ஒற்றைப் பெண்ணாய் சமாளித்தேன்! - சுதா மூர்த்தி

இன்ஃபோஸிஸ் சுதா மூர்த்தி பன்முகம் கொண்டவர். தொழிநுட்ப அறிவு ஒருபுறம் இருக்க, சுதா பல நாவல்களையும் எழுதியுள்ளார். அவரது சில நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன.
ஒற்றைப் பெண்ணாய் சமாளித்தேன்! - சுதா மூர்த்தி

இன்ஃபோஸிஸ் சுதா மூர்த்தி பன்முகம் கொண்டவர். தொழிநுட்ப அறிவு ஒருபுறம் இருக்க, சுதா பல நாவல்களையும் எழுதியுள்ளார். அவரது சில நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மராத்தி, ஒரு கன்னட படத்திலும் நடித்திருக்கிறார். பந்தயம் கட்டி "தினம் ஒரு படம்' என்று ஓர் ஆண்டில் 365 படங்களை பார்த்து ரசித்தவர். "நான் மட்டும் பொறியாளராக ஆகாதிருந்திருந்தால் நிச்சயம் திரைப்பட விமர்சகராகி இருப்பேன்'' என்று சொன்ன சுதா, நூலகம், கழிப்பறைகள் அமைப்பது போன்ற பொது சேவைகளுக்காக பல லட்சங்கள் செலவு செய்து வருபவர்.

சுதா பதிவு செய்திருக்கும் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் இதோ:
"அப்போது எனக்கு வயது பதினேழு. மனதில் தைரியமும், நம்பிக்கைகளும்... ஒரு பொறியாளராக வேண்டும் என்ற கனவும் அபரிமிதமாக இருந்த காலம். எனது குடும்பம் நடுத்தர பிராமண குடும்பம் என்றாலும் அனைவரும் படித்திருந்தனர். எனது தந்தை ஹுப்ளியில் கர்நாடக அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்து வந்தார்.

"பொறியியல்' படிக்க வேண்டும் என்று வீட்டில் தெரிவித்தேன். நான் சொன்னதைக் கேட்டு, குடும்பத்தில் அனைவரும் திடுக்கிட்டுப் போயினர். "பொறியியல்' படிப்பு ஆண்களுக்கான படிப்பு... பெண்கள் எல்லாம் அந்தப் படிப்பைப் படிக்கக் கூடாது.. என்ற மனநிலை அன்று இருந்தது. "நீ பொறியியல் படித்தால், இந்தக் கர்நாடகாவிலிருந்து எந்த ஆணும் உன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டான் ' என்றனர். அதே சமயம், மைசூர் நகரத்தில் துங்கபத்ரா நதிக்கு அருகில் நாராயண மூர்த்தி என்பவர் வாழ்ந்து வருகிறார். அவர்தான் என்னைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார், என்பது தெரிந்திருக்கவில்லை.

வீட்டில் அனைவரும் எதிர்த்தனர். "நீ பொறியியல் படிப்பில் சேர்ந்தால் உன் துணைக்கு இன்னொரு மாணவி கூட இல்லை. வகுப்பில் தோழியில்லாமல் நான்கு ஆண்டுகள் கஷ்டப்படணுமா.. இதையெல்லாம் நினைத்துப் பார்.. முடிவெடுக்க வேண்டியது நீ... நீ என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு என் முழு ஆதரவு உண்டு' என்றார் அப்பா.

"எது வேண்டுமானாலும் சம்பவிக்கட்டும்.. எனது முடிவின் பின்விளைவுகளை எதிர்கொள்ள நான் தயார்' என்றேன்.

எனது மதிப்பெண்களின் அடிப்படையில் என்னை பொறியியல் கல்லூரியில் தேர்வு செய்தார்கள். ஆனால் கல்லூரி முதல்வருக்கு அந்த முடிவில் திருப்தியில்லை. கல்லூரி முதல்வர், அப்பாவிடம் தனது ஆதங்கத்தையும் தர்ம சங்கடத்தையும் வெளிப்படுத்தினாராம். "உங்கள் மகள் அதி புத்திசாலி என்பது எனக்குத் தெரியும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே அவளுக்கு கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்துள்ளது. எங்களுக்கு இதனால் பல பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டி வரும் என்று பயப்படுகிறோம். உங்கள் மகள் மட்டுமே எங்கள் கல்லூரியின் ஒற்றை மாணவி. எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களுக்கென்று எனது கல்லூரியில் தனி "கழிப்பிடம்' இல்லை. எனக்கு நான்கு மகள்கள். அதனால் உங்கள் மகள் நலனில் எனக்கும் அக்கறை உண்டு. அதனால் எனது கல்லூரியில் சேரும் முடிவை மாற்றிக் கொள்ளுமாறு நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்' என்றாராம்.

அப்பா உடனே முதல்வரிடம், "நீங்கள் சொல்வதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் என்ன செய்ய .. என் மகள் பொறியியல் படித்தால்தான் ஆயிற்று என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள். அதனால் அவள் விருப்பப்படி பொறியியல் படித்துக் கொள் என்று அனுமதி தந்துவிட்டேன்' என்றிருக்கிறார்.

அப்பா சொன்னதை கேட்டதும் முதல்வர் பதிலுக்கு , "அப்படியென்றால் உங்கள் மகள் கல்லூரிக்கு வரும் போது சேலை மட்டும் உடுத்தி வரட்டும். சக மாணவர்களுடன் தேவையில்லாமல் பேச வேண்டாம். அதனால் பல வதந்திகளைத் தவிர்க்கலாம். கல்லூரியில் கேண்டீனுக்குப் போகவும் வேண்டாம்.. இவற்றை உங்கள் மகளிடம் சொல்லி கல்லூரிக்கு அனுப்புங்கள்' என்று கேட்டுக் கொண்டார். வீட்டுக்கு வந்ததும் அப்பா, கல்லூரி முதல்வர் சொன்னவற்றை என்னிடம் சொல்ல.. "அப்படியே செய்கிறேன்' என்று ஒத்துக் கொண்டேன்.

கல்லூரியில் சேர்ந்த சில நாட்களில், சில மாணவர்களிடம் நட்புடன் பழக ஆரம்பித்தேன். ஆனால் எங்கே எல்லைக் கோடு வரைய வேண்டும் என்று எனக்குத் தெரிந்திருந்தது. அவர்களிடமிருந்து பல வாழ்க்கைப் பாடங்களை நான் படித்துக் கொண்டேன். கல்லூரியில் பெண்களுக்கென்று கழிப்பிடம் இல்லாதது என்னை வெகுவாகப் பாதித்தது. இந்த தாக்கம்தான் பின்னாளில் கர்நாடக மாநிலத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரம் கழிப்பிடங்களை கட்டித்தரக் காரணம்.

மாணவர்களை விட நான் அதிக மதிப்பெண்கள் பெற்றேன். பொறியியல் படிப்பு ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று சொல்வதில் அர்த்தமில்லை என்பதையும் புரிந்து கொண்டேன். ஒரு வகுப்பைக் கூட நான் மிஸ் பண்ணவில்லை. பல்கலைக் கழகத்தின் முதல் ரேங்கில் தேர்வு பெற்றேன்.''
- பனிமலர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com