சாதனைப் பெண்மணிகள்-10 இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சர்

1889- ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி பஞ்சாப் கபூர் தாலா அரச குடும்பத்தில் ஏழு ஆண்குழந்தைகளுக்கு பின் பிறந்த ஒரே பெண்குழந்தை
சாதனைப் பெண்மணிகள்-10 இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சர்

இந்தியா முழுவதும்  பல்வேறு துறைகளில்  சாதனைபுரிந்த மகளிர் பலர் உள்ளனர்.  

அவர்களை அறிமுகம் செய்யும் தொடர் இது:
காந்தியவாதி, சுதந்திர போராளி, சமூக ஆர்வலர் என புகழ்பெற்ற ராஜ்குமாரி அமிர்த கவுர் (1889-1964) இந்தியா  சுதந்திரமடைந்து அமைக்கப்பட்ட முதல் அமைச்சரவையில் இடம் பெற்ற முதலாவது  சுகாதார அமைச்சர், கேபினெட் அந்தஸ்து  பெற்ற  முதலாவது பெண்மணி.

1889- ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி பஞ்சாப் கபூர் தாலா அரச குடும்பத்தில் ஏழு ஆண்குழந்தைகளுக்கு பின் பிறந்த ஒரே பெண்குழந்தை என்பதால் ராஜா ஹர்மான் சிங், தன் குழந்தைக்கு ராஜ்குமாரி  அமிர்த கவுர் என பெயர்  சூட்டினாராம். சிறுவயதில் தனக்கு கல்வி பயிற்றுவித்த அமெரிக்க மதபோதகர், கூடவே கிருஸ்துவ மதத்தைப் பற்றி போதிக்கவே,  கிருஸ்துவராக மதம் மாறிய  ஹர்மான் சிங், வங்காள கிருஸ்துவ பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் மன்னராகும் உரிமையை இழக்க நேரிட்டது. அமிர்த கவுரின் தாய் சமூக  சேவையில் ஆர்வமுள்ளவராக  இருந்ததால் மேற்கத்திய -இந்திய கலாசாரத்தையும் ஒரு சேர பயிற்றுவித்ததோடு, கூடவே கிருஸ்துவ மத  கொள்கைகளின்படி அனைத்து மனிதர்களிடமும்  உயிர்களிடமும் அன்பு  செலுத்த வேண்டுமென்றும் போதித்தார்.

கல்வி கற்பதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார் அமிர்த கவுர்.  எட்டாண்டுகள் கழித்து தனது 20-வது வயதில் அமிர்த கவுர், இந்தியா திரும்பியபோது, அவரது பெற்றோர் தேசபற்றுமிக்கவர்களாக மாறியிருந்தனர். அவரது வீட்டிற்கு சுதந்திர போராட்ட வீரர்கள் பலரும் வந்தபடி இருந்தனர். ஹர்மான் சிங்கின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கோபால கிருஷ்ண கோகலே ஒரு முறை வந்திருந்தபோது, மகாத்மா காந்தியை பற்றி தெரிந்து கொண்ட அமிர்த கவுர்,  ஜாலியன் வாலாபாத் சம்பவத்திற்கு பின்னர் பிரிட்டிஷார் மீது வெறுப்பை காட்டினார். சுதந்திர வேட்கை  காரணமாக இந்து மதத்திற்கும் மாறினார். காந்திஜியின் கொள்கைகளால்  ஈர்க்கப்பட்ட இவர், திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற முடிவோடு தன்  வாழ்க்கையை இந்த நாட்டிற்காக அர்ப்பணிக்க தீர்மானித்தார்.

காந்திஜியின் ஆசிரமத்தில்  சேர வேண்டுமென கவுர் விரும்பினார். அதே சமயத்தில் இவரது பெற்றோர்  உடல் நலமின்றியிருந்தனர். இதையறிந்த காந்திஜி, அவர்களை கவனிக்கும்படி இவருக்கு உத்தரவிட்டார். அவர்கள் இறக்கும் வரை அவர்களுக்கு பணிவிடை செய்த அம்ருத் பின்னர் 1934-ஆம் ஆண்டில் காந்திஜியின் செயலாளராக அவரது ஆசிரமத்தில் சேர்ந்தார். அரண்மனையில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த அமிர்த கவுருக்கு ஆசிரம வாழ்க்கை  சிரமமாக  இருந்தாலும், பட்டு ஆடைகளை துறந்து கதர் ஆடைகளை விரும்பி ஏற்றுக் கொண்டார். அரசியலில் மட்டுமின்றி சமூக சேவையிலும் ஆர்வம் காட்டிவந்த இவர், பெண்கள், குழந்தைகள் நலனுக்காகவும் கல்விக்காகவும் மிகவும் பாடுபட்டார். பால்ய விவாகம், பர்தா அணிதல் போன்றவைளை தடுத்து நிறுத்தியதோடு, அனைத்திந்திய மகளிர் நல அமைப்பையும் உருவாக்கினார்.

1942- ஆம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு'  போராட்டத்தின்போது அதில் தீவிரமாக பங்கேற்ற இவர், போலீசாரின் கடுமையான தடியடியில் காயமடைந்ததோடு, கைது  செய்யப்பட்டு அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலையின் மோசமான சூழ்நிலை,  உணவு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அமிர்த கவுரின் எடை குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிம்லா சிறையில் அடைக்கப்பட்ட அவர் இரண்டாண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்தியா சுதந்திரமடைந்தவுடன் அமைக்கப்பட்ட முதல் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற அமிர்த  கவுர், தொலை நோக்கு கண்ணோட்டத்துடன் பல சுகாதார நல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அனைத்திந்திய மருத்துவ அறிவியல்  கழகம், ராஜ்குமாரி அமிர்த கவுர் செவிலியர்  பயிற்சி  கல்லூரி ஆகியவைகளை நிறுவிய அவர், பெண்கள் பிரசவ மருத்துவமனைகள், குழந்தைகள் நல மையங்கள் ஆகியவைகளை நாடு முழுவதும் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டார்.  இந்திய தேசிய விளையாட்டு அமைப்பையும்  உருவாக்கினார்.  இந்த சாதனை பெண்மணி 1964- ஆம் ஆண்டு  
பிப்ரவரி 6- ஆம் தேதி காலமானார்.
 -  அ.குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com