சாதனைப் பெண்கள்!

1959-ஆம் ஆண்டு டாக்டர் ஜெகதீஷ் காந்தியைத் திருமணம் செய்து கொண்ட பாரதி, இருவரும் சேர்ந்து லக்னௌவில் தங்கள் வீட்டிலேயே 5 குழந்தைகளை வைத்து சிட்டி மாண்டிசோரி பள்ளியைத் தொடங்கினார்கள்
சாதனைப் பெண்கள்!

(சென்ற வாரத் தொடர்ச்சி)
பாரதி காந்தி: 1959-ஆம் ஆண்டு டாக்டர் ஜெகதீஷ் காந்தியைத் திருமணம் செய்து கொண்ட பாரதி, இருவரும் சேர்ந்து லக்னௌவில் தங்கள் வீட்டிலேயே 5 குழந்தைகளை வைத்து சிட்டி மாண்டிசோரி பள்ளியைத் தொடங்கினார்கள். ஒரே ஒரு வகுப்பறை, கரும்பலகை, அண்டை வீட்டாரிடம் ரூ.300-க்கு வாங்கிய புத்தகங்களுடன் தொடங்கிய பள்ளி, 57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 55 ஆயிரம் மாணவர்களுடன் லக்னௌ முழுவதும் 18 பள்ளிகளாக விரிவடைந்துள்ளது. அதிக மாணவர்களைக் கொண்டுள்ள பள்ளி என்று கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. யுனெஸ்கோ விருதையும் பெற்றுள்ளது. சமூக சிந்தனையுடன் செயல்படும் பாரதி காந்தி, தன் வாழ்க்கையை கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சிக்காக அர்ப்பணித்துள்ளார்.

கிரண் சோப்ரா: வரிஷித் நாக்ரிக் கேசரி கிளப் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் கிரண் சோப்ரா. இந்த நிறுவனத்தின் மூலம் பணம் படைத்தவர்கள் வயோதிகர்களைத் தத்தெடுக்கலாம். "என்னிடம் வருபவர்கள், எங்கள் பெற்றோரைக் கவனிக்க முடியவில்லை. ஏதாவது கருணை இல்லத்தில் சேர்க்க உதவுங்கள்'' என்று கேட்பதுண்டு. இது தவறு என்பது என் கருத்து. வயதான பெற்றோர் அவர்களது குடும்பத்தினர் வீட்டில் இருப்பது தான் நல்லது. இதற்கு பணப் பிரச்னைதான் காரணம் என்பதால் எங்கள் நிறுவனத்தின் மூலம் வசதி படைத்தவர்கள் இவர்களைத் தத்தெடுத்து, பண உதவி செய்ய ஏற்பாடு செய்கிறோம்'' என்கிறார்.

நீரஜா பிர்லா: சமூகத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் களங்கத்தைப் போக்கவும், தரமான சிகிச்சை அளிக்கவும் தொடங்கப்பட்ட எம் பவர் நிறுவனத்தின் தலைவராக உள்ள நீரஜா பிர்லா, இளவயதிலேயே மனநிலை பாதிக்கப்பட்டு வெளியில் செல்லத் தயங்குபவர்களுக்கு முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சிறுவயதிலேயே மனநிலை பாதிக்கும் குழந்தைகளைக் கண்காணித்து மனச்சிதைவு ஏற்படாமல் தடுப்பதற்கு நீரஜா மும்பையில் நடத்தும் இருபள்ளிகளில் ஒன்று மும்பையிலேயே மூன்றாவது சிறந்த சர்வதேச பள்ளி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

ரீத்து டால்மியா: இந்தியாவில் மிகச்சிறந்த சமையல் கலை நிபுணர்களில் ஒருவராகவும், தில்லியில் ஆறு ஹோட்டல்களின் நிர்வாகி மற்றும் துணைத் தலைவராகவும் இருக்கும் ரீத்து டால்மியா, இத்தாலியிலும் ஒரு ஹோட்டலை நடத்துகிறார். 22 வயதில் லண்டனில் இந்திய உணவு வகைகளை அறிமுகப்படுத்தும் ஹோட்டல் ஒன்றைத் திறந்தார். 2000-ஆம் ஆண்டில் இந்தியா திரும்பிய ரீத்து, தில்லியில் "திவா' என்ற பெயரில் இத்தாலிய உணவு வகை ஹோட்டலைத் திறந்தார். இத்தாலியிலும் இவர் தொடங்கிய இந்திய - இத்தாலிய ஹோட்டல் வெற்றி பெறவே, சிறந்த சமையல் கலை நிபுணர் என்ற சிறப்புடன் திறமையான ஹோட்டல் நிர்வாகி என்ற பெயரையும் பெற்றார்.

சங்கீதா ஜிண்டால்: ஜே.எஸ்.டபிள்யூ அறக்கட்டளைத் தலைவரான சங்கீதா ஜிண்டால், கர்நாடகத்தில் உள்ள விஜயநகரில் 10 ஏக்கர் நிலத்தில் "கலாதாம்' என்ற பெயரில் ஓவிய கிராமமொன்றை அமைத்து, அங்குள்ள ஹம்பி கோயில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். 9 இந்திய மாநிலங்களில் நடக்கும் ஓவியக் கண்காட்சிகளை ஒருங்கிணைத்து நடத்தும் பொறுப்பில் உள்ள இவர், மும்பையில் ஜிண்டால் கார்ப்பரேட் கலெக்ஷ்ன் ஆஃப் ஆர்ட் நிறுவனம் சேகரித்து வைத்துள்ள 500-க்கும் மேற்பட்ட ஓவியங்களைப் பாதுகாத்து வருகிறார். "ஆர்ட் இந்தியா' என்ற பத்திரிகையையும் நடத்தி வருகிறார்.
- அ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com