற்கும், ஆராய்ச்சிக்கும் நேரம் அதிகம் ஒதுக்க வேண்டியிருப்பதால் திருமணம் பற்றி இன்னமும் நான் யோசிக்கவில்லை. தபேலா வாசிப்பில் அதிக பெண்களைக் கொண்டு வரவும், ஆய்வுகள் நடத்துவதற்கும் அறக்கட்டளை ஒன்றினையும் உருவாக்க உள்ளேன்''. என்று சொல்லும் ரத்னஸ்ரீக்கு முப்பைத்தந்து வயதாகிறது.
- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com