தமிழகத்தில் பிரபலமாகி வரும் டாட்டிங் கலை!

க்ரோசா பிண்ணுவது, டாட்டிங் பிண்ணுவது, மியூரல் ஓவியங்கள் வரைவது, கைவினைப் பொருள்களில் வித்தியாசமாக "தாய்' க்ளேயில் மலர்கள் செய்வது,
தமிழகத்தில் பிரபலமாகி வரும் டாட்டிங் கலை!

க்ரோசா பிண்ணுவது, டாட்டிங் பிண்ணுவது, மியூரல் ஓவியங்கள் வரைவது, கைவினைப் பொருள்களில் வித்தியாசமாக "தாய்' க்ளேயில் மலர்கள் செய்வது, கார் குஷன் செய்வது, சோலார் வுட்டில் மலர்கள் செய்வது, ஸ்டாக்கிங் துணியில் மலர்கள் செய்வது, குல்லிங் பேப்பரில் கை வேலைகள், ஜூட் பேக், ஜூட் ஜுவல்லரி என கைவினைப் பொருள்களில் எத்தனை வகை உள்ளதோ அனைத்திலும் கைத்தேர்ந்தவராக இருக்கிறார் சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த மீரா தேவி. 45 வயதை தாண்டிவிட்டாலும் இன்னும் தேடி தேடிச் சென்று கைவினைப் பொருள்கள் கற்றுக் கொள்வதில் இவருக்கு ஆர்வம் குறையவில்லை.

இவரைச் சந்தித்தோம்:
" நான் சிறுவயதாக இருக்கும்போது என்னுடைய அத்தை எனக்கு பட்டு பாவாடையில் ஆர்.இ. ஒர்க் செய்து கொடுத்தார்கள். அதை பக்கத்திலிருந்து பார்த்தேன். அது முதல் எனக்கு இது போன்ற கைவேலைகளில் ஈடுபாடு அதிகரித்தது. அத்தையிடமிருந்து ஆர்.இ. ஒர்க் செய்வதைக் கற்றுக்கொண்டேன்.

அதன்பிறகு திருமணம் முடிந்து மாமியார் வீட்டிற்குச் சென்றபோது, அங்கே என் மாமியாரும் என்னைப் போன்று கிராஃப்ட் வேலைகளில் ஆர்வமுள்ளவராக இருந்தார். உல்லன் நூலில் ஸ்வட்டர் பிண்ணுவது, க்ரோசா பிண்ணுவது, டாட்டிங் பிண்ணுவது போன்றவற்றில் கை தேர்ந்தவராக இருந்தார். டாட்டிங் என்பது க்ரோசாவைப் போன்று அதைவிட மெல்லிய நூலால் பூ டிசைன்கள் பிண்ணுவது. என் மாமியார் ஒருமுறை யு.எஸ்.ஏவில் இருக்கும் அவரது ஒரகத்தி வீட்டிற்கு சென்றிருந்த போது கற்று வந்திருக்கிறார். அதனால் வீட்டு வேலைகள் முடிந்து ஓய்வாக இருக்கும் நேரத்தில் அவருக்கு தெரிந்தவற்றையெல்லாம் எனக்கு கற்றுக் கொடுத்தார். அதில் டாட்டிங் என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் அதனை மிகவும் ஆர்வமுடன் கற்றுக் கொண்டேன். இதற்கிடையில் எனக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் வரை குழந்தையில்லாமல் இருந்தது. இதனால் நான் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதைக் கண்டு என் கணவர் என்னை கிராஃப்ட் கிளாசில் சேர்த்துவிட்டார். இதன்மூலம் ஓவியம், மியூரல் பெயிண்டிங்ஸ், கைவினைப் பொருள்கள் செய்வது போன்றவற்றையெல்லாம் கற்றுக் கொண்டேன்.

டாட்டிங்கை பொருத்தவரை நமது நாட்டில் இன்னும் பிரபலமாகவில்லை. ஒரு சிறிய வடிவில் உள்ள ஷட்டில் என்ற சின்ன ஊசியை வைத்து மெலிதான நூலினால் பிண்ணுவது டாட்டிங். இதற்கு இதுவரை எந்த மிஷினும் வரவில்லை. கையால்தான் பிண்ண வேண்டும். இது கைவிரல்களுக்கும், மூளைக்கும் எக்ஸர்சைஸ் செய்வது போன்றது. இதை அந்த நாட்டில் ஒருவித யோகாவாகதான் பார்க்கிறார்களாம். முடிச்சுகள்தான் இதன் கணக்கு. மிக நுணுக்கமாக, பொறுமையாக மெல்லிய நூல்களால் பிண்ணுவதால் இதன் விலை மிக, மிக அதிகமாக இருக்கும். உதாரணமாக ஒரு மீட்டர் டாட்டிங் பிண்ண வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 50லிருந்து 100 ரூபாய் வரைதான் செலவாகும். ஆனால் இதனை பிண்ணி முடித்தபின் ஒரு மீட்டர் டாட்டிங் பூ வேலைபாட்டிற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் வரை கிடைக்கும். அந்தளவிற்கு நுணுக்கமான வேலைகள் கொண்டது. பார்வைக்கும் ரிச் லுக் கொடுக்கும். சேலையில், பிளவுஸ் ஓரங்களில், கைக்குட்டை யில், இளம் பெண்கள் அணிந்து கொள்ளும் டாப்ஸ், குஷன் போன்றவற்றில் இவற்றை பிண்ணலாம். பட்டு சேலைகளில் ஜரிகை நூலால் இந்த டாட்டிங் டிசைன் போட்டால் மிக ரிச்சாக தெரியும். தற்போது புதிதாக டாட்டிங்கில் ஜுவல்லரியும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

தற்போதுதான் டாட்டிங் தமிழகத்தில் பிரபலமாகி வருகிறது. விரைவில் பிரபலமாகிவிடும் என நினைக்கிறேன். இதில் டிசைன்கள் நிறைய இருக்கின்றன. இதற்கான புத்தகங்களும் கடைகளில் கிடைக்கிறது. வலைதளங்களிலும் இதற்கான வீடியோக்கள் இருக்கிறது. ஆனால் இதனை பேஸிக்காவது நேரில் பார்த்து கற்றுக்கொண்டால் மட்டுமே புரியும்.

அதேபோன்று "தாய்' க்ளே கிராப்ட்டும் இங்கு தற்போதுதான் பிரபலமாகி வருகிறது. இது தாய்லாந்திலிருந்து வரும் க்ளே அதை வைத்து பூக்கள் செய்து வர்ணம் தீட்ட வேண்டும். இந்த க்ளேவுக்கான பெயிண்டிங்கும் தாய்லாந்திலிருந்துதான் வருகிறது. இந்த தாய் க்ளேவை பொருத்தவரை சற்று விலை கூடுதலாக இருக்கும். உதாரணமாக சம்பங்கி போன்று ஒரே ஒரு சரம் மட்டுமே செய்ய குறைந்தபட்சம் 700 ரூபாய் ஆகும். இது வெயிலிலோ, ஃபேன் காற்றிலோ வைத்து காய வைக்கக் கூடாது. இயற்கை நிழலிலேயே உலர்த்த வேண்டும். விதவிதமான பூக்கள், பொம்மைகள் போன்று செய்யலாம். ஆனால் பார்ப்பதற்கு மிக மிக அழகாகவும் நேச்சுரலாகவும் இருக்கும்.

நான் கைவினைப் பொருள்கள் செய்ய ஆரம்பித்து தற்போது 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும் இன்னும் கைவினை பொருள்கள் மேல் எனக்குள்ள ஆர்வம் குறையவில்லை. இன்னமும் எங்கே யார் வித்தியாசமான கிராஃப்ட் ஒர்க் செய்கிறார்கள் என்று தெரிந்தாலும் தேடிச் சென்று கற்றுக் கொள்வேன். அதுபோன்று எனக்கு தெரிந்த கலைகள் என்னோடு அழிந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தற்போது மற்றவர்களுக்கும் கற்று கொடுத்து வருகிறேன்.
- ஸ்ரீ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com