97 வயதிலும் பிரசவம் பார்க்கும் பெண்!

கர்நாடகத்தில் உள்ள பவகடா தாலுகா கிருஷ்ணாபுராவில் வசித்து வரும் நரசம்மா, கர்ப்பிணிகள் பாதுகாப்பாக குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவும் மகப்பேறு மருத்துவராக செயல்பட்டு வருகிறார்
97 வயதிலும் பிரசவம் பார்க்கும் பெண்!

கர்நாடகத்தில் உள்ள பவகடா தாலுகா கிருஷ்ணாபுராவில் வசித்து வரும் நரசம்மா, கர்ப்பிணிகள் பாதுகாப்பாக குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவும் மகப்பேறு மருத்துவராக செயல்பட்டு வருகிறார். 12 குழந்தைகளுக்கு தாயான இவருக்கு 22 பேரக் குழந்தைகள். இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்த்திருக்கிறார். இவருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.
 சுலகிட்டி நரசம்மாவுக்கு (சுலகிட்டி என்றால் கன்னடத்தில் மகப்பேறு என்று பொருள்) தெலுங்கு மொழியைத் தவிர, வேறு மொழிகள் தெரியாது. ஆந்திர மாநிலத்திலிருந்து தன் கணவர் ஆஞ்சினப்பாவுடன் வந்து, கர்நாடக மாநிலம் கிருஷ்ணாபுராவில் குடியேறிய இவருக்கு 12 குழந்தைகள். இவர்களில் நான்கு ஆண் குழந்தைகள் இளம் வயதிலேயே இறந்துவிட்டன. மொத்தம் 22 பேரக் குழந்தைகள். இவர்களில் நான்கு பெண்களுக்கு நரசம்மாவே பிரசவம் பார்த்துள்ளார். இவரது முதலாவது பெண் அஞ்சனம்மாவும் தாயிடம் பயிற்சி பெற்றதால், நரசம்மாவின் 12-ஆவது பிரசவத்தின்போது அவரே பிரசவம் பார்த்துள்ளார். இவரும் தற்போது உயிருடன் இல்லை.
 நரசம்மா தன் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு மட்டுமின்றி, சுற்றுப்புறக் கிராமங்களில் உள்ள பெண்களுக்கும் பிரசவம் பார்த்து வருகிறார். இவரது பாதுகாப்பான மகப்பேறு மருத்துவம் வெளி உலகுக்கு எதிர்பாராத விதமாகத்தான் தெரிய வந்தது.
 2007-ஆம் ஆண்டு நரசம்மாவின் மகன் பவகடா ஸ்ரீராம் தனது மனைவியைப் பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்ததை அறிந்த நரசம்மா, மகனை கண்டபடி திட்டிக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் அந்த கிராமத்துக்கு வந்த பெண் எழுத்தாளர்கள் அன்னபூர்ணா வெங்கட நஞ்சப்பா மற்றும் ராமகுமாரி ஆகியோர் நரசம்மாவை அணுகி, "எதற்காக மகனைக் கோபித்துக் கொள்கிறீர்கள்?'' என்று கேட்டனர். அப்போதுதான் நரசம்மா அந்தக் கிராமத்தில் மட்டுமின்றி சுற்றுப்புறங்களிலும் எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல், எந்த நேரத்திலும் இலவசமாக பாதுகாப்பான பிரசவம் பார்ப்பது தெரிய வந்தது.
 நரசம்மாவின் தன்னலமற்ற சமூக சேவையை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று நினைத்த அந்த எழுத்தாளர்கள், மாவட்ட அளவிலான சாதனை மகளிர் விருதுக்கு பரிந்துரை செய்தனர். அவர்கள் எதிர்பார்த்ததைவிட மாநிலம் முழுவதிலுமிருந்து நரசம்மாவுக்கு பாராட்டுகள் குவிந்தன.
 2012-ஆம் ஆண்டு கர்நாடக அரசு "தேவராஜ் அர்ஸ்' விருதையும், தொடர்ந்து "கித்தூர் ராணி சென்னம்மா' விருதையும் வழங்கியது. மத்திய அரசும் "வயோஸ்ரேஸ்டா சம்மனா' என்ற விருதை வழங்கிக் கெüரவித்தது. 2014-ஆம் ஆண்டு தும்கூர் பல்கலைக்கழகம் சுலகிட்டி நரசம்மாவுக்கு கெüரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தற்போது பத்மஸ்ரீ விருதும் கிடைத்துள்ளது.
 மகப்பேறு மருத்துவரான இவரது பாட்டி மரிகெம்மாவிடம் தான் நரசம்மா பிரசவம் பார்க்கும் பயிற்சி பெற்றாராம். நரசம்மாவின் முதல் ஐந்து பிரசவங்களைப் பார்த்தவர் அவரது பாட்டிதான். அவ்வப்போது தன் கிராமத்துக்கு வந்து தங்கிச் செல்லும் நாடோடி கூட்டங்களில் உள்ள கர்ப்பிணிகளுக்கும் இவர் பிரசவம் பார்த்துள்ளார். பதிலுக்கு அவர்களிடமிருந்து கர்ப்பிணிகளுக்கான இயற்கை மருந்துகள் தயாரிப்பதைக் கற்றுக்கொண்டாராம்.
 இந்த வயதிலும் நல்ல நினைவாற்றலுடன், கண்ணாடி அணியாமல் கூர்மையான பார்வையுடன் செயல்படும் நரசம்மாவுக்கு பவகடாவில் விளையும் நிலக்கடலை சட்னியும், சோள ரொட்டியும்தான் தினசரி உணவு. அவ்வப்போது கறிக்குழம்பு சாப்பிடுவதுண்டு. "இதுதான் என் தேக ஆரோக்கியத்தின் ரகசியம்''
 என்கிறார் நரசம்மா.
 - அ.குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com