எதிர் நீச்சல் பழகிப்போச்சு!

எதிர் நீச்சல் பழகிப்போச்சு!

சாதனைகள் ஒருவரை பிரபலமாக்கும். உண்மைதான். ஆனால், கேலியும், கிண்டலும் ஒருவரைப் பிரபலமாக்கும் . வாழ்க்கையைப் புரட்டிப் போடும்.

சாதனைகள் ஒருவரை பிரபலமாக்கும். உண்மைதான். ஆனால், கேலியும், கிண்டலும் ஒருவரைப் பிரபலமாக்கும் . வாழ்க்கையைப் புரட்டிப் போடும்.. அதிர்ஷ்டங்களையும் அள்ளித் தருந்திருக்கிறது ஹனானுக்கு. இன்றைக்கு அகில இந்திய அளவில் ஹனான் பிரபலம். ஆனால் அதற்கு ஹனான் தந்த விலை ?

குடிகாரத் தந்தை ... விவாக ரத்து செய்யப்பட்ட , மனநிலை பாதிக்கப்பட்ட தாய்... வாடகை வீடு... உடன் பிறந்த தம்பி... வருமானம் இல்லை. வாழ்க்கை எப்படி இருக்கும் ? துயரம்.. சோகம். இந்த நிலையில் குடும்பப் பொறுப்பை சுமக்கும் சுமைதாங்கியாய் மாறினார் கல்லூரி மாணவியான ஹனான்.

குடும்பத்தை நடத்த ஹனான் செய்யாத வேலையில்லை. டியூஷன் எடுப்பது, மணிகளை கோர்த்து மாலை உருவாக்கி விற்பது, கவரிங் நகைகள் விற்பது... திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடிப்பது... சீரியல் நடிகைகளுக்கு பின்னனி குரல் கொடுப்பது... என்று பல வேலைகள் செய்து பார்த்தார். ஆனால் வருமானம் போதவில்லை.

மீன் விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ஒருவர் சொல்ல ... கடைசியில் கொச்சி நகரின் "தம்மனம்' பகுதியில் தெருவோரம் மீன் விற்கத் தொடங்கினார் ஹனான். அதுவும் கல்லூரி சீருடையுடன். தெருவில் போகிற அனைவரும் சீருடையுடன் மீன் விற்கும் பெண் யார்... என்று அதிசயமாகப் பார்க்கத் தொடங்கினார்கள்.

ஓரிரு நாளில் மீடியாக்கள் ஹனானை சூழ்ந்து கொள்ள, சமூக வலைத்தளங்களில் ஹனான் வைரல் ஆனார். தாய்க்காகவும், தம்பிக்காகவும் தனது படிப்பிற்காகவும் கஷ்டப்பட்டு உழைக்கும் ஹனானைப் பாராட்டிப் பதிவுகள் ஒருபுறம் வலம் வர... கேலியும், கிண்டல்களும், தரம் தாழ்ந்த விமர்சனங்களும் ஹனானைக் குறி வைத்தன. அந்த எதிர்மறை விமர்சனங்கள் கேரளா முதல்வர் பினராயி விஜயனின் கவனத்தை ஹனான் பக்கம் திரும்ப வைத்தது; பல திருப்பங்களையும் வர வைத்தது.
 ஹனான் மனம் திறக்கிறார்:

"எங்களுக்கு சொந்த ஊர் திருச்சூர். வாப்பா (அப்பா) ஹமீது, பிசினஸ்மேன். கூட்டுக் குடும்பம். இந்தக் காலத்தில் கூட்டுக்குடும்பத்தில் பிரச்னை வராமல் இருக்குமா..? எங்களுக்கும் வந்தது. தனி வீடு போனோம். திருச்சூரில் பணக்கார வீட்டு பிள்ளைகள் படிக்கும் பள்ளி ஒன்றில் என்னை சேர்த்து வாப்பா படிக்க வைத்தார். நாளடைவில் வாப்பாவுக்கு குடிப் பழக்கம் தொற்றிக் கொண்டது. குடி அவரைப் பாழாக்கியதுடன் குடும்ப சூழ்நிலையையும் கெடுத்து குட்டிச் சுவராக்கியது. வாப்பாவிடம் மன்றாடிய அம்மாவுக்கு அடி உதைகள் கிடைத்தன. அம்மாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பாதிக்கப்பட்டது. வாப்பாவின் குடிப்பழக்கம் தொடர்ந்தது. வீட்டில் வறுமை வந்து உட்கார்ந்து கொண்டது.

அப்போதுதான் மணிகளைக் கோர்த்து மாலைகள் செய்து விற்கத் தொடங்கினேன். கவரிங் நகைகளை வாங்கி விற்க ஆரம்பித்தேன். அதனால் பட்டினியில்லாமல் நாள்களைத் தள்ள முடிந்தது. கொஞ்ச நாளில் வாப்பா அம்மாவை விவாகரத்து செய்தார். அம்மாவை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னார். அம்மாவுடன் நானும் தம்பியும் புறப்பட்டோம். சில நாட்கள் தோழியின் வீட்டில் தஞ்சம் புகுந்தோம். பிறகு சிறிய வாடகை வீட்டிற்கு மாறினோம். கஷ்ட ஜீவனத்திலும் பள்ளிப் படிப்பு முடிந்தது. கல்லூரியில் சேர பணமில்லை. ஒரு ஆண்டு வேலை பார்த்து சம்பாதித்து கல்லூரியில் சேரலாம் என்று முடிவு செய்து கொச்சி நகரில் கால் சென்டரில் வேலைக்குச் சேர்ந்தேன்.
இடைவிடாது வேலை செய்தேன். அதன் விளைவாக எனது காதுகளில் பல பிரச்னைகள் தோன்றின. வேறு வேலைக்கு மாறினேன். அம்மாவையும், தம்பியையும் கொச்சி நகருக்கு அழைத்துக் கொண்டேன். படித்து டாக்டராக வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால் விதி செய்த சதியால் தோற்றுப் போனேன். முடிவில் தொடுபுழாவில் இருக்கும் கல்லூரியில் வேதியல் பட்டப்படிப்பில் சேர்ந்தேன்.

