மீண்டும் மஞ்சள் பை!

பிளாஸ்டிக் பொருள்களை குறிப்பாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது நீர், நிலம், காற்று என்று சுற்றுப்புறச் சூழலுக்கு பேராபத்தினை விளைவித்து வருகிறது. பிளாஸ்டிக் பைகளை தெரியாமல் தின்னும் மாடுகள்,
மீண்டும் மஞ்சள் பை!

பிளாஸ்டிக் பொருள்களை குறிப்பாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது நீர், நிலம், காற்று என்று சுற்றுப்புறச் சூழலுக்கு பேராபத்தினை விளைவித்து வருகிறது. பிளாஸ்டிக் பைகளை தெரியாமல் தின்னும் மாடுகள், விலங்குகள் சாகின்றன. கடலில் குவிக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் பெரிய மீன்களின் வயிற்றுக்குள் சென்று அவையும் செத்துப் போகின்றன. பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதால் எழும் புகைமண்டலம் புற்று நோய் மற்றும் பல நோய்களுக்கு அச்சாரமாக உள்ளது. 
செலவு குறைவு எடையும் குறைவு என்பதால் பிளாஸ்டிக் பைகள் உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளன. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் விதமாக "மஞ்சள் பை' மற்றும் "பிளாஸ்டிக் பூதம்' இயக்கத்தைக் கணவர் கிருஷ்ணனுடன் இணைந்து உருவாக்கி நடத்தி வருபவர் கெளரி. இவர் மதுரையைச் சேர்ந்த தொழில் முனைவர். 
தனது பயணம் குறித்து கெளரி விளக்குகிறார்: 

"நானும் என் கணவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள். கணினித் துறையில் பணி கிடைத்ததால் சென்னையில் சில காலம் வாசம். கை நிறைய சம்பளம். வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 2010-இல் மகள் பிறந்தாள். அவளுக்கு சுவாசிப்பதில் சிரமம்; ஆங்கில மருத்துவம் பார்த்தோம். பல மாதம் ஓடியும் பயனில்லை. மதுரையில் வந்து மாற்று மருத்துவம் பார்த்தோம். குணமானது. அந்தத் திருப்பம் எங்கள் அகக்கண்ணைத் திறந்தது. புதிய பாதையைக் காண்பித்தது. வாழ வேண்டிய வாழ்க்கையை வாழாமல் மாற்று வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற புரிதல் வந்தது. 
சென்னை வேலையை உதறிவிட்டு சொந்த ஊரான மதுரைக்கு வந்தோம். வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது? இயந்திர கதியாக வாழ்தல் மட்டும் போதாது... சமூகத்துக்கு பயன்படுகிற மாதிரி வாழ வேண்டும் என்று சிந்தித்த போதுதான் பிளாஸ்டிக் பைகளின் பூதாகரமான வளர்ச்சி மற்றும் அதன் விளைவுகள் புரிந்தது. பிளாஸ்டிக்கை ஒட்டு மொத்தமாகத் தவிர்க்க முடியாது. ஆனால் பயன்படுத்துவதைக் குறைக்கலாம். அதற்கு மஞ்சள் பையின் மகத்துவத்தைக் கையில் எடுத்தோம். 

