5000 பொம்மைகளை உருவாக்கிய குடும்பம்!

நவராத்திரியின் போது கொலு வைப்பதை பரம்பரை வழக்கமாக கொண்டுள்ள பல குடும்பங்கள்  ஆண்டுதோறும் புதுவித பொம்மைகளை   வாங்குவது உண்டு.
5000 பொம்மைகளை உருவாக்கிய குடும்பம்!

நவராத்திரியின் போது கொலு வைப்பதை பரம்பரை வழக்கமாக கொண்டுள்ள பல குடும்பங்கள்  ஆண்டுதோறும் புதுவித பொம்மைகளை   வாங்குவது உண்டு.  
பெங்களூரு பசவன்குடியில்  வசிக்கும் வீணா ரவி   குடும்பத்தினர் ஆண்டுதோறும் மகாபாரதம், ராமாயணம்  போன்ற இதிகாசங்களிலிருந்து குறிப்பிட்ட காட்சிகளை தேர்ந்தெடுத்து அதற்கான பொம்மைகளை தாங்களே உருவாக்கி கொலுவில் வைப்பதை வழக்கமாக  கொண்டுள்ளனர்.

இவர்கள் தேர்வு செய்து வைக்கும் கொலு கடந்த பத்தாண்டுகளாக அப்பகுதியில்  பிரபலமாகியுள்ளது. தற்போது 86 வயதாகும் வீணாவின் தாயார், 20 ஆண்டுகளுக்கு முன் பாரம்பரியமாக சிறு  அளவில் வைத்துவந்த கொலு பொம்மைகளை வீணாவிடம் ஒப்படைக்க, வீணா தன் கணவர் ரவி ஒத்துழைப்புடன் புதிய பொம்மைகளை உருவாக்கி கொலுவில் வைக்கத் தொடங்கினார். 

இது தவிர ராஜஸ்தான், டெல்லி, தமிழ்நாடு, பகுதிகளிலிருந்தும் பொம்மைகளை தருவிக்கும் வீணா, தன் தாயார் கொடுத்த 50 ஆண்டுகால பழமையான பொம்மைகளையும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்.

நாடு முழுவதும் உள்ள 109 விஷ்ணு ஆலயங்களில் உள்ள விஷ்ணுவின் சிலைகளை தத்ரூபமாக உருவாக்கியுள்ள வீணா, அதற்கான தேர்களையும் தற்போது அமைத்துள்ளார். நவராத்திரி தொடங்குவதற்கு  இரு மாதங்களுக்கு முன்பிருந்தே  பொம்மைகளை உருவாக்கும் வீணா குடும்பத்தினர், இந்த ஆண்டு மகாபாரத போர்க்காட்சியை விளக்கும் வகையில் கொலுவை அமைத்துள்ளனர்.  

இதற்காக 36 காட்சிகளுக்கு தேவையான 5 ஆயிரம் பொம்மைகளை இரவும் பகலுமாக உருவாக்கியுள்ளனர்.  கூடவே போர்க்களத்தில் தேவையான விலங்குகள், பறவைகள் போன்றவற்றையும் தயாரித்துள்ளனர்.

இந்து புராணங்களிலிருந்து காட்சிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் என்ன? 
"நவீன தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் இன்றைய தலைமுறையினர் வேலை பளு காரணமாக இதிகாசங்கள் மீது ஆர்வம் காட்டுவதில்லை.  மகாபாரதத்தில் பெண்களின் சக்தியையும், நிர்வாக திறமையையும் வெளிப்படுத்தும் சம்பவங்கள் நிறைய உள்ளன. பாண்டவர்களின் திறமைகளை விளக்கவே அதற்கேற்ற காட்சிகளை தேர்வு செய்தோம். 

கடந்த பத்தாண்டுகளாக எங்கள் வீட்டு கொலு  இப்பகுதியில் மட்டுமின்றி பிற  பகுதிகளிலிருந்தும் மக்களை வரவழைக்கும் வகையில் பிரபலமாகியிருப்பது பெருமையாக உள்ளது.

இந்த ஆண்டு கொலுவிற்காக  முதல் மாடி,  படிக்கட்டுகள் உள்பட  அனைத்து இடங்களையும் ஒதுக்கியுள்ளோம். காட்சிகள் குறித்து கன்னடம்,  இந்தி,  ஆங்கில மொழிகளில் விளக்கமளிக்கவும் ஏற்பாடு  செய்துள்ளோம்'' என்று  கூறும் வீணா ரவி, பெங்களூரில் உள்ள பண்டாரி ஜெயின் கல்லூரியில் துணை முதல்வராக உள்ளார். 
- அ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com