தினமும் பஸ்ஸில் பயணம். எனக்கு சமையல் நன்றாக வரும். வீட்டில் விதம் விதமாக கோழி பொறித்துக் கொண்டு போய் கல்லூரியில் விற்பேன். கல்லூரியில் அனைவரிடமும் மரியாதையாகப் பழகுவேன். எனது குடும்ப நிலைமையும், எனது கேட்கும் திறன் குறைவும் அறிந்த கல்லூரி ஆசிரியர்கள், நண்பர்கள் சேர்ந்து எனது காது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
 விடுமுறை நாட்களில் சிற்றுண்டி பலகாரம் செய்து விற்பேன். அப்போதுதான் "மீன் விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். முயற்சி செய்யேன்' என்று ஒருவர் சொல்ல, அக்கம் பக்கத்தவர்களிடம் கடன் வாங்கி மீன் விற்பனை தொடங்கினேன்.

ஆனால் அதில் சிரமம் இல்லாமல் இல்லை. அதிகாலை நான்கு மணிக்கு தயாராக வேண்டும். சைக்கிளில் பெட்டியைப் பொருத்திக் கொண்டு மீன் வாங்க கிளம்ப வேண்டும். மூன்று கி. மீ பயணம். அங்கே மீன் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவேன். பெட்டியில் ஐஸ் கட்டிகளை போட்டு மூடி வைத்து விட்டு கல்லூரிக்குப் புறப்படுவேன். மாலை நாலரை மணிக்கு வீடு திரும்புவேன். மீன் விற்பனை தொடங்குவேன். அதற்குள் பத்திரிகைகள், சானல்கள், சமூக வலை தளங்கள் என்னைப் பற்றி எழுத, பலரும் உதவிகள் செய்ய முன்வந்தார்கள்.
 எனது வங்கிக் கணக்கிற்கு நிதி உதவிகள் வரத் தொடங்கின. தொடக்கத்தில் என்னை, எனது உழைப்பைப் பாராட்டி வந்த பதிவுகள், எனக்கு நிதி உதவிகள் வருவதை அறிந்து நிறம் மாறத் தொடங்கின. நான் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிப்பதால், நான் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் விளம்பர யுக்திகளில் எனது மீன் விற்பனையும் ஒன்று என்று விமர்சனங்கள் எழுந்தன. எனது தம்பி ஆங்கில வழியில் தனியார் பள்ளியில் படிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தன. நான் வருமானம் இன்றி கஷ்டப்படுகிறேன் என்பது பச்சைப் பொய் என்றும் சமூக தளங்களில் பதிவினைப் போட்டார்கள். அதனால் நான் கலங்கிப் போனேன். ""எனக்கு நிதி உதவி வேண்டாம். நிதி வழங்கியவர்கள் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்'' என்று கேட்டுக் கொண்டேன்.

இப்படி விமர்சனங்கள் வரம்புகளை மீறிய போது கேரளா முதல்வர் குறுக்கிட்டு உதவிக்கு வந்தார். கேரளா காவல்துறையும் தரம் குறைந்த பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த மூன்று பேர்களை கைது செய்துள்ளது.

எனது நிலைமையை அறிந்த மலையாளத் திரைப்பட இயக்குநர், மோகன்லாலின் மகன் பிரணவ் நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க முன்வந்தார்.

நல்ல வேளை, எனது குடும்ப நிலைமையை அறிந்த கல்லூரி முதல்வர் "ஹனான் சொல்வதெல்லாம் உண்மை... நாங்கள் இலவசமாகப் படிக்கலாம் என்று சொன்ன போது கூட , கட்டணம் கட்டி படிக்கிறார். அவர் விரும்பினால், நாங்கள் படிப்பிற்காக உதவத் தயார்..'' என்று சொல்லி நிலைமையை சரி செய்திருக்கிறார். நான் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தாலும் மீன் விற்பனை செய்வதை நிறுத்த மாட்டேன். தொடர்ந்து படிக்கவும் செய்வேன். என்னை கேரளா அரசின் மகளாக நடத்த போவதாக கேரளா முதல்வர் அறிவித்துள்ளார். கேரள எதிர்கட்சித் தலைவர் சென்னித்தலா எங்களுக்கு வீடு கட்டித் தருவதாக உறுதி அளித்துள்ளார். இதனால் எங்கள் எதிர்காலம் கஷ்டங்கள் இல்லாததாக அமையும் என்று நம்புகிறேன்'' என்கிறார் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடும் ஹனான்.
 - கண்ணம்மா பாரதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com