சமையல் சமையல்

வாணலியில் பாலை ஊற்றி  மெல்லிய  தீயில் அடுப்பை வைத்து பாலை காய்ச்ச வேண்டும்.
சமையல் சமையல்

பாஸந்தி 

தேவையானவை: 
பால்  - 2லிட்டர்
சர்க்கரை - 1  கிண்ணம்
குங்குமப்பூ - தேவையான அளவு
நெய்-   3 தேக்கரண்டி
பாதாம் -  10 
முந்திரி - 15 
பிஸ்தா -  தேவையான அளவு

செய்முறை:  வாணலியில் பாலை ஊற்றி  மெல்லிய  தீயில் அடுப்பை வைத்து பாலை காய்ச்ச வேண்டும்.  (வாணலியின் அடி கனமாக இருக்க வேண்டும்). இல்லையென்றால் பாஸந்தி வெள்ளை நிறத்தில் இருக்காது கறுப்பு நிறத்தில் தான் இருக்கும்.   பால் காய்ந்ததும் சிறிது குங்குமப்பூவைச்  சேர்த்து கலக்க வேண்டும். அதன் மேல் படியும்  ஏடை  தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டே  இருக்கவும். இவ்வாறு பாலின் அளவு கால் லிட்டர் வரும் அளவிற்கு குங்குமப்பூ கலந்து ஏடுகளை எடுத்துக் கொண்டே  இருக்க வேண்டும். அடுத்ததாக சேகரித்த பால்ஏடு மற்றும் சர்க்கரையும் சேர்த்து சிறிதளவு தீயில் நன்றாக கிளறவும். பிறகு பாதாம், முந்திரி, பிஸ்தா மூன்று பருப்புகளையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்.  பாஸந்தி தயார். இதனை  குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ச்சியாகவும் சாப்பிடலாம்.  அல்லது  சூடாகவும் சாப்பிடலாம்.


காரமான மிளகு அடை

தேவையானவை: 

இட்லி அரிசி  - 2 கிண்ணம்
பச்சரிசி* - 1 கிண்ணம்
உளுந்தம் பருப்பு - 1/2  கிண்ணம்
கடலைப்பருப்பு - 2 கிண்ணம்
துவரம் பருப்பு - 2  தேக்கரண்டி 
மிளகு - 2  தேக்கரண்டி 
சீரகம் - 2 தேக்கரண்டி 
தேங்காய்த்  துருவல் - 1 கிண்ணம்
நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 2 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :  முதலில் அரிசி மற்றும் பச்சரிசி தனியாகவும்,  உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு தனியாகவும் நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை நன்கு கழுவி, கிரைண்டரில் போட்டு, அதனுடன் மிளகு, சீரகம், தேங்காய் துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு, பின் அரைத்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி, அதன் மேல் சிறிது தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்து எண்ணெய்  ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், காரமான மிளகு அடை தயார்.
பா. கவிதா


ஸ்பைசி டோக்ளா

தேவையானவை: 
கடலை மாவு - 1 கிண்ணம்
புளிப்புத் தயிர் -  முக்கால் கிண்ணம்
மிளகாய்த்தூள்  -  1 தேக்கரண்டி 
ஃப்ரூட் சால்ட் 
(டிபார்ட்மெண்ட் கடைகளில் கிடைக்கும்)  -  ஒரு கைப்பிடி 
 தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
சீரகம்  -  அரை  தேக்கரண்டி 
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி , பச்சை மிளகாய் துண்டுகள் - 1 தேக்கரண்டி 
எண்ணெய்,  உப்பு  -  தேவையான அளவு

செய்முறை: தயிரில் கடலை மாவு,  உப்பு, மிளகாய்த்தூளை கலக்கவும். ஒரு தேக்கரண்டி  எண்ணெய் விட்டு, ஃப்ரூட் சால்ட் போட்டு கெட்டியாகக் கலக்கவும். கலவையை எண்ணெய் தடவிய தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் துண்டுகள் போட்டால்  டோக்ளா ரெடி.
வாணலியில் எண்ணெய் விட்டு  சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள் போட்டு கலக்கவும். டோக்ளா துண்டுகளை சேர்த்து லேசாக கிளறவும். கொத்துமல்லி, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் போட்டு கலந்து எடுத்து வைத்தால்.  டோக்ளா தயார். சட்னி தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். 
குறிப்பு: புரோட்டீன், கால்ஷியம் நிரம்பியது.


புளி அவல்

தேவையானவை: 
அவல் (கெட்டி அவல்) -  1 கிண்ணம்
புளி  - நெல்லிக்காய் அளவு
கடுகு - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் -  1
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு  - தலா 1 தேக்கரண்டி 
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி  - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
ரசப்பொடி -  ஒரு தேக்கரண்டி 
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 3  தேக்கரண்டி 
உப்பு-  தேவையான அளவு

செய்முறை: புளியைக் கரைத்து வடிகட்டி எடுக்கவும்.  உப்பு, ரசப்பொடி கலந்து, அதில் அவலை கலந்து ஊறவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும். பிசிறிய அவலை போட்டு 2 நிமிடம் கிளறவும். நன்கு உதிர்ந்து வந்ததும் இறக்கினால், புளி அவல் தயார்.
குறிப்பு: குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய இந்த காலை டிபன், நீரிழிவு நோய் உள்ளவர்கள்  உட்பட எல்லோருக்கும் ஏற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com