ஐந்து வயதில் வில் வித்தகி!

செருகுரி டாலி ஷிவானிக்கு ஐந்தே வயதுதான் ஆகிறது. மழலைப் பருவத்தில் மற்ற குழந்தைகள் பேசவும் நடக்கவும், ஓடவும், தாவவும் சிரமப்படும் போது,
ஐந்து வயதில் வில் வித்தகி!

செருகுரி டாலி ஷிவானிக்கு ஐந்தே வயதுதான் ஆகிறது. மழலைப் பருவத்தில் மற்ற குழந்தைகள் பேசவும் நடக்கவும், ஓடவும், தாவவும் சிரமப்படும் போது, டாலி வில்லையும் அம்பையும் விரும்பி கையில் ஏந்தி விளையாடுவாளாம். பொம்மைகளோ விளையாட்டு பொருள்களோ தின்பண்டங்களோ டாலியைக் கவரவில்லை, ஈர்க்கவில்லை. செப்டம்பர் 11-இல் அம்பு எய்வதில் சமத்துப் பிள்ளையாய் சாதனை புரிந்து ‘அள்ண்ஹ ஆர்ர்ந் ர்ச் தங்ஸ்ரீர்ழ்க்ள்'ஸில் இடம் பெற்றிருக்கிறாள்.

டாலி செய்திருக்கும் முதல் சாதனை என்ன தெரியுமா? இலக்கிலிருந்து பத்து மீட்டர் தூரத்தில் நின்று கொண்டு பதினோரு நிமிடம் பத்தொன்பது நொடிகளில் நூற்றிமூன்று அம்புகளை இலக்கைக் குறி பார்த்து வெற்றிகரமாக எய்திருக்கிறாள். விதிகளின் படி, ஒரு அம்பு எய்ததும் அடுத்த இருபது வினாடிகளுக்குள் அடுத்த அம்பை எய்ய வேண்டும். பலராலும் இந்த "கால இலக்கை' கடைப்பிடிக்க முடியாது. ஆனால் ஷிவானி அசராமல் "விர் விர்' என்று அடுத்தடுத்து அம்புகளை அனாயாசமாக எய்து முடித்தாள். அடுத்த முயற்சியில் இலக்கிலிருந்து இருபது மீட்டர் தூரத்தில் நின்று கொண்டு ஐந்து நிமிடம் எட்டு வினாடி நேரத்தில் டாலி முப்பத்தாறு அம்புகளை வெற்றிகரமாக இலக்கில் பதித்து பார்வையாளர்களை வியக்கச் செய்தாள்.

சிறுமி டாலி ஷிவானி செய்திருக்கும் சாதனையை முதிர்ந்த வில் வித்தையாளரால் கூட செய்ய முடியாது. அத்தனை அற்புதமாக அம்புகளை எய்து இலக்கில் கச்சிதமாக பதித்திருக்கிறாள். டாலியின் பயிற்சியாளரை பாராட்டியே தீர வேண்டும் என்று இந்திய வில் ஏவும் சங்கம் பாராட்டியுள்ளது.
டாலியின் தாய் கிருஷ்ணகுமாரி தொடர்கிறார்:
"பாரம்பரியமாக எனது கணவர் செருகுரி சத்யநாராயணாவின் குடும்பம் வில் வித்தையை ஒரு கலையாகக் கருதி பயிற்சியில் ஈடுபட்டுவந்தது. கணவர் பொது உடைமைக் கொள்கையில் ஈடுபாடுள்ளவர். அதனால் மகனுக்கு லெனின் என்றும், ரஷ்யாவின் லெனினின் சகோதரிகளில் ஒருவரான வோல்கா நினைவாக, மகளுக்கு வோல்கா என்று பெயரை வைத்தோம். இருவரும் வில் வித்தையில் தேர்ச்சி பெற்றார்கள். 2004 -இல் ஒரு சாலை விபத்தில் வோல்கா உயிரிழந்தாள். எங்களைச் சோகம் கப்பிக் கொண்டது. ஆனால் மூத்தவன் லெனின் வில் வித்தையில் சாதனை படைத்து வந்ததினால் வோல்காவை இழந்த சோகத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க முடிந்தது.

லெனின் தேசிய சாம்பியனாக வில் வித்தையில் ஜொலிக்க... ஆசிய போட்டிகளுக்காக தன்னை தயார் செய்து கொண்டிருந்தான். லெனின்தான் "அப்பா.. தங்கை வோல்காவின் நினைவாக வில் பயிற்சிக்காக ஒரு பயிற்சி நிலையத்தைத் தொடங்குங்கள்'' என்று யோசனை சொல்ல. கணவரும் அதை நிஜமாக்கினார்.

2005- இல் லெனின் ஆசிய கண்டத்தில் வில் வித்தை சாம்பியனாக நாங்கள் மகிழ்ச்சியில் மிதந்தோம். தொடர்ந்து "ஆசியா கிராண்ட் பிரி' போன்ற சர்வதேச தரமிக்க போட்டிகளில் வெற்றி பெற.. "இப்படி ஒருவனை மகனாகக் கிடைக்கப் பெற்றோமே'' என்று கடவுளுக்கு நன்றி சொன்னோம்.

அதே சமயம் வில் வித்தையில் ஆந்திராவில் முதல் தர கோச்சாகவும் லெனின் பரிணமிக்க... யார் கண் பட்டதோ தெரியவில்லை... 2010 - இல் டெல்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் லெனினின் மாணவர்கள் இருவருக்கு வில் - அம்பு போட்டியில் வெள்ளிப் பதக்கம் கிடைக்க ஆந்திர அரசு அவர்களை ஹைதராபாத்தில் விழா எடுத்து பாராட்டியது. லெனினையும் கெüரவித்தது. அந்த விழா முடிந்து காரில் விஜயவாடா திரும்பும் போது நடந்த விபத்தில் லெனின் இறந்து போனான். நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து போனோம். உடைந்த அம்பாகக் கிடந்த லெனினை எங்களால் மறக்க முடியவில்லை.

