பூனை வணங்கியும் யானை வணங்கியும்

குப்பைமேனி மூலிகைக்கு "பூனை வணங்கி' என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு. நெருஞ்சி மூலிகைக்கு "யானை வணங்கி' என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு.
பூனை வணங்கியும் யானை வணங்கியும்

குப்பைமேனி மூலிகைக்கு "பூனை வணங்கி' என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு. பூனைகளுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டால் குப்பைமேனி மூலிகைச் செடியை நாடிச் சென்று அதன் இலை, தண்டு பகுதிகளைத் தின்னும். இதனால் பூனைகளுக்கு வயிற்றுக்கோளாறு நலமாகிவிடும்.
 எனவேதான் இந்த மூலிகைக்கு "பூனை வணங்கி' என்ற சிறப்புப் பெயர் வந்தது. பொதுவாக குப்பைமேனி மூலிகை மனிதர்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் இலைகளுடன் சிறிது பூண்டு சேர்த்து மையாக அரைத்து ஒரு கோலிக்குண்டு அளவு சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும். குடற்புழுக்களை அழித்து மலத்துடன் வெளியேற்றும். குளிர்காலத்தில் குப்பைமேனி இலைகளுடன் மிளகு, சுக்கு சேர்த்து கசாயம் தயாரித்துக் குடித்தால் குளிர் உடலைப் பாதிக்காது.
 நெருஞ்சி மூலிகைக்கு "யானை வணங்கி' என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு. காட்டுப் பகுதியில் சில இடங்களில் நெருஞ்சிச் செடிகள் தரையோடு தரையாக படர்ந்து பல முட்கள் உள்ள நெருஞ்சிக் காய்களுடன் காணப்படும். இந்த நெருஞ்சி முட்கள் காலில் குத்திவிடும் என்பதற்காக, யானைகள் இந்த மூலிகையைக் கண்டதும் ஒதுங்கிப் போய்விடுமாம். இதனால் நெருஞ்சி மூலிகைக்கு "யானை வணங்கி' என்று பெயர் வந்தது. நெருஞ்சி மூலிகை மனிதர்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. நெருஞ்சி முட்கள் பலமுனை கொண்டு உருண்டையாக இருக்கும். இதனைக் கசாயம் வைத்துக் குடித்து வந்தால், சிறுநீரகக் கோளாறுகளைக் குணப்படுத்தும். சிறுநீரகப் பாதையில் நோய்க்கிருமிகள் இருந்தாலும் அவற்றை அழித்து நலன் பயக்கும். நெருஞ்சிக் கொடியை வேரோடு பிடுங்கி, நன்கு சத்தம் செய்து கசாயம் செய்து குடித்தாலும் நல்ல குணம் கிடைக்கும். நெருஞ்சியின் இலை, பூ, காய், வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்படு உடையவை.
 "மூலிகை மகத்துவம்' என்ற நூலிலிருந்து
 - உ. ராமநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com