தமிழ்நாட்டில் துணியால் தயாரிக்கப்படும் மஞ்சள் நிறப் பைகள் அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தம். குறிப்பாக காய்கறி வாங்க வரும் அனைவரின் கையிலும் இந்த மஞ்சள் பை இருக்கும். தமிழர்களின் தனி அடையாளமாக மாறிவிட்ட அந்த மஞ்சள்பை, தமிழர்கள் எங்கு செல்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து பயணித்தது என்றே சொல்லாம். அப்படிப்பட்ட பைகள் தரமான துணியில் தயாரிக்கப்பட்டவை அல்ல. பையின் தையலும் அவசரத் தையலாக இருக்கும் என்பதால் தையல் விட்டுப் போய்விடும். தரமற்ற சாயத்தினால், பைகள் சீக்கிரமே வெளுத்துப் போக... அதை வெளியில் கொண்டு போகவே பலருக்கும் தயக்கம். இதுபோன்ற காரணத்தாலும், பிளாஸ்டிக் பைகளின் ஆக்கிரமிப்பாலும் மஞ்சள் பைகளின் பயன்பாடு குறைந்து மறைந்து போயின.
தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாகி ஓர் அச்சுறுத்தலாக அவதாரம் எடுத்திருப்பதால், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, தரமான துணிப்பைகளைக் கவர்ச்சியான வடிவமைப்பில் மக்களின் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற மாதிரி உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம். வண்ணத் துணிகளை கூடியவரை தவிர்க்கிறோம். ஏனென்றால், துணியில் வண்ணம் ஏற்ற தண்ணீர் அதிகம் செலவாகிறது. சாயக் கழிவுகளும் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்கும். பையில் வாக்கியங்கள், படங்களை ஸ்க்ரீன் பிரிண்டிங் முறையில் அச்சிடுகிறோம். சாமான்கள் வாங்கப் போகும்போது நாமே பையைக் கொண்டு போனால் கடைக்காரர் தரும் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்கலாம். 
ஆரம்பம் ஒரு பிரச்னையாக அமைந்தது. தயாரிக்கும் பைகள் விற்பனையாகுமா என்ற சந்தேகம் உருவானது. தையல் ஆள்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு. எங்களுடன் ஒத்துழைக்க நண்பர்களும் தெரிந்தவர்களும் முன் வந்தார்கள். மூலப் பொருள்களைத் தருபவர்கள், பைகளைத் தயாரிப்பவர்கள், வாங்குபவர்கள் என்று தொழில் ரீதியாக பழகியவர்கள், இப்போது ஒரு குடும்பமாக மாறிவிட்டோம். ரூ.5-லிருந்து ரூ.200, ரூ.300 வரை பைகளைத் தயாரித்து விற்கிறோம். எங்கள் நிறுவனத்தின் பெயர் THE YELLOW BAG. 
தனியார் நிறுவனங்கள் நடத்தும் பயிலரங்குகள், விழாக்கள், வீட்டு சுப நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் ஆர்டர்கள் அதிகமாகக் கிடைக்கும். ஏற்றுமதியும் செய்கிறோம். ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் பைகள் தயாராகின்றன. அதை மூவாயிரமாக அதிகரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். தையல் தெரிந்த பெண்கள், வீட்டிலிருந்தே பைகளைத் தைத்து தருகிறார்கள். சுமார் 30 பெண்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 
அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் ரெக்சின் போன்ற செயற்கை துணியில் தயாரிக்கப்படும் பைகளைப் பயன்படுத்துகிறார்கள். அந்தப் பைகளுக்கும் மாற்றாக பைகளை வடிவமைத்து வருகிறோம். நாங்கள் தயாரிக்கும் துணிப்பையால் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. பை கிழிந்து தூக்கி எரிந்தாலும் மக்கிவிடும். இதைப் புரிந்து கொண்டவர்கள் எங்கள் தயாரிப்புகளை வாங்குகிறார்கள். பொதுமக்களும் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு அடைந்து துணிப்பைக்கு மாறி வருவது எங்களுக்கு உற்சாகம் தருகிறது. 
பிளாஸ்டிக்கின் அபாயத்தை விளக்கும் விதமாக, "பிளாஸ்டிக் பூதம்' என்ற கண்காட்சியையும் அவ்வப்போது நடத்தி வருகிறோம். "நெகிழி பூதம்' என்ற புத்தகத்தையும் கணவருடன் சேர்ந்து எழுதியிருக்கிறேன். மாணவர்கள் மத்தியில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு ஏற்பட பள்ளிகளுக்குச் சென்று கலந்துரையாடியும் வருகிறோம்'' 
என்றார் கெளரி. 
- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com