மரணம் நிகழ்ந்த போது லெனினுக்கு இருபத்தாறு வயது. திருமணம் ஆகியிருந்தாலும் லெனினுக்கு குழந்தை இல்லை. "வாரிசு இல்லாமல் வில் வித்தை நின்று போகுமே' என்று கணவர் சத்யநாராயணா மிகவும் பரிதவித்தார். மருத்துவர் ஆலோசனையின் படி "வாடகைத் தாய்' மூலம் எங்களின் மூன்றாவது வாரிசை உருவாக்கினோம். 2012 ஏப்ரல் 2- இல் பிறந்த அந்தக் குழந்தைதான் செருகுரி டாலி ஷிவானி. நாங்கள் டாலி என்ற பெண் நாயை மகள் போல் வளர்த்தோம். டாலி இறந்த பின் அவள் நினைவாக ஷிவானியின் பெயருடன் டாலியின் பெயரையும் சேர்த்து அழகு பார்த்தோம்.

ஷிவானி பிறந்து ஆறு மாதங்கள் ஆன போது அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஷிவானிக்கு முதல் முதலாக "அன்னம் ஊட்டுவதற்காக' விஜயவாடாவில் "இந்திரகிலாதிரி' பகுதியில் இருக்கும் கனகதுர்கா தேவி கோயிலுக்குச் சென்றோம். மகாபாரதத்தில் இந்திரகிலாதிரி குன்றில் நின்று அர்ஜுனன் தவம் செய்து சிவபெருமானிடமிருந்து அருளையும் அம்பையும் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. கோயிலில் பூஜை செய்த போது பலவித பூக்கள், பழங்களைப் படைத்தோம். அதில் ஒரு சின்ன வில்லும் அம்பையும் வைத்திருந்தோம். பூஜை முடிந்ததும் தட்டை அர்ச்சகர் திருப்பி எங்களிடம் தந்த போது ஷிவானி பாய்ந்து எடுத்தது வண்ண வண்ண பூக்களையோ, பழங்களையோ அல்ல. வில்லையும் அம்பையும் கையில் எடுத்தாள். எங்களுக்கு புல்லரித்துப் போனது. "மகன் லெனினும் மகள் வோல்காவும் சேர்ந்து ஷிவானியாக மறுஜென்மம் எடுத்திருக்கிறார்கள்... நிச்சயம் ஷிவானி வில் வித்தகியாக வருவாள்'' என்று தேவி கனக துர்கா சூசகமாக சொன்னது போல் தோன்றியது.

விளையாட்டாக ஷிவானிக்கு இரண்டாம் வயதில் வில்லை பிடிக்க அம்பை எய்யக் கற்றுக் கொடுத்தார் என் கணவர். மூன்று வயதாக ஒரு மாதம் இருக்கும் போது ஷிவானி இந்தியா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றாள். தொடர்ந்து பயிற்சி செய்து வரும் ஷிவானியை நாங்கள் எப்போதும் பயிற்சிக்காக வற்புறுத்தியதில்லை. தினமும் பயிற்சிக்கு அப்பாவை அழைக்கத் தவறமாட்டாள். ஷிவானியின் திறமையை மதிக்கும் விதத்தில் விஜயவாடாவில் புகழ் பெற்ற பள்ளியான "கெளதம் இன்டர்நேஷனல் ஸ்கூல்', "கல்விக் கட்டணம் கட்ட வேண்டாம்.. இலவசமாகப் படித்துக் கொள்ளலாம்' என்று ஷிவானியை மாணவியாக சேர்த்துக் கொண்டிருக்கிறது. பள்ளியிலும் வில் - அம்பு பயிற்சி ஷிவானிக்குத் தரப்படுகிறது.

ஷிவானியை குறித்து அமெரிக்காவின் டிஸ்னி நிறுவனம் செய்திப் படம் ஒன்றைத் தயாரித்துள்ளது. சென்ற ஏப்ரல் மாதம் இங்கிலாந்தில் நடந்த செய்திப் படங்களின் விழாவில் திரையிடப்பட்டது. இந்தியாவில் திறமையான வில் வித்தகர்கள் வித்தகிகள் இருந்தாலும், ஒலிம்பிக்ஸில் "குறிப்பிட்ட நேரத்திற்குள் இத்தனை அம்புகள் எய்ய வேண்டும்' என்ற விதியை நிறைவு படுத்த முடியாமல் திணறுகிறார்கள். அதைக் கருத்தில் கொண்டு விரைவாக அதே சமயம் இலக்கில் அம்பு தைப்பது மாதிரி பயிற்சிகள் ஷிவானிக்குத் தரப்படுகிறது. அதற்காக வில், அம்புகளை வெளிநாட்டிலிருந்து வாங்குகிறோம். பன்னிரண்டு அம்புகள் விலை மட்டும் இருபதாயிரம். 2024- இல் ஷிவானிக்கு பதிமூன்று வயதாகும். நிச்சயம் ஷிவானி அந்த ஒலிம்பிக்சில் திறமையின் அடிப்படையில் இந்தியாவின் சார்பாகக் கலந்து கொள்வாள் என்ற நம்பிக்கையிருக்கிறது' என்று சொல்கிறார் கிருஷ்ணகுமாரி.
- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com