சட்னி ஸ்பெஷல்! 

கேரட் சட்னி, பீர்க்கங்காய் சட்னி, மல்லி சட்னி, பூண்டு சட்னி, பீட்ரூட் சட்னி, கறிவடாம் சட்னி 

கேரட் சட்னி

தேவையானவை:
துருவிய கேரட் - 1 கிண்ணம்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 5
புளிக்கரைசல் - 2 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - 50 மி.லி.
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 4 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய்விட்டு உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து, வற்றல் மிளகாயைப் போடவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 2 நிமிஷத்துக்குப் பிறகு கேரட் துருவல், புளிக்கரைசல் சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். பின்னர், கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்த்துப் பரிமாறவும்.

பீர்க்கங்காய் சட்னி

தேவையானவை:
தோல்சீவி பொடியாக நறுக்கிய இளம் பீர்க்கங்காய் - 1 கிண்ணம்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கிண்ணம்
புளிக்கரைசல் - 4 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
பெருங்காயம் - 2 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - 50 மி.லி.
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் வெங்காயம், பீர்க்கங்காய், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, அதனுடன் பீர்க்கங்காய் விழுது, புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இறுதியில் கறிவேப்பிலை தூவி இறக்கிப் பரிமாறவும். இட்லி, தோசை, சப்பாத்தி, சூடான சாதம் அனைத்துக்கும் ஏற்றது.

மல்லி சட்னி

தேவையானவை:
ஆய்ந்த மல்லித்தழை - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
பச்சை மிளகாய் - 5
புளிக்கரைசல் - 2 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - 50 மி.லி.
உளுத்தம் பருப்பு - 5 மேசைக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து சிவந்ததும் பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து பச்சை மாறாமல் வதக்கி, புளித்தண்ணீர் சேர்த்து அரைக்கவும். ரொம்பவும் விழுதாக அரைக்காமல், கொரகொரப்பாக அரைத்துப் பரிமாற வேண்டும். பச்சை மிளகாயை அப்படியே எண்ணெயில் போட்டால் வெடித்து முகத்தில் தெறிக்கும். எனவே சிறிதாக நறுக்கி வதக்க வேண்டும்.

பூண்டு சட்னி

தேவையானவை: 
வற்றல் மிளகாய் - 10
பூண்டு - 10 பல்
நன்கு பழுத்த தக்காளி - 3
கடுகு - 1 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - 50 மி.லி.
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: வற்றல் மிளகாய், பூண்டு, உப்பு இவற்றைத் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைக்கவும். பின்னர் தக்காளியை வெட்டி அதனுடன் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். தாளிக்காமல் சாப்பிட்டாலும் தனி டேஸ்ட்! இந்த சட்னியை இரவில் இட்லியுடன் சாப்பிட்டால் எளிதில் செரித்துவிடும். கொலஸ்ட்ராலையும் குறைக்கும்.

பீட்ரூட் சட்னி

தேவையானவை:
துருவிய பீட்ரூட் - 1 கிண்ணம்
நறுக்கிய வெங்காயம் - 1 கிண்ணம்
வற்றல் மிளகாய் - 7
நறுக்கிய தக்காளி - 1 கிண்ணம்
நல்லெண்ணெய் - 50 மி.லி.
கடுகு - 1 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு - 4 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடலைப்பருப்பு சிவக்க வறுத்து, வற்றல் மிளகாயைச் சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், துருவிய பீட்ரூட்டைச் சேர்த்து சுருள வதக்கவும். அதனுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கி இறக்கவும். அதனை ஆறவிட்டு, விழுதாக அரைக்கவும். கடைசியாக கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளித்து பீட்ரூட் 
சட்னியில் கலந்து பரிமாறவும்.

கறிவடாம் சட்னி

தேவையானவை:
உதிர்த்த கறிவடாம் - 1 கிண்ணம்
தேங்காய் துருவல் - 1/2 கிண்ணம்
வற்றல் மிளகாய் - 10
புளிக்கரைசல் - 10 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - 100 மி.லி.
உப்பு - தேவையான அளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய் காயவிட்டு உதிர்த்த கறிவடாமை சிவக்கப் பொரிக்கவும். அதனுடன் மிளகாயைச் சேர்த்து வதக்கவும். ஆறியவுடன் உப்பு, புளிக்கரைசல் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்தும் அரைக்கலாம், சேர்க்காமலும் அரைக்கலாம். இட்லி, தோசை, புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதத்துக்கு ஏற்றது.

இந்த வாரம் சமையல் குறிப்புகளை வழங்குபவர் ராஜேஸ்வரி ரவிக்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com