இதோ ஒரு பசுமைத் திருமணம்...!

திருமணம்  ஆயிரங்காலத்துப்   பயிர்.  திருமணத்தின் போது      மணமகன் மணமகள் வீட்டார்,  இந்த இரண்டு  குடும்பங்களின்  உற்றார் உறவினர்கள்,  நண்பர்களின் அனைவரின் சங்கமம் நடக்கும்.  
இதோ ஒரு பசுமைத் திருமணம்...!

திருமணம்  ஆயிரங்காலத்துப் பயிர்.  திருமணத்தின் போது மணமகன் மணமகள் வீட்டார்,  இந்த இரண்டு  குடும்பங்களின்  உற்றார் உறவினர்கள், நண்பர்களின் அனைவரின் சங்கமம் நடக்கும்.  திருமணத்திற்கு வரும் அனைவர் மனதிலும் சங்கடம் பதிந்துவிடாமல் சந்தோசம் பொங்கி, "பிரமாதம்" என்று பாராட்டினை வாங்க அலங்காரம், விருந்து இவற்றில் தாராளமாகச் செலவு செய்கிறார்கள்.  இதிலிருந்து வித்தியாசமாக  ஒரு பசுமை திருமணம்  அண்மையில் திருப்பூரில் நடந்து. "இப்படியம்   ஒரு திருமணத்தை நடத்த முடியுமா..' என்று வந்தவர் அனைவரையும்  வியக்கவைத்தது.   
அப்படி என்ன வித்தியாசமாக இந்தத் திருமணத்தில் செய்துவிட்டார்கள் என்கிறீர்களா? 
"எங்கும் இயற்கை - எதிலும் பசுமை'  என்று   பிளாஸ்டிக் பொருள்களை  அறவே பயன்படுத்தாத அதே சமயம் பாரம்பரிய விழுமியங்களை மீண்டும் அறிமுகப்படுத்திய  திருமணமாக  அமைந்திருந்தது தான்  இந்த திருமணத்தை வித்தியாசமாகக் காட்டியது. 
திருப்பூரைச் சேர்ந்த லோகேஸ்வரன் - கீதாஞ்சலி ரித்திகா திருமணத்தில்தான் இந்த அதிசயங்கள் அரங்கேறின.
மணமக்கள் குடும்பத்தினருக்கு திருப்பூரில் பெயர் பெற்ற பின்னலாடைத் தொழில்தான். பாரம்பரிய விவசாயிகள் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். விவசாயத்தை  இன்றைக்கும்  மதிப்பவர்கள் . வணங்குபவர்கள் .
திருமண நிச்சயம் முடிந்ததும்   இரு வீட்டாரும்  கலந்து பேசி  திருமணத்தை பசுமை கலந்த பாரம்பரிய திருமணமாக ஜமாய்க்கலாம் என முடிவு செய்தார்கள். 
இரு வீட்டாருக்கும்  சொந்தமாக இருக்கும்  நிலங்களில், ரசாயன உரங்கள் போடாமல் இயற்கை உரங்களைப் போட்டு காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்தனர்.  இவர்களால் விளைவிக்க முடியாத  காய்கறிகளை இயற்கை விவசாயம்  செய்பவர்களிடமிருந்து   விலைக்கு  வாங்க முடிவு செய்தனர்.  இந்த "இயற்கை' முடிவினைத் தெரிந்து  கொண்ட உற்றார் உறவினர்கள் தங்கள் பங்கிற்கு யோசனை சொல்ல  நல்ல வித்தியாசமான யோசனைகள்  ஏற்றுக் கொள்ளப்பட்டன. 
மழை நீரில் திருமண விருந்தினை சமைப்பதும். மழை நீரை  செம்பு டம்ளர்களில் குடிக்கப் பரிமாறுவது என்பதுதான் அந்த  யோசனைகள்..  இந்தத் தேவைக்காக மழை நீர் சேமிப்பவர்களிடமிருந்து சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் மழை நீர் வாங்கப்பட்டதாம். தண்ணீர். காய்கறி  இயற்கையாக அமைந்து விட்ட போது விருந்து சமைப்பதற்குத் தேவையான மசாலா பொடிகளும் இயற்கை முறையில் விளைந்தவற்றிலிருந்து தயார் செய்யப்பட்டதுதான்  என்று உறுதி செய்து வாங்கப்பட்டது.  
கருப்பட்டியில் செய்யப்பட்ட பர்ஃபி தான் இனிப்பாக விருந்து இலையில் வைக்கப்பட்டது. பாசிப்பருப்பு மாவில் செய்யப்பட உருண்டை, வாழைப்பூ வடை, குதிரைவாலி அரிசியில் செய்யப்பட்ட சாம்பார் சாதம், இப்படி சிறுதானிய உணவுகளும் பரிமாறப்பட்டன. 

திருமணத்தின் போது வசதிக்கு ஏற்ற மாதிரி மணமகனுக்கு  கார் அல்லது "பைக்' அன்பளிப்பு செய்யப்படும் நியதிக்கு இந்த பசுமைத் திருமணத்தில் விடை கொடுக்கப்பட்டிருந்தது. இரண்டு தலை முறைக்கு முன்பு மணமகளுக்கு தரும் பெண்வீட்டு  சீரில்  பசு மாடும்  அடங்கும்.  அந்தக் கால நிகழ்வுகளை புதுப்பிக்கும் விதமாக   மணமகளுக்கு    இரண்டு காங்கேயம் பசுக்களை, கன்றுக்குட்டியோடு சீராக மணமக்களின் பெற்றோர் வழங்கியுள்ளனர். பசுக்கள்  மண்டப  வாசலிலேயே நிறுத்தப்பட்டிருந்தன .  திருமணத்திற்கு வரும் சிறு குழந்தைகள் ஓடியாடி விளையாட நுங்கு எடுத்த பனங்காய்களில் செய்யப்பட்ட வண்டிகளை வழங்கினார்கள். திருமணத்தை முன்னிட்டு இயற்கை விவசாய விளை பொருள்கள், பாக்கு, வாழை மட்டையில் செய்யப்பட தட்டுகள், மண் கலன்கள் விற்கப்படும் இயற்கை அங்காடியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  
திருமணத்தில் பிளாஸ்டிக் பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை. கை துடைக்க  பருத்தியிலான சிறு கைக்குட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 
எங்கும்  இயற்கை எதிலும் இயற்கை  என்று  ஒவ்வொரு  விஷயத்திலும் பார்த்து பார்த்து சிரத்தையுடன் செய்யப்பட இந்த வித்தியாசமான பசுமைத் திருமணம் திருப்பூர் வட்டாரத்தில் பரபரப்பு செய்தியானது. இன்னும் பல மாதங்களுக்கும் பேசப்படும். "நல்லாவே  யோசிச்சு அதை ரசிச்சு ரசிச்சு செய்திருக்காங்க. இந்தத் திருமணம்  நினைவில் பசுமையாக  நிற்கும்''  என்ற கமெண்ட்டை திருமணத்திற்கு  வந்த  பலரும்  சொன்னார்கள்..!